5 ஓவர்ஸ்.. 6 ரன்கள்.. 4 "மெய்டன்".. 2 விக்கெட்.. இலங்கையை ஒரே ஆளாய் - துவம்சம் செய்த வோக்ஸ்
இங்கிலாந்து: இலங்கை கிரிக்கெட் அணியின் நிலைமை எவ்வளவு மோசமாகிவிட்டது என்பதற்கு இந்த ஒரு பவுலிங்கை கூட சாம்பிளா எடுத்துக்கலாம்.
இங்கிலாந்துக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டிருக்கும் இலங்கை அணி, மிக மோசமாக டி20 தொடரில் தோல்வி அடைந்தது.
இங்கிலாந்தில் 3 டி20 மற்றும் 3 ஒருநாள் போட்டிகள் கொண்ட தொடரில் இலங்கை அணி விளையாடி வருகிறது. இதில், டி20 தொடர் முடிவடைந்துள்ளது.

இலங்கை சோகம்
இலங்கைக்கு எதிரான முதல் டி20 போட்டியில் 8 விக்கெட்டுகள் வித்தியாசத்திலும், 2வது டி20 போட்டியில் 5 விக்கெட்டுகள் வித்தியாசத்திலும், 3வது டி20 போட்டியில் 89 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றிப் பெற்று ஒயிட் வாஷ் செய்தது இங்கிலாந்து. குறிப்பாக, கடைசி டி20 போட்டியில், 180 ரன்கள் இலக்கை துரத்திய இலங்கை, வெறும் 91 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது.

வாஷ் அவுட்
50 ஓவர் உலகக் கோப்பை, டி20 உலகக் கோப்பை என்று இரு உலகக் கோப்பைகளை வென்ற அணி அது. ஜெயசூர்யா, அரவிந்த டி சில்வா, அர்ஜுனா ரணதுங்கா, அட்டப்பட்டு, சங்கக்காரா, ஜெயவர்த்தனே, சமிந்தா வாஸ், முரளிதரன் என்று மாபெரும் லெஜெண்ட்களை கொண்டு, உலக அணிகளை மிரட்டி வந்த இலங்கையின் நிலைமை இன்று எவ்வளவு மோசமாக செல்ல முடியுமோ அவ்வளவு மோசமாக சென்றுவிட்டது. கடந்த 5 ஆண்டுகளில் அவர்கள் கைப்பற்றிய கோப்பைகளை விரல்விட்டு எண்ணிவிடலாம். 2014க்கு பிறகு, கடந்த 6 ஆண்டுகளாக அவர்கள் எந்த ஐசிசி கோப்பைகளையும் வெல்லவில்லை. சமீபத்தில் வங்கதேசம் சென்று அந்த அணிக்கு எதிராக கூட தொடரை இழந்த இலங்கை, இப்போது இங்கிலாந்துக்கு எதிராக வாஷ் அவுட் ஆகியிருக்கிறது.

இக்கட்டான நிலைமை
இந்நிலையில், அதிருப்தியின் உச்சிக்கே சென்ற இலங்கை ரசிகர்கள், ஏமாற்றம் காரணமாக தங்கள் கிரிக்கெட் வீரர்களை சமூக ஊடகங்களில் Unfollow செய்வதற்கான பிரச்சாரத்தை தொடங்கியிருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியது. தங்கள் சொந்த நாட்டின் வீரர்களை பின்தொடர்வதை நிறுத்தப்போகிறோம் என்று பிரச்சாரம் செய்து வருகின்றனர். இங்கிலாந்தில் ஏற்பட்ட படுதோல்வியை அடுத்து, முன்னாள் இலங்கை அதிரடி வீரர் சனத் ஜெயசூர்யா தனது ட்விட்டரில், "இலங்கை கிரிக்கெட்டுக்கு மிக மோசமான நாள். நிலைமை மிகவும் இக்கட்டான நிலைமைக்கு சென்றுவிட்டது. இலங்கை கிரிக்கெட்டை காப்பாற்ற, நாம் உடனடி நடவடிக்கைகளை எடுக்க வேண்டும்" என்று தெரிவித்திருந்தார்.

4 மெய்டன் ஓவர்ஸ்
இந்நிலையில், இன்று இங்கிலாந்து, இலங்கை அணிகளுக்கு இடையேயான முதல் ஒருநாள் போட்டி செஸ்டர்-லே-ஸ்ட்ரீட்டில் நடந்து வருகிறது. இதில் டாஸ் வென்ற இங்கிலாந்து ஃபீல்டிங்கை தேர்வு செய்தது. ஆனால், ஆட்டம் தொடங்கிய சில நிமிடங்களிலேயே இலங்கையின் விக்கெட்டுகள் அடுத்தடுத்து விழுந்தன. குறிப்பாக, 5 ஓவர்கள் வீசிய க்றிஸ் வோக்ஸ் வெறும் 6 ரன்கள் மட்டும் விட்டுக் கொடுத்து 2 விக்கெட்டுகளை கைப்பற்றினார். இதில், 4 மெய்டன் ஓவர்களும் அடக்கம். குறிப்பாக, இப்போட்டியில் தனது 150வது ஒருநாள் கிரிக்கெட் விக்கெட்டையும் வோக்ஸ் கைப்பற்றி இருக்கிறார்.


Click it and Unblock the Notifications