வீடியோ - ஒரே ஓவரில் 6 சிக்சர்.. பிசிசிஐ நடத்திய தொடரில் ஆந்திர வீரர் சாதனை.. 64 பந்தில் 110 ரன்கள்
Vamshi Krishna : பிசிசிஐ நடத்தும் 23 வயதுக்குட்பட்டவர்களுக்கான நான்கு நாள் டெஸ்ட் போட்டி தான் சிகே நாயுடு கோப்பை ஆகும். இந்த தொடர் தற்போது இந்தியா முழுவதும் உள்ள நகரங்களில் நடைபெற்று வருகிறது. இதில் ரயில்வே அணியுடன் ஆந்திரா அணி பல பரிட்சை நடத்தியது.
இதில் டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்த ஆந்திரா அணி வீரர்கள் பொறுப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினர். தொடக்க வீரர் நிகிலேஷ்வர் 20 ரன்கள் எடுத்திருந்த நிலையில் வம்சி கிருஷ்ணா அதிரடியாக விளையாடி ரன்களை சேர்த்து வந்தார்.

அப்போது ரயில்வே அணியை சேர்ந்த டமாண்தீப் சிங் வீசிய ஒரே ஓவரில் வம்சி கிருஷ்ணா தொடர்ந்து ஆறு சிக்ஸர்களை விளாசி சாதனை படைத்தார். ஒவ்வொரு ஷாட்டையும் கணித்து அவர் அபாரமாக விளையாடி இந்த சாதனையை பதிவு செய்தார். இதன் மூலம் 64 பந்துகளில் வம்சி கிருஷ்ணா 110 ரன்கள் சேர்த்தார். இதில் ஒன்பது பவுண்டரிகளும் 10 சிக்ஸர்களும் அடங்கும்.
இதேபோன்று வெங்கட ராகுல் 66 ரன்கள் எடுக்க வம்சி கிருஷ்ணா என்ற பெயரில் மற்றொரு வீரர் 55 ரன்கள் எடுத்தார். இதன் மூலம் ஆந்திரா அணி 378 ரன்கள் எடுத்து அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது. இதனை அடுத்து ரயில்வே அணி அபாரமாக விளையாடி பதிலடி கொடுத்தது. அந்த அணியின் அன்ஷ் யாதவ் மற்றும் ரவி சிங் ஆகியோர் அபாரமாக விளையாடி இருவரும் இரட்டை சதம் அடித்தனர்.
இதனால் ரயில்வே அணி 9 விக்கெட் இழப்பிற்கு 865 ரன்கள் குவித்தது. மொத்தம் 231ஓவர்களை ரயில்வே அணி பிடித்தார்கள். இதன் மூலம் முதல் இன்னிங்ஸில் அதிக ரன்கள் எடுத்த அணி என்ற அடிப்படையில் ரயில்வே வெற்றி பெற்றது. இதேபோன்று திருவனந்தபுரத்தில் நடைபெற்ற கேரளா அணிக்கு எதிரான நான்கு நாள் டெஸ்ட் போட்டியில் தமிழக அணி ஒரு இன்னிங்ஸ் மற்றும் 84 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.கேரளா அணி முதல் இன்னிங்ஸில் 133 ரன்கள் எடுத்த நிலையில் தமிழக அணி 311 ரன்கள் குவித்தது. இதனை அடுத்து இரண்டாவது இன்னிங்ஸில் கேரள அணி 94 ரன்களில் அனைத்து விக்கெட்களையும் இழந்தது.


Click it and Unblock the Notifications