மும்பை: கிரிக்கெட்டுக்காக நீங்கள் செய்த அனைத்திற்கும் நன்றி என்று ஓய்வு பெற்றுள்ள இலங்கை வீரர் மலிங்காவுக்கு, பும்ரா நன்றி தெரிவித்துள்ளார்.
இலங்கை முன்னணி வேகப்பந்து வீச்சாளரும், யார்க்கர் மன்னருமான மலிங்கா, வங்கதேச அணிக்கு எதிரான போட்டியுடன், சர்வதேச ஒருநாள் கிரிக்கெட் போட்டியிலிருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்தார். அந்த போட்டியில் இலங்கை, வங்க தேசத்தை வீழ்த்தியது.

3 விக்கெட்டுகளுடன், கடைசி பந்தில் விக்கெட்டை வீழ்த்திய மகிழ்ச்சியுடன் ஓய்வு பெற்றார் மலிங்கா. இளைஞர்களுக்கு வழிவிடுவதில் மிகவும் மகிழ்ச்சி அடைகிறேன் என்று அவர் கூறினார்.
மலிங்கா ஒய்வு பெறுவது குறித்து இந்திய வேகப் பந்துவீச்சாளர் பும்ரா தனது ட்விட்டர் பக்கத்தில் நன்றி பாராட்டி உள்ளார். அதில் அவர் கூறியிருப்பதாவது: கிளாசிக் மலி...!! ஸ்பெல் கொடுத்ததற்கு மிக்க நன்றி. நான் எப்போதும் உங்களின் பந்துவீச்சை பார்த்து ஆச்சரியப்பட்டதுண்டு.
அந்த ஆச்சரியம் எப்போதுமே தொடரும். கிரிக்கெட்டுக்கு நீங்கள் செய்த அனைத்திற்கும் நன்றி. உங்களை முன்மாதிரியாக எப்போது ஏற்றுக் கொண்டு இருக்கிறேன்... அதனை தொடருவேன் என்று பதிவிட்டுள்ளார். இதேபோன்று பலரும் மலிங்காவுக்கு தொடர்ந்து வாழ்த்துகளை தெரிவித்து வருகின்றனர்.