பிரெஞ்சு ஓபனில் மாபெரும் வரலாறு படைத்த கோகோ காஃப்.. நம்பர் 1 வீராங்கனை சபலென்கா அதிர்ச்சி தோல்வி
பாரிஸ்: பிரெஞ்சு ஓபன் டென்னிஸ் தொடரின் மகளிர் ஒற்றையர் இறுதிப் போட்டியில், அமெரிக்காவின் கோகோ காஃப் (21), உலக நம்பர் 1 வீராங்கனையும், டாப் சீட் (seed) வீராங்கனையுமான அரினா சபலென்காவை 6-7 (5), 6-2, 6-4 என்ற செட் கணக்கில் வீழ்த்தி தனது முதல் பிரெஞ்சு ஓபன் பட்டத்தை வென்றார். இந்த இறுதிப் போட்டி வெற்றியின் மூலம், காஃப் தனது இரண்டாவது கிராண்ட் ஸ்லாம் பட்டத்தை வென்றுள்ளார்.
2022ஆம் ஆண்டு பிரெஞ்சு ஓபன் இறுதிப் போட்டியில் அப்போதைய உலக நம்பர் 1 வீராங்கனை இகா ஸ்வியாடெக்கிடம் தோல்வியடைந்து இருந்தார் 18 வயது கோகோ காஃப். இந்த முறை எந்தத் தவறும் செய்யாமல், மற்றொரு முதல் தரவரிசை வீராங்கனையான அரினாவை வீழ்த்தி கிராண்ட் ஸ்லாம் பட்டத்தை வென்றார்.

இது 2023ஆம் ஆண்டு யுஎஸ் ஓபன் பட்டத்திற்குப் பிறகு காஃப் வெல்லும் இரண்டாவது கிராண்ட் ஸ்லாம் பட்டமாகும். இந்த வெற்றி, கடந்த யுஎஸ் ஓபன் இறுதிப் போட்டியின் மறுபோட்டியாக அமைந்தது. அப்போதும் கோகோ காஃப் சபலென்காவை வீழ்த்தி சாம்பியன் பட்டம் வென்று இருந்தார். இந்த முறை சபலென்காவுக்கு பழிவாங்கும் வாய்ப்பு கிடைக்கவில்லை.
அதே சமயம் இந்த வருட தொடக்கத்தில் மாட்ரிட் ஓபன் இறுதிப் போட்டியில் சபலென்காவிடம் நேர் செட்களில் அடைந்த தோல்விக்கும் காஃப் பழி தீர்த்துக் கொண்டார். இந்த வெற்றியின் மூலம், WTA டூரில் சபலென்கா உடனான நேருக்கு நேர் மோதலில் காஃப் 6-5 என்ற கணக்கில் முன்னிலை பெற்றுள்ளார். இந்த சீசனில் ரோமன் மற்றும் மாட்ரிட் ஆகிய இரண்டு களிமண் மைதான இறுதிப் போட்டிகளிலும் தோல்வியடைந்த அமெரிக்க வீராங்கனை கோகோ காஃப், மூன்றாவது முயற்சியில் களிமண் மைதானத்தில் நடந்த பிரெஞ்சு ஓபன் தொடரில் பட்டம் வென்று இருக்கிறார்.
நாளை பிரெஞ்சு ஓபன் ஆடவர் ஒற்றையர் பிரிவு இறுதிப் போட்டி நடைபெற உள்ளது. அதில் கார்லோஸ் அல்கராஸ் மற்றும் ஜன்னிக் சின்னர் மோத உள்ளனர். நோவக் ஜோகோவிக் அரையிறுதியில் சின்னரிடம் தோல்வி அடைந்து வெளியேறினார்.


Click it and Unblock the Notifications