அட, இதே நாளில்தான் முதல் பகல் இரவு ஒரு நாள் போட்டியும் நடந்துச்சாம்ப்பா...!
அடிலைட்: டெஸ்ட் வரலாற்றிலேயே முதல் முறையாக பகல் இரவு டெஸ்ட் போட்டி இன்று ஆஸ்திரேலியா -நியூசிலாந்து இடையே தொடங்கி புதிய சரித்திரம் படைத்துள்ளது. ஆனால் இதே நாளில்தான் முதலாவது பகல் இரவு ஒரு நாள் போட்டியும் ஆஸ்திரேலியாவில் நடந்தது ஆச்சரியகரமான ஒரு ஒற்றுமையாகும்.
முதல் பகல் இரவு ஒரு நாள் போட்டி நடந்த அதே நாளில் முதல் பகல் இரவு டெஸ்ட் போட்டியும் நடைபெறுவது ரசிகர்களை குஷிப்படுத்தியுள்ளது.
138 ஆண்டு கால டெஸ்ட் வரலாற்றில் இப்போதுதான் முதல் முறையாக பகல் இரவு டெஸ்ட் போட்டி நடைபெறுகிறது. அந்த வரலாற்று நிகழ்வை அடிலைட் மைதானம் பதிவு செய்துள்ளது.

சிட்னியில் ஒரு நாள் வரலாறு
அதேசமயம், இதே ஆஸ்திரேலியாவில் இதே நவம்பர் 27ம் தேதி, ஆனஆல் 1979ம் ஆண்டு இன்னொரு வரலாறு படைக்கப்பட்டது. ஆம், அன்றுதான் முதல் பகல் இரவு ஒரு நாள் போட்டி நடைபெற்றது. சிட்னியில் அந்த போட்டி நடந்தது.

ஆஸ்திரேலியா - மேற்கு இந்தியத் தீவுகள்
அந்த சகாப்தம் படைத் போட்டியில் ஆஸ்திரேலியாவும், மேற்கு இந்தியத் தீவுகள் அணியும் மோதின. அந்த வகையில் ஆஸ்திரேலியா இரு வரலாறுகளில் இடம் பெற்று விட்டது.

ஒரு நாளில் வெற்றி
முதல் பகல் இரவு ஒரு நாள் போட்டியில் ஆஸ்திரேலியா அணி 5 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்று அசத்தியது. அந்த அணியின் கேப்டன் கிரெக் சேப்பல் பகல் இரவு ஒரு நாள் போட்டிகளில் முதல் அரை சதத்தை எடுத்து சாதனை படைத்தார்.

கிளைவ் லாயிட்
இந்த வரலாற்று நிகழ்வில் மேற்கு இந்தியத் தீவுகள் அணியின் ஜாம்பவான் கிளைவ் லாயிட் பெயரும் நீக்கமற சேர்ந்துள்ளது. காரணம், அவர்தான் அப்போது அணியின் கேப்டனாக இருந்தவர்.

டெஸ்ட் வெற்றி யாருக்கோ!
முதல் பகல் இரவு ஒரு நாள் போட்டியில் ஆஸ்திரேலியா வென்றது. தற்போது முதல் பகல் இரவு டெஸ்ட் போட்டியில் வெல்லப் போவது யாரோ...!


Click it and Unblock the Notifications