லண்டன்: இங்கிலாந்து டெஸ்ட் அணியின் கேப்டன் அலிஸ்டைர் குக், சச்சின் டெண்டுல்கரின் சாதனை ஒன்றை முறியடிக்கவுள்ளார்.
குறைந்த வயதில் டெஸ்ட் போட்டிகளில் 10,000 ரன்கள் குவித்த சாதனைதான் அது. கடந்த டிசம்பர் மாதம் 31 வயதை தொட்ட குக் தற்போது 9964 டெஸ்ட் ரன்களுடன் உள்ளார். இதில் 28 சதம், 47 அரை சதங்கள் அடக்கம்.

இன்னும் 36 ரன்களை எடுத்தால் சச்சின் சாதனையை குக் முறியடிப்பார். சச்சின் டெஸ்ட் போட்டிகளில் 10,000 ரன்களைத் தொட்டபோது அவரது வயது 31 வருடம் 10 மாதமாக இருந்தது. இந்த சாதனையை அவர் கடந்த 2005ம் ஆண்டு மார்ச் மாதம் கொல்கத்தாவில் வைத்து பாகிஸ்தானுக்கு எதிராக நிகழ்த்தியிருந்தார்.
அந்தப் போட்டியில் இரு இன்னிங்ஸ்களிலும் சச்சின் தலா 52 ரன்களை எடுத்தார் என்பது குறிப்பிடத்தக்கது. அப்போட்டியில் கேப்டன் ராகுல் டிராவிட் பிரமித்தக்க வகையில் ஆடி இரு சதங்களைப் போட்டிருந்தார். அப்போட்டியில் இன்சமாம் உல் ஹக் தலைமையிலான பாகிஸ்தானை இந்தியா 195 ரன்கள் வித்தியாசத்தில் தோற்கடித்தது.
மே 19ம் தேதி இலங்கைக்கு எதிரான 3 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் இங்கிலாந்து ஆடவுள்ளது. முதல் போட்டி லீட்ஸ் மைதானத்தில் நடைபெறும். அந்தப் போட்டியில் சச்சின் சாதனையை குக் முறியடிப்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அந்தப் போட்டியின்போது குக்குக்கு வயது 31 வருடம் 5 மாதமாக இருக்கும்.
குக் சமீப காலமாக பிரமாதமாக ஆடி வருகிறார். கடந்த நான்கு முதல் தர போட்டிகளில் அவர் 3 சதங்களை விளாசியுள்ளார். எனவே லீட்ஸ் போட்டியிலேயே அவர் சச்சின் சாதனையை முறியடிப்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.