கொச்சி:தமிழ் சினிமாவின் சூப்பர் ஸ்டார் ஆன நடிகர் ரஜினிகாந்தின் புதிய திரைப்படம் கூலி வரும் 14ஆம் தேதி உலகம் முழுவதும் ரிலீஸ் ஆகிறது. இதற்கான டிக்கெட் புக்கிங் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. சென்னை உள்ளிட்ட பல்வேறு நகரங்களில் முதல் நாள் டிக்கெட் ஏற்கனவே விற்று தீர்ந்து விட்டது.
தமிழ்நாட்டில் அதிகாலை காட்சிக்கு தடை நீடிப்பதால் பல்வேறு ரசிகர்கள் வெளி மாநிலங்களில் சென்று கூலி திரைப்படத்தை பார்க்க திட்டமிட்டுள்ளனர். பிரபல இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இந்த படத்தை இயக்குவதால் ரசிகர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது.

இந்த நிலையில் நடிகர் ரஜினிகாந்துக்கு பல்வேறு தரப்பினர் ரசிகர்களாக உள்ளனர். பல பாலிவுட் ஸ்டார்களை ரஜினிகாந்தின் ரசிகர்களாக உள்ள நிலையில் பிரபல கிரிக்கெட் வீரர் சஞ்சு சாம்சன், ரஜினிகாந்தின் தீவிர ரசிகர் ஆவார். கேரளாவில் பிறந்து வளர்ந்த சஞ்சு சாம்சன், எப்போதும் ரஜினி படங்களையும் ரஜினி படத்தின் பாடல்களையும் தான் அடிக்கடி விரும்பி பார்ப்பார்.
ரஜினி வசனங்களை ஒன்று விடாமல் மனப்பாடமாக பேசும் பழக்கமும் சஞ்சு சாம்சன் இடம் இருக்கிறது. இந்த நிலையில் கிரிக்கெட் வீரர் அஸ்வின் நடத்திய நேர்காணலில் ரஜினிகாந்த் மீதான அன்பு குறித்து சஞ்சு சாம்சன் பேசியிருக்கிறார். அதில் நான் மிகப்பெரிய ரஜினி ரசிகன். முதல் நாள் அன்றே அவருடைய படத்தை பார்த்து விடுவேன். ஒரு முறை நாங்கள் அயர்லாந்துக்கு கிரிக்கெட் விளையாட சென்றிருந்தோம்.
மறுநாள் எனக்கு கிரிக்கெட் போட்டி இருந்தது. ஆனால் அன்று ரஜினி படம் ரிலீஸ் ஆகி இருந்தது. எனக்கு படத்தை பார்த்தே ஆக வேண்டும் என்பதற்காக நானே தனியாக ஹோட்டலில் விட்டு புறப்பட்டு விட்டேன். டூப்ளினில் திரையரங்கு எங்கு இருக்கிறது என்று தேடி அங்கு ரஜினி படம் ஓடுகிறதா என்பதை கண்டுபிடித்து டிக்கெட் எடுத்து தியேட்டரில் நான் பார்த்து வந்தேன்.
அப்படி என்றால் பார்த்துக் கொள்ளுங்கள். எனக்கு ரஜினி எந்த அளவிற்கு பிடிக்கும் என்று சஞ்சு சாம்சன் கூறியுள்ளார். கூலி படம் தொடர்பான எதிர்பார்த்து ரசிகர்கள் மத்தியில் உள்ள இந்த தருணத்தில் சாம்சன் இருந்த பேட்டி சமூக வலைத்தளத்தில் வைரலாகி வருகிறது.