நார்த் சவுண்ட்: 2024 கரீபியன் பிரீமியர் லீக் தொடரின் இரண்டாவது போட்டியில் ஆன்டிகுவா அண்ட் பார்புடா ஃபால்கான்ஸ் அணியும், கயானா அமேசான் வாரியர்ஸ் அணியும் மோதின. இந்த போட்டியில் கடைசி ஓவரில் கயானா அணி இதயத்துடிப்பை எகிற வைத்து வெற்றி பெற்றது. அந்த அணியின் எட்டாம் வரிசை வீரர் டிவைன் பிரிட்டோரியஸ் கடைசி இரண்டு பந்துகளில் ஒரு ஃபோர் மற்றும் ஒரு சிக்ஸ் அடித்து தனது அணியை வெற்றி பெற வைத்தார்.
இந்தப் போட்டியில் முதலில் பேட்டிங் செய்த ஆன்ட்டிகுவா அணி 20 ஓவர்களில் 6 விக்கெட் இழப்பிற்கு 168 ரன்கள் எடுத்தது. அந்த அணியின் ஃபாக்கர் ஜமான் 33 பந்துகளில் 40 ரன்கள் எடுத்தார். கோஃபி ஜேம்ஸ் 24 பந்துகளில் 37 ரன்கள் எடுத்தார். கடைசி ஓவர்களில் அதிரடி ஆட்டம் ஆடினார் இமாத் வாசிம். அவர் 21 பந்துகளில் 40 ரன்கள் எடுத்திருந்தார். நான்கு ஃபோர் மற்றும் இரண்டு சிக்ஸ் அடித்து இருந்தார்.

20 ஓவர்கள் முடிவில் 168 ரன்கள் எடுத்தது ஆன்ட்டிகுவா அணி. குடகேஷ் மோட்டி கயானா அணியின் பந்துவீச்சில் சிறப்பாக செயல்பட்டு இருந்தார். அவர் 4 ஓவர்களில் 25 ரன்கள் மட்டும் விட்டுக் கொடுத்து 3 விக்கெட்களை வீழ்த்தி இருந்தார். டிவைன் பிரிட்டோரியஸ் நான்கு ஓவர்களில் 33 ரன்கள் விட்டுக் கொடுத்து ஒரு விக்கெட் வீழ்த்தி இருந்தார்.
அடுத்து கயானா அமேசான் வாரியர்ஸ் 169 ரன்கள் என்ற இலக்கை நோக்கி ஆடத் தொடங்கியது. அந்த அணியின் துவக்க வீரர் ரஹ்மானுல்லா குர்பாஸ் 14 பந்துகளில் 20 ரன்கள் எடுத்தார். குடகேஷ் மோட்டி துவக்க வீரராக களம் இறக்கப்பட்டார். அவர் ஆறு ரன்களில் ஆட்டம் இழந்தார். ஷாய் ஹோப் 34 பந்துகளில் 41 ரன்கள் எடுத்தார். அதிரடி வீரர் ஷிம்ரான் ஹெட்மயர் 21 பந்துகளில் 19 ரன்கள் எடுத்து ஏமாற்றம் அளித்தார். ஒரு புறம் விக்கெட்கள் வீழ்ந்த நிலையில் ரொமாரியோ ஷெப்பர்ட் அதிரடி ஆட்டம் ஆடினார். அவர் 16 பந்துகளில் 32 ரன்கள் சேர்த்தார். அவர் நான்கு சிக்ஸ் அடித்து இருந்தது குறிப்பிடத்தக்கது.
19 ஆவது ஓவரில் ரொமாரியோ ஷெப்பர்ட் ஆட்டம் இழந்தார். கடைசி ஓவரில் 16 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற நிலையில் இருந்தது கயானா அணி. அப்போது களத்தில் பந்துவீச்சாளர்களான ஷமர் ஜோசப் மற்றும் டிவைன் பிரிட்டோரியஸ் பேட்டிங் ஆடி வந்தனர். 7 விக்கெட்டுகளை இழந்த நிலையில் கயானா அணி வெற்றி பெறாது என்றே பலரும் எண்ணினர். ஆனால், முகமது ஆமிர் வீசிய கடைசி ஓவரை சந்தித்த பிரிட்டோரியஸ் அபாரமான பேட்டிங் செயல்பாட்டை வெளிப்படுத்தினார்.
அவர் கடைசி ஓவரின் இரண்டாவது மற்றும் மூன்றாவது பந்துகளில் இரண்டு ஃபோர் அடித்தார். நான்காவது பந்தில் ரன் எடுக்கவில்லை. இதை அடுத்து கடைசி இரண்டு பந்துகளில் 8 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற நிலை இருந்தது. பிரிட்டோரியசால் இரண்டு பவுண்டரிகளை அடிக்க முடியாது என்றே பலரும் எண்ணினர். ஆனால், முகமது ஆமிர் வீசிய அந்த கடைசி ஓவரின் கடைசி இரண்டு பந்துகளில் ஒரு ஃபோர் மற்றும் ஒரு சிக்ஸ் அடித்து காயானா அணியை வெற்றி பெற வைத்தார் டிவைன் பிரிட்டோரியஸ். இதை அடுத்து வெற்றி பெற வேண்டிய நிலையில் இருந்த ஆன்ட்டிகுவா அணி 3 விக்கெட் வித்தியாசத்தில் அதிர்ச்சி தோல்வி அடைந்தது.