ட்ரினிடாட்: சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் முன்னாள் வீரர் டிவைன் பிராவோ கரீபியன் பிரீமியர் லீக் டி20 தொடருடன் ஒட்டுமொத்த கிரிக்கெட் போட்டிகளில் இருந்தும் ஓய்வு பெறுவதாக அறிவித்து இருக்கிறார். இதுவே தனது கடைசி தொழில்முறை கிரிக்கெட் தொடர் என அவர் கூறி இருக்கிறார். இந்த ஆண்டுக்கான கரீபியன் பிரீமியர் லீக் தொடரில் அவர் விளையாடி வரும் நிலையில் ஓய்வை அறிவித்து இருக்கிறார்.
ஐபிஎல் தொடரை அடுத்து வெஸ்ட் இண்டீஸ்-இல் நடைபெற்று வந்த கரீபியன் பிரிமியர் லீக் தொடரில் பிராவோ அதிக கவனம் செலுத்தி வந்தார். ஐபிஎல் தொடரில் இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு ஓய்வு பெற்றுவிட்ட பிராவோ, உலகின் பல்வேறு டி20 லீக் தொடர்களில் விளையாடி வந்தார். தற்போது 40 வயதான நிலையில் அவர் கரீபியன் பிரிமியர் லீக் தொடருடன் ஒட்டுமொத்த கிரிக்கெட் போட்டிகளில் இருந்து ஓய்வை அறிவித்து இருக்கிறார்.

தற்போது ஒட்டுமொத்த டி20 போட்டிகளில் அதிக விக்கெட் வீழ்த்திய வீரர்கள் பட்டியலில் டிவைன் பிராவோ முதல் இடத்தில் இருக்கிறார். 578 டி20 போட்டிகளில் விளையாடி இருக்கும் பிராவோ அதில் 543 போட்டிகளில் பந்து வீசி 630 விக்கெட்களை வீழ்த்தி இருக்கிறார். 441 இன்னிங்க்ஸ்களில் பேட்டிங் செய்து 6970 ரன்களும் குவித்து இருக்கிறார். இதன் மூலம் தன்னை சிறந்த டி20 ஆல் ரவுண்டர்களில் ஒருவராக நிரூபித்து இருக்கிறார்.
இது அவருக்கு நெகிழ்ச்சியான தருணமாகவும் அமைந்தது. தனது சொந்த மண்ணில் நடைபெறும் கரீபியன் பிரீமியர் லீக் டி20 தொடரில் தனது மக்கள் முன் ஓய்வு பெற இருக்கிறார் என்பது நெகிழ்ச்சியான தருணமாக அமைந்து இருக்கிறது. சுமார் 11 சீசன்களாக இந்த தொடரில் அவர் பங்கேற்று வருகிறார். தனது ஓய்வு குறித்து அவர் பேசுகையில், "இது ஒரு சிறந்த பயணமாக இருந்தது. எனது கரீபியன் மக்கள் முன் நான் எனது கடைசி தொழில்முறை கிரிக்கெட் தொடரில் விளையாட இருக்கிறேன். ட்ரின்பாகோ நைட் ரைடர்ஸ் அணியில் தான் என் பயணம் துவங்கியது. அதே அணியுடன் எனது பயணம் முடிய உள்ளது" என குறிப்பிட்டார்.
அவர் இந்த தொடரில் இதுவரை இரண்டு அணிகளில் விளையாடியிருக்கிறார். செயின்ட் கிட்ஸ் அண்ட் நெவிஸ் பேட்ரியாட்ஸ் அணிக்காக இரண்டு ஆண்டுகள் மட்டும் விளையாடிய அவர், டிரின்பாகோ நைட் ரைடர்ஸ் அணிக்காக ஒன்பது ஆண்டுகள் விளையாடி இருக்கிறார். அதில் ஐந்து முறை கோப்பையையும் வென்று இருக்கிறார். மூன்று முறை கேப்டனாக அந்த அணிக்கு கோப்பை வென்று கொடுத்திருக்கிறார் பிராவோ.
அது மட்டும் இன்றி இந்த தொடரில் அதிக விக்கெட் வீழ்த்திய பந்துவீச்சாளராகவும் இருக்கிறார். மொத்தம் 103 கரீபியன் பிரிமியர் லீக் போட்டிகளில் விளையாடி 1155 ரன்கள் மற்றும் 128 விக்கெட்களும் வீழ்த்தி இருக்கிறார். இந்த சீசனில் அவர் விளையாட இருக்கும் நிலையில் மேலும் விக்கெட்டுகளை வீழ்த்துவார் என எதிர்பார்க்கப்படுகிறது.
தற்போது கிரிக்கெட் விளையாடி வரும் அதே வேளையில் அவர் பயிற்சியாளராகவும் செயல்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது. சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் பந்து வீச்சு பயிற்சியாளராக இருக்கிறார். மேலும், கடந்த 2024 டி20 உலகக் கோப்பையில் ஆப்கானிஸ்தான் அணியின் ஆலோசகராக செயல்பட்டு அந்த அணி சூப்பர் 8 சுற்று வரை முன்னேற முக்கிய காரணமாக இருந்தார். அவர் இனி உலகின் பல்வேறு டி20 லீக் அணிகளுக்கு பவுலிங் பயிற்சியாளராக செயல்படுவார் என எதிர்பார்க்கப்படுகிறது.