மும்பை: வெஸ்ட் இண்டீஸ் கிரிக்கெட் வீரர் நிக்கோலஸ் பூரன் இதுவரை டி20 கிரிக்கெட் வரலாற்றிலேயே எந்த ஒரு வீரரும் செய்யாத பிரம்மாண்ட சிக்ஸர் சாதனையை செய்து இருக்கிறார். 2024 ஆம் ஆண்டு இதுவரை 151 சிக்ஸ் அடித்து இருக்கிறார் நிக்கோலஸ் பூரன். இதன் மூலம் டி20 போட்டிகளில் ஒரே ஆண்டில் 150 சிக்ஸ் அடித்த ஒரே வீரர் என்ற இமாலய சாதனையை செய்து இருக்கிறார்.
இதற்கு முன் கிறிஸ் கெயில் அதிகபட்சமாக 2015ஆம் ஆண்டு 36 டி20 இன்னிங்ஸ்களில் 135 சிக்ஸ் அடித்து இருந்தார். அந்த சாதனையை நிக்கோலஸ் பூரன் சில நாட்களுக்கு முன் முறியடித்து இருந்தார். தற்போது 150 சிக்ஸ் வரை அடித்து பிரம்மாண்ட மைல்கல் சாதனையை செய்து இருக்கிறார்.

தற்போது நடந்து வரும் கரீபியன் பிரிமியர் லீக் தொடரில் அவர் ட்ரின்பாகோ நைட் ரைடர்ஸ் அணிக்காக அதிரடியாக ஆடி ரன் குவித்து வருகிறார். இதுவரை ஏழு போட்டிகளில் 275 ரன்கள் சேர்த்துள்ளார். நேற்று நடந்த பேட்ரியாட்ஸ் அணிக்கு எதிரான போட்டியில் 43 பந்துகளில் 93 ரன்கள் சேர்த்தார். அந்த இன்னிங்ஸில் மட்டும் பூரன் ஏழு சிக்ஸ் அடித்து இருந்தார்.
இத்துடன் சேர்த்து 2024 கரீபியன் பிரிமியர் லீக் தொடரில் 21 சிக்ஸ் அடித்து இருக்கிறார். மொத்தமாக 2024ஆம் ஆண்டில் 64 இன்னிங்ஸ்களில் 151 சிக்ஸ் அடித்து இருக்கிறார். இதைத் தவிர ஒரே ஆண்டில் அதிக டி20 ரன் குவித்த வீரர்கள் பட்டியலில் இரண்டாவது இடத்தையும் பிடித்து இருக்கிறார். 2022 ஆம் ஆண்டு இங்கிலாந்து வீரர் அலெக்ஸ் ஹேல்ஸ் 61 இன்னிங்ஸ்களில் 1946 ரன்கள் சேர்த்து இருந்தார்.
அந்த சாதனையை முறியடித்து இருக்கும் நிக்கோலஸ் பூரன் 2024 ஆம் ஆண்டில் இதுவரை 64 இன்னிங்ஸ்களில் 2022 ரன்கள் சேர்த்து இருக்கிறார். இந்த பட்டியலில் பாகிஸ்தான் அணியின் முகமது ரிஸ்வான் முதல் இடத்தில் இருக்கிறார். அவர் 2021 ஆம் ஆண்டு 48 இன்னிங்ஸ்களில் 2036 ரன்கள் சேர்த்து இருந்தார். நிக்கோலஸ் பூரன் இந்த ஆண்டு மேலும் பல டி20 போட்டிகளில் ஆட உள்ளார் என்பதால் அந்த சாதனையையும் முறியடிக்க அதிக வாய்ப்பு உள்ளது.