ஒற்றை கையில் மிரட்டல் கேட்ச் பிடித்துவிட்டு நம்பவே முடியாமல் நின்ற கிளென் பிலிப்ஸ்.. ஏமாந்த நரைன்
டிரினிடாட்: 2026 கரீபியன் பிரீமியர் லீக் (சிபிஎல்) டி20 தொடரில், டிரினிடாட் அண்ட் டொபாகோ நைட் ரைடர்ஸ் மற்றும் கயானா அமேசான் வாரியர்ஸ் அணிகளுக்கு இடையிலான ஆட்டத்தில் நியூசிலாந்து ஆல்-ரவுண்டர் கிளென் பிலிப்ஸ் ஒற்றை கையில் பிடித்த மிரட்டல் கேட்ச் சமூக வலைதளங்களில் பரவி வருகிறது.
தற்போது உள்ள கிரிக்கெட் வீரர்களில் கிளென் பிலிப்ஸ் ஃபீல்டிங்கில் சூப்பர் மேனாக பாய்ந்து பந்தை தடுப்பது, கேட்ச் பிடிப்பது என வியக்க வைத்து வருகிறார். இந்தப் போட்டியிலும் அது போன்ற ஒரு சம்பவத்தை செய்து விட்டு தன்னை தானே நம்பாமல் நின்றார்.

முன்னதாக, ஆட்டம் தொடங்குவதற்கு முன் மழை பெய்ததால் போட்டி 90 நிமிடங்களுக்கும் மேலாக தாமதமானது. பின்னர் இந்தப் போட்டி 16 ஓவர்களாகக் குறைக்கப்பட்டது. முதலில் பேட்டிங் செய்த கயானா அணி 5 விக்கெட் இழப்பிற்கு 185 ரன்கள் குவித்தது. கயானா அணியின் அதிரடி பேட்டர் ஷிம்ரான் ஹெட்மயர் வெறும் 40 பந்துகளில் சதம் விளாசி அசத்தினார். இது சிபிஎல் தொடரில் அவரது 2-வது சதமாகும். அவருக்கு ஆதரவாக ரொமாரியோ ஷெப்பர்டும் அதிரடி ஆட்டம் ஆடினார். இதை அடுத்து, டக்வொர்த் லூயிஸ் முறைப்படி டிரினிடாட் அணிக்கு 16 ஓவர்களில் 182 ரன்கள் இலக்காக நிர்ணயிக்கப்பட்டது.
கடினமான இலக்கை நோக்கி விளையாடிய டிரினிடாட் அணியின் தொடக்க வீரர் சுனில் நரைன், டுவைன் பிரிட்டோரியஸ் வீசிய பந்தை லெக் சைடில் தூக்கி அடித்தார். பவுண்டரி எல்லையில் டீப் ஸ்கொயர் லெக் திசையில் நின்றிருந்த கிளென் பிலிப்ஸ், வலதுபுறமாக வேகமாக ஓடிவந்து, பாய்ந்து ஒற்றை கையில் பந்தைப் பிடித்து அசத்தினார். இந்த கேட்ச்சை அவரே நம்ப முடியாமல், "இது கேட்ச் ஆகி விட்டதா?" என சிரித்தபடி நின்றார். இதனால் நரைன் 1 ரன்னில் வெளியேறினார்.
இதன்பின் நிக்கோலஸ் பூரன் அதிரடியாக விளையாடினாலும், முகமது நபி 3 விக்கெட்டுகளை வீழ்த்தி ஆட்டத்தின் போக்கை மாற்றினார். இம்ரான் தாஹிர் தனது சுழலில் ஜஸ்டின் கிரீவ்ஸை எல்பிடபிள்யூ முறையில் வீழ்த்தினார். பூரன் அவுட் ஆன பிறகு அலெக்ஸ் ஹேல்ஸ் மற்றும் அகீல் ஹொசைன் ஜோடி 6-வது விக்கெட்டுக்கு 43 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்து அணியை மீட்டெடுக்க முயன்றனர்.
பின்னர் அலெக்ஸ் ஹேல்ஸ் 23 பந்துகளில் 50 ரன்களும், ஜோசுவா டா சில்வா கடைசி நேரத்தில் பவுண்டரிகளும் அடித்து போராடினர். ஆனாலும், டிரினிடாட் அணியால் 16 ஓவர்களில் இலக்கை எட்ட முடியவில்லை. இறுதியாக கயானா அமேசான் வாரியர்ஸ் அணி 9 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. பிலிப்ஸின் இந்த அசாத்திய கேட்ச் போட்டியின் திருப்புமுனையாக அமைந்தது.


Click it and Unblock the Notifications

