கிரிக்கெட் சூதாட்டம்-ஐசிசி கண்காணிப்பு வளையத்தில் இலங்கை வீரர் தில்ஷன்

இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள பாகிஸ்தான் கிரிக்கெட் வீரர்கள் 3 பேர் சூதாட்ட சர்ச்சையில் சிக்கி தற்காலிகமாக சஸ்பென்ட் ஆகியுள்ளனர். இந்த நிலையில் இலங்கையைச் சேர்ந்த வீரர் ஒருவரும் சூதாட்டக்காரர்களுடன் தொடர்பு வைத்திருப்பதாக சர்ச்சை எழுந்தது.
குறிப்பிட்ட அந்த வீரர் அடிக்கடி இரவு விருந்துகளுக்குச் செல்வதாகவும், அங்கு சூதாட்ட புக்கி ஒருவரை சந்திப்பதாகவும், அந்த அணியின் சக வீரர்கள், கேப்டன் சங்கக்காராவிடம் கூறினராம். இதையடுத்து சங்கக்காரா கிரிக்கெட் வாரியத்தை உஷார்படுத்தியுள்ளார். இந்த விவகாரத்தை ஐசிசியும் விசாரித்துள்ளது. இந்த விவரங்கள் அனைத்தையும் இலங்கை கிரிக்கெட் வாரியம் ரகசியமாக வைத்திருந்தது.
குறிப்பிட்ட வீரரை ஐசிசி கண்காணித்து வருவதாகவும் செய்திகள் கூறின. யார் எந்த வீரர் என்பது தெரியாமல் இருந்து வந்தது. தற்போது அந்த கருப்பு ஆடு யார் என்பது தெரிய வந்துள்ளது. அவர் இலங்கை அணியின் அதிரடி வீரரான தில்ஷன் ஆவார்.
இவர் சமீப காலமாக அதிரடியாக ஆடி வருகிறார். தொடர்ந்து ரன்களைக் குவித்துக் கொண்டிருக்கிறார். இவரது ஆட்டத்தால் இலங்கை அணி பல போட்டிகளில் வென்றது. ஆனால் இவர் சூதாட்ட புக்கிகளுடன் தொடர்புடையவர் என்ற தகவல் வெளியாகியுள்ளதால் இவரது மொத்த ஆட்டமும் சந்தேகத்திற்கிடமாக மாறியுள்ளது.
இந்த தில்ஷன்தான், ஷேவாக் 99 ரன்களுடன் இருந்தபோது அவரை சதம் அடிக்க விடாமல் நோ பால் போடுமாறு சுழற்பந்து வீச்சாளர் சூரஜ் ரந்தீவை தூண்டி விட்டவர் என்பது குறிப்பிடத்தக்கது. பாகிஸ்தான் சூதாட்ட சர்ச்சை எழுந்தபோதே, இந்தியா, இலங்கை இடையிலான இந்தப் போட்டியிலும் இலங்கை வீரர்கள் ஸ்பாட் பிக்ஸிங்கில் ஈடுபட்டிருக்கலாம் என சந்தேகங்கள் எழுந்தன என்பது குறிப்பிடத்தக்கது. தற்போது தில்ஷன் ஐசிசியின் கண்காணிப்பு வளையத்தின் கீழ் வந்துள்ளதால் இந்த சந்தேகம் மேலும் வலுத்துள்ளது.
தில்ஷனை ஐசிசியின் ஊழல் தடுப்புப் பிரிவு தனது கண்காணிப்பு வளையத்தின் கீழ் கொண்டுள்ளது. அவர் ஆடும் போட்டிகள் உன்னிப்பாக கவனிக்கப்பட்டு வருகின்றன.
கடந்த ஆண்டு லண்டன் இரவு விடுதியில் புக்கி ஒருவருடன் தில்ஷன் நீண்ட நேரம் பேசியுள்ளாராம். இதையடுத்தே ஐசிசி தில்ஷனை தீவிரமாக கண்காணிக்க ஆரம்பித்துள்ளதாம்.
மேலும் கடந்த ஆண்டு ஜூன் மாதம் இங்கிலாந்தில் நடந்த டுவென்டி 20 உலகக் கோப்பைப் போட்டியில் தில்ஷன் செயல்பட்ட விதம் குறித்தும் விசாரிக்கப்பட்டு வருவதாக லண்டனைச் சேர்ந்த டெய்லி மெயில் செய்தி வெளியிட்டுள்ளது.
Story first published: Wednesday, December 7, 2011, 18:41 [IST]
Other articles published on Dec 7, 2011


Click it and Unblock the Notifications