பாக். ஆடும் அனைத்துப் போட்டிகளுமே பிக்ஸ் செய்யப்படுகின்றன-யாசிர் ஹமீத் அதிரடி பேட்டி

பாகிஸ்தான் கிரிக்கெட் வீரர்கள் மேற்கொண்ட ஸ்பாட் பிக்ஸிங் ஊழலை அம்பலப்படுத்திய நியூஸ் ஆப் தி வேர்ல்ட இதழ் அடுத்த அதிரடியாக பாகிஸ்தான் அணியின் முக்கிய வீரர்களில் ஒருவரான யாசிர் ஹமீதின் பேட்டியை ஒளிபரப்பை பரபரப்பை கூட்டியுள்ளது.
யாசிர் அகமதுவின் வீடியோ பேட்டியை அது தற்போது வெளியிட்டுள்ளது. அதில், தனது அணியில் நிறைய வீரர்கள் சூதாட்டத்தில் ஈடுபடுவதாக கூறியுள்ளார் ஹமீத். சர்ச்சைக்குரிய லார்ட்ஸ் டெஸ்ட் போட்டியில் ஹமீதும் ஆடியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
ஹமீத் அளித்துள்ள வீடியோ பேட்டியில் கூறியிருப்பதாவது...
எனது சக வீரர்களில் பலரும் சூதாட்டத்தில் ஈடுபடுபவர்கள்தான். கிட்டத்தட்ட ஒவ்வொரு போட்டியுமே முன்கூட்டியே பிக்ஸ் செய்யப்படுபவைதான். ஒரு நோ பால் போடுவதற்கு 20 ஆயிரம் முதல் 25 ஆயிரம் பவுண்டுகள் வரை பணம் வாங்குகின்றனர்.
இப்போது அவர்கள் சிக்கியுள்ளனர். ஆனால் இப்போதுதான் சிக்கியுள்ளனர். இதற்கு முன்பு வரை அவர்கள் பிக்ஸிங்கில் சர்வ சாதாரணாக ஈடுபட்டு வந்தனர். அவர்கள் சிக்கியதுசரிதான். கடவுள்சரியான தண்டனையைத்தான் கொடுத்துள்ளார். ஸ்காட்லாந்து யார்டு போலீஸாரும் இவர்களை கண்காணித்து வந்தனர் என்பது எனக்குத் தெரியும், ஆனால் அவர்களுக்குத் தெரியாது.
நான் நாட்டுக்காக விளையாடுகிறேன், உண்மையாக விளையாடுகிறேன், வெற்றிக்காக ஆடுகிறேன். ஆனால் அவர்களோ சர்வ சாதாரணமாக தோல்வியுற்று வருவார்கள். இது என்னைக் கோப்படுத்துகிறது.
அவர்களுடன் நான் சேருவதில்லை. இதனால்தான் நான் முன்பு அணியிலிருந்து நீக்கப்பட்டேன். அவர்களுடன் கூட்டு சேர மறுத்ததால் என்னை நீக்க வைத்து விட்டனர்.
இதற்கு முன்பு ஐசிசி சாம்பியன் டிராபி போட்டியிலும் கூட பிக்ஸிங் நடந்தது. அந்தப் போட்டியில் பாகிஸ்தான் அணி வேண்டும் என்றே மோசமாக ஆடித்தோற்றது என்று கூறியுள்ளார் ஹமீத்.
சர்ச்சைக்குரிய அப்போட்டி 2004ம் ஆண்டு செளதாம்ப்டனில் நடந்தது. அது அரை இறுதிப் போட்டியாகும். அதில் முதலில் ஆடிய பாகிஸ்தான் அணி 131 ரன்களில் ஆல் அவுட் ஆனது. பின்னர் ஆடிய மேற்கு இந்தியத் தீவுகள் அணி 132 ரன்கள் எடுத்து வெற்றி பெற்றது. இந்தப் போட்டியும் பிக்ஸ் செய்யப்பட்டதாக ஹமீத் கூறியுள்ளார்.
ஹமீதின் இந்தப் புதிய பேட்டி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
நான் அப்படிக் கூறவில்லை-ஹமீத் மறுப்பு:
இந்த நிலையில் தான் அப்படி பேட்டியெல்லாம் தரவில்லை என்று மறுத்துள்ளார் ஹமீத். இதுகுறித்து பாகிஸ்தான் டிவி ஒன்றுக்கு அவர் அளித்துள்ள பேட்டியில், நான் அப்படி எந்தப் பேட்டியும் தரவில்லை. நான் நாட்டுக்காக ஆடுகிறேன். அவர்கள் எனது சக வீரர்கள். அவர்களைப் பற்றி நான் எதுவும் சொல்லவில்லை. எனது சக வீரர்களைக் குற்றம் சாட்ட வேண்டும் என்ற எண்ணம் கூட எனக்கு இல்லை. அந்தப் பேட்டி முழுமையாக தவறானது, பொய்யானது என்று கூறியுள்ளார் ஹமீத்.
Story first published: Wednesday, December 7, 2011, 18:41 [IST]
Other articles published on Dec 7, 2011


Click it and Unblock the Notifications