இப்படியெல்லாமா ஏமாத்துவீங்க.. 4வது டெஸ்டிற்கான டிக்கெட் விற்பனை.. ரசிகர்கள் சரமாரி குற்றச்சாட்டு!
அகமதாபாத்: ஆஸ்திரேலிய அணியுடனான 4வது டெஸ்ட் போட்டிக்கான டிக்கெட்களை பெறுவதில் ரசிகர்களுக்கு பெரும் ஏமாற்றம் ஏற்பட்டுள்ளது. குஜராத் கிரிக்கெட் வாரியம் தவறு செய்ததாக குற்றம் சாட்டி வருகின்றனர்.
இந்தியா - ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையேயான பார்டர் கவாஸ்கர் கோப்பை தொடர் பரபரப்பு கட்டத்தை எட்டியுள்ளது. முதல் 2 டெஸ்ட் போட்டிகளில் இந்தியா வெற்றி கண்ட சூழலில் 3வது டெஸ்டில் ஆஸ்திரேலிய அணி கம்பேக் கொடுத்தது.
இந்தூரில் நடைபெற்ற 3வது டெஸ்ட் போட்டியில் பேட்டிங்கில் சொதப்பிய இந்திய அணி 2 இன்னிங்ஸ்களிலும் மிக குறைவான ஸ்கோரை மட்டுமே எடுத்தது. இதனால் 9 விக்கெட்கள் வித்தியாசத்தில் தோல்வியை சந்தித்தது.

4வது டெஸ்ட் போட்டி
இதன் மூலம் இந்த தொடர் சமனில் முடியப்போகிறதா? இந்தியா கைப்பற்ற போகிறதா? என்ற பெரும் எதிர்பார்ப்பு 4வது டெஸ்ட் போட்டியின் மீது எழுந்துள்ளது. இந்த போட்டி வரும் மார்ச் 9ம் தேதியன்று குஜராத் மாநிலம் அகமதாபாத்தில் உள்ள மோதிரா மைதானத்தில் நடைபெறவிருக்கிறது. இதற்காக இரு அணி வீரர்களும் தீவிரமாக தயாராகி வருகின்றனர்.

ரசிகர்களுக்கு ஏமாற்றம்
இந்நிலையில் இந்த முக்கியமான போட்டியை காண ஆவலுடன் காத்திருந்த ரசிகர்களுக்கு பெரும் ஏமாற்றம் கிடைத்துள்ளது. குஜராத் மாநில கிரிக்கெட் வாரியம் இன்றைய தினம் டிக்கெட் விற்பனையை தொடங்கவிருந்தது. முதல் நாள் ஆட்டத்தை காண்பதற்காக ஆவலுடன் புக்கிங்கிற்கு சென்ற போது, ஏற்கனவே பல டிக்கெட்கள் விற்கப்பட்டிருந்ததை பார்த்து அதிர்ச்சியடைந்தனர்.

என்ன காரணம்
இதனால் ஏற்கனவே மறைமுகமாக டிக்கெட்களை விற்றுவிட்டு, தற்போது ஏமாற்றுவதாக குற்றம் சாட்டி வருகின்றனர். ஆனால் இதற்கு உண்மையான காரணம் உலக தலைவர்களின் வருகை தான். 4வது டெஸ்ட் போட்டியை காண்பதற்காக இந்திய பிரதமர் நரேந்திர மோடி மற்றும் ஆஸ்திரேலிய பிரதமர் அந்தோனியும் மைதானத்திற்கு வரவுள்ளனர். முதல் நாளன்று இவர்கள் வருவார்கள் என தெரிகிறது.

முக்கிய காரணம்
எனவே அரசியல் கட்சியினர், பிரமுகர்களுக்காக டிக்கெட்கள் விற்பனை செய்யப்பட்டுவிட்டதாக தகவல் வெளியாகியுள்ளது. இது ரசிகர்களிடம் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது. இந்த தொடரில் இதுவரை நடந்துள்ள 3 போட்டிகளுமே 3 நாட்களுக்குள் முடிந்துவிட்டன. எனவே இந்த போட்டியில் முதல் நாள் ஆட்டத்தை பார்த்துவிட வேண்டும் என ரசிகர்கள் எதிர்பார்க்கின்றனர்.


Click it and Unblock the Notifications