இஸ்லாமாபாத்: கிரிக்கெட் சூதாட்டத்தில் சிக்கிய பாகிஸ்தான் வீரர்கள் சல்மான் பட், முகமது ஆமிர், முகமது ஆசிப் ஆகியோரின் ஒப்பந்தத்தை பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் ரத்து செய்துள்ளது.
அன்மையில் பாகிஸ்தான் கிரிக்கெட் அணி இங்கிலாந்தில் சுற்றுப் பயணம் மேற்கொண்டது. அப்போது பாகிஸ்தான் வீரர்கள் சல்மான் பட், முகமது ஆமிர், முகமது ஆசிப் ஆகியோர் சூதாட்டத்தில் ஈடுபட்டது தெரிய வந்தது.
சிக்கிய வீரர்களிடம் ஸ்காட்லாந்து யார்டு போலீஸ் விசாரணை நடத்தினர். இதில் அம்மூவரும் கிரிக்கெட் சூதாட்டத்தில் ஈடுபட்டது உறுதியானது. இதையடுத்து அவர்களை சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் (ஐ.சி.சி.) சஸ்பெண்ட் செய்தது. இதை எதிர்த்து அவர்கள் செய்த மேல் முறையீட்டு மனுவும் தள்ளுபடியானது.
இதைத் தொடர்ந்து பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் அந்த 3 பேரின் ஒப்பந்தத்தை ரத்து செய்துள்ளது. இதனால் அவர்களுக்கு வழங்கப்படும் மாத ஊதியமான ரூ. 2.5 லட்சம் நிறுத்தப்படுகிறது.