2வது டெஸ்ட்டிலும் இந்தியாவே வெற்றி-ஆஸி.க்கு முட்டை-தொடரை வென்றது இந்தியா

பெங்களூரில் நடந்த 2வது டெஸ்ட் போட்டியில் இந்தியாவுக்கு 207 ரன்கள் வெற்றி இலக்கை நிர்ணயித்தது ஆஸ்திரேலியா. முன்னதாக அது தனது 2வது இன்னிங்ஸில் 223 ரன்களுக்கு ஆட்டமிழந்தது. முதல் இன்னிங்ஸில் ஆஸ்திரேலியா 478 ரன்களும், இந்தியா 495 ரன்களும் எடுத்திருந்தன.
இதையடுத்து 207 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற எளிதான இலக்குடன் இந்தியா ஆட ஆரம்பித்தது.
தொடக்க ஆட்டக்காரர் ஷேவாக் 7 ரன்களில் ஆட்டமிழந்தார். இருப்பினும் முரளி விஜய்யும், சட்டேஸ்வர் பூஜாராவும் நிதானமாக ஆடி விக்கெட் வீழ்ச்சியை தடுத்தனர். முரளி விஜய் 37 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார்.
இருப்பினும் புஜாரா பிரமாதமாக ஆடினார். 89 பந்துகளைச் சந்தித்த அவர் 72 ரன்களைக் குவித்து ஆட்டமிழந்தார்.
இதையடுத்து சச்சின் டெண்டுல்கரும், டிராவிடும் இணைந்து வெற்றிக்கான ரன்களைச் சேர்த்துக் கொடுத்து இந்தியாவை வெற்றி பெற வைத்தனர்.
சச்சின் 53 ரன்களை எடுத்து கடைசி வரை ஆட்டமிழக்காமல் இருந்தார். டிராவிட் 21 ரன்களுடன் ஆட்டமிழக்காமல் இருந்தார்.
இதையடுத்து இந்தியா 3 விக்கெட் இழப்புக்கு 207 ரன்களை எடுத்து 7 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
இதன் மூலம் இரண்டு போட்டிகளைக் கொண்ட டெஸ்ட் தொடரில் இரண்டிலும் வென்று தொடரையும் கைப்பற்றியது. முதல் டெஸ்ட் போட்டியில் இந்தியா கடைசி நேரத்தில் அபாரமாக ஆடி 1 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. அந்தப் போட்டியில் இந்தியா வெல்ல முக்கியக் காரணம் வி.வி.எஸ்.லட்சுமணின் அபார ஆட்டமே என்பது நினைவிருக்கலாம்.
அடுத்து, இந்தியா, ஆஸ்திரேலியா இடையிலான 3 போட்டிகளைக் கொண்ட ஒரு நாள் தொடர் தொடங்கவுள்ளது.
ஆட்ட நாயகன், தொடர் நாயகன்-சச்சின்:
இன்றைய போட்டியின் ஆட்ட நாயகனாகவும், தொடர் நாயகனாகவும் சச்சின் டெண்டுல்கர் அறிவிக்கப்பட்டார்.
இந்த இரு டெஸ்ட் போட்டிகளிலும் சச்சின் மொத்தம் 403 ரன்கள் குவித்தார் என்பது குறிப்பிடத்தக்கது. இதில் ஒரு இரட்டை சதம் அடக்கம்.
முதலிடத்தை தக்க வைத்தது இந்தியா:
இந்த அபார வெற்றியின் மூலம் டெஸ்ட் கிரிக்கெட் தர வரிசைப் பட்டியலில் இந்தியா தனது முதலிடத்தை தக்க வைத்துக் கொண்டது.
15 வருடங்களுக்குப் பின் பெங்களூரில் வெற்றி:
இன்றைய வெற்றி இந்தியாவுக்கு மேலும் விசேஷமான வெற்றியாகும். பெங்களூர் சின்னச்சாமி மைதானத்தில் 15 வருடங்களுக்குப் பிறகு இந்தியா பெற்றுள்ள முதல் டெஸ்ட் வெற்றி இது என்பது குறிப்பிடத்தக்கது.
Story first published: Wednesday, December 7, 2011, 18:42 [IST]
Other articles published on Dec 7, 2011


Click it and Unblock the Notifications