இந்தியா, பாகிஸ்தான் அணிகளுக்கிடையிலான 5 திரில்லர் போட்டிகள்
மொஹாலி: இந்தியா, பாகிஸ்தான் அணிகளுக்கு இடையிலான போட்டிகள் என்றாலே அங்கு அனல் பறக்கும். இரு அணிகளுக்கும் இடையே நடந்த அத்தனை போட்டிகளிலும் ஏதாவது ஒரு விசேஷம், திரில், பரபரப்பு நிச்சயம் இருக்கும். அதில் ஐந்து அட்டகாசமான போட்டிகள் குறித்த பார்வை...

1985, மார்ச் 22, ஷார்ஜா
ஷார்ஜா மைதானத்தில் நடந்த இந்தப் போட்டியில் 38 ரன்கள் வித்தியாசத்தில் இந்தியா வென்றது.
கபில் தேவ் தலைமையில் இந்தியாவும், இம்ரான் கான் தலைமையில் பாகிஸ்தானும் மோதின. முதலில் பேட் செய்த இந்தியாவை, இம்ரான் தனது அதி பயங்கர பவுலிங்கால் துவம்சம் செய்து விட்டார். 10 ஓவர்களில் 14 ரன்களை மட்டுமே கொடுத்த இம்ரான், 6 விக்கெட்களைச் சாய்த்தார். ஸ்தம்பித்துப் போன இந்தியா 125 ரன்களில் சுருண்டு போனது.
ஆட்டமிழந்து டிரஸ்ஸிங் ரூமுக்குத் திரும்பிய இந்திய அணி வீரர்களிடம் கபில் தேவ் சொன்ன ஒரே வார்த்தை, நம்மிடம் இழக்க இனி ஏதுமில்லை. ஆனால் பாகிஸ்தானை வெல்ல விடக் கூடாது. அவர்களது பேட்டிங்கை சீர்குலைக்கும் வகையில் பந்து வீச்சில் அனல் பறக்கட்டும் என்று உத்தரவிட்டார்.
சொன்னதோடு நிற்காமல் அவரே அட்டகாசமாக பந்து வீசினார். 17 ரன்கள் கொடுத்து 3 விக்கெட்களைச் சாய்த்தார் கபில். இந்தியாவின் ஆவேச பந்து வீச்சை சமாளிக்க முடியாத பாகிஸ்தான் வெறும் 87 ரன்களில் சுருண்டு போனது. இந்தியா, பாகிஸ்தானுக்குஎதிராக பெற்றவெற்றிகளில் இதற்கு தனி இடம் உண்டு.
1986, ஏப்ரல் 18, ஷார்ஜா
அதே ஷார்ஜாவில் நடந்த இன்னொரு போட்டி இது. இந்தப் போட்டி இன்றளவும் பாகிஸ்தானுக்கு மறக்க முடியாத ஒன்று. கிரிக்கெட் உலகிலும் கூட இது முக்கியமான போட்டிகளில் ஒன்றாக அமைந்தது. அதற்குக் காரணம் ஒரு சிக்சர்.
இப்போட்டியில் வெற்றி இலக்கை நெருங்கிய நேரத்தில் பாகிஸ்தான் பெரும் இக்கட்டில் இருந்தது. கையில் ஒரு விக்கெட் மட்டுமே. இருந்தது. கடைசிப் பந்தில் வெற்றி இலக்கை எட்டியாக வேண்டிய நிலை. பேட்டிங் செய்தவர் மியான்டட். சேட்டன் சர்மா வீசிய பந்தை லாவகமாக எதிர்கொண்ட அவர் அதை சிக்சருக்கு விரட்டி போட்டியை முடித்து வைத்தார். அரங்கில் கூடியிருந்த இந்திய ரசிகர்கள் ஸ்தம்பித்துப் போய் விட்டனர். இப்போட்டியில் ஆட்டமிழக்காமல் 116 ரன்கள் எடுத்தார் மியான்டட்.
1987, மார்ச் 20, ஹைதராபாத்
ஹைதராபாத்தில் நடந்த இப்போட்டியும் மிகவும் திரி்ல்லிங்கான ஒன்றுதான். ஆட்டத்தின் கடைசிப் பந்தில் பாகிஸ்தான் 2 ரன்கள் எடுத்தால் வெற்றி பெறும். கடைசிப் பந்தை அடித்து விட்டு அப்துல் காதிர் ரன் எடுக்க ஓடினார். ஒரு ரன் எடுத்து விட்டு 2 வது ரன்னுக்காக அவர் ஓடியபோது ரன் அவுட் செய்யப்பட்டார்.
இதனால் இரு அணிகளின் ஸ்கோரும் 212 என்று மாறி டை ஆனது. ஆனால் இப்போட்டியில் இந்தியா 6 விக்கெட்களை இழந்து 212 ரன்களை எடுத்திருந்தது. பாகிஸ்தானோ 7 விக்கெட்களை இழந்திருந்தது. எனவே இந்தியா வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டது.
1997, மே 21, சென்னை
இப்போட்டியை பாகிஸ்தான் ரசிகர்களும் சரி, சென்னை ரசிகர்களும் சரி ஒருபோதும் மறக்க முடியாது. இப்போட்டியில்தான் பாகிஸ்தான் வீரர் சயீத் அன்வர் 194 ரன்களைக் குவித்து உலக சாதனை படைத்தார். 146 பந்துகளில் அன்வர் 194 ரன்களைக் குவித்தார். இந்தப் போட்டியில் பாகிஸ்தான் அணி 321 ரன்களை எடுத்தது. இந்தியா 292 ரன்களை எடுத்து தோல்வியடைந்தது.
அன்வர் உலக சாதனை படைத்தபோதும், பாகிஸ்தான் அணி வென்றபோதும், நாகரீகமான முறையில் தங்களது பாராட்டுக்களை சென்னை ரசிகர்கள் வெளிப்படுத்தி இந்தியாவின் பெருமையை உலக அரங்கில் உயர்த்தினர்.
2003, மார்ச் 1, செஞ்சூரியன்
சச்சின் டெண்டுல்கருக்கும், சோயப் அக்தருக்கும் இடையே நடந்த போர், தென் ஆப்பிரிக்காவில் நடந்த இந்தஉலகக் கோப்பைப் போட்டி. உலகின் அதி வேக பந்து வீச்சாளராக அப்போது மிரட்டிக் கொண்டிருந்தவர் சோயப் அக்தர். சச்சினோ அத்தொடரில் ரன் மெஷினாக மாறி ரன்களை குவித்துக் கொண்டிருந்தார்.
75 பந்துகளை மட்டுமே சந்தித்த சச்சின் 98 ரன்களைக் குவித்தார். எந்த சோயப் அக்தர் சவால் விட்டாரோ, அவரது பந்தைத்தான் விளாசி, நொறுக்கினார் சச்சின். இந்த ஒரே போட்டியில் சோயப் அக்தரின் அதி பயங்கர இமேஜ் அப்படியே சுருண்டு போனது குறிப்பிடத்தக்கது. சோயப் அக்தருக்கு இப்போட்டியில் வெறும் ஒரு விக்கெட் மட்டுமே கிடைத்தது. அது சச்சினுடைய விக்கெட் என்பதுதான் இதில் விசேஷம். ஆனால் அவுட்டாவதற்கு முன்பு சோயப்பை விளாசித் தள்ளி விட்டார் சச்சின்.
இந்தப் போட்டியில் 6 விக்கெட் வித்தியாசத்தில் இந்தியா வெற்றி பெற்றது.
Story first published: Wednesday, December 7, 2011, 18:45 [IST]
Other articles published on Dec 7, 2011


Click it and Unblock the Notifications