'வார்ம் அப்' இல்லாததால் மோசம் போன இந்தியா!

உலகின் எந்த விக்கெட்டில் வேண்டுமானாலும் எளிதில் விளையாடி விட முடியும். ஆனால் தென் ஆப்பிரிக்க விக்கெட்டில் விளையாடுவது என்பது மிகப் பெரிய சவால்-எந்த அணியாக இருந்தாலும். அப்படி சிறப்பம்சம் நிறைந்தது தென் ஆப்பிரிக்க பிட்சுகள். வேகப் பந்து வீச்சின் சொர்க்கபுரியாக உள்ள தென் ஆப்பிரிக்காவில் சற்று விவேகம் இல்லாமல் களம் இறங்கி விட்டது இந்தியா என்பது பெரும்பாலானோரின் கருத்தாகும்.
விவேகம் இல்லை என்பதற்கு போதுமான பயிற்சி ஆட்டங்களில் இந்தியா பங்கேற்காமல் என்று அர்த்தம் எடுத்துக் கொள்ளலாம்.
தென் ஆப்பிரிக்காவுக்கு சில நாட்களுக்கு முன்புதான் வந்து சேர்ந்தது இந்தியா. வந்த வேகத்தில் முதல் டெஸட் போட்டியை ஆட இறங்கி விட்டது இந்தியா. இது மிகப் பெரிய பின்னடைவாக கருதப்படுகிறது. சில வார்ம் அம் போட்டிகளிலாவது இந்தியா விளையாடியிருக்க வேண்டும் என்ற கருத்து எழுந்துள்ளது.
குறைந்தது ஒரு வார்ம் அப் போட்டியாவாது இடம் பெற வேண்டும் என்று ஏற்கனவே பயிற்சியாளர் கிர்ஸ்டனை வலியுறுத்தியிருந்தார் முன்னாள் கேப்டன் கங்குலி. இருப்பினும் அதற்கு வாய்ப்பும் இல்லை, நேரமும் இல்லாமல் போய் விட்டது. விளைவு இப்போது இந்திய வீரர்களை காய விட்டு விட்டது தென் ஆப்பிரிக்கா.
தென் ஆப்பிரிக்காவின் வேகப் பந்து வீச்சாளர்களான ஸ்டெயினும், மார்க்கலும் தங்களது புயல் வேகப் பந்து வீச்சால், இந்திய வீரர்களை நிலை குலைய வைத்து விட்டனர். முதல் ஓவரிலேயே இந்தியாவின் கதையை அவர்கள் தீர்மானித்து விட்டனர் என்பது விளையாட்டை பார்த்தவர்களுக்குப் புரிந்திருக்கும்.
உள்ளூரில் நடக்கும் போட்டி என்பது தென் ஆப்பிரிக்கர்களுக்கு பெரும் பலமாகி விட்டது. அதை விட முக்கியமாக மழை வந்து இந்தியாவின் திட்டங்களை பாழ்படுத்தி விட்டது.
தென் ஆப்பிரிக்காவின் பிட்ச் நிலவரத்தைப் புரிந்து கொண்டு ஆடுவதற்குள் ஷேவாக், கம்பீர் ஆகியோரை இந்தியா இழந்து விட்டது. இருவருக்கும் பந்து வரும் வேகத்தையும், திசையையும் சரியாக கணிக்க முடியவில்லை. முற்றிலும் புதிய சூழ்நிலையில் விளையாட வந்த அவர்களுக்கு நிச்சயம் இது பெரும் பின்னடைவுதான்.
பந்து வீச்சின் தன்மையைக் கணித்து ஆட முயல்வதற்குள் ஷேவாக், கம்பீர், டிராவிட் என முக்கிய மூன்று வீரர்களை இந்தியா இழந்திருந்தது. 27 ரன்களுக்குள் இவர்கள் அவுட்டாகி விட்டனர்.
சச்சினும், லட்சுமணும் தங்களது அனுபவத்தை வைத்துக் கொண்டு சற்றுஆட முற்பட்டனர். இதில் சச்சின் மட்டுமே பந்து வீச்சைக் கண்டு சற்றும் பயப்படாமல் ஆடினார். ஆனால் அவர்களும் கூட தென் ஆப்பிரிக்காவின் வேகத்திற்கு முன்பு நிற்க முடியவில்லை.
தொடர்ந்து சரியான இடைவெளியில், இன்னும் சொல்லப் போனால் படு வேகமாக வீரர்களை இழந்து வந்தது இந்தியா. ஒரு கட்டத்தில் 100 ரன்களாவது எடுப்பார்களா என்ற சந்தேகம் வந்து விட்டது. அதேசமயம், டோணி சற்று பொறுமையுடனும், நிதானத்துடனும் ஆடியதால் 100 ரன்களைத் தாண்ட முடிந்தது இந்தியாவால்.
எத்தைத் தின்றால் பித்தம் தெளியும் என்ற கதையாக, எதைச் செய்தால் இந்தியாவின் நிலையை தேற்ற முடியும் என்று அலைபாய்ந்து கொண்டிருந்தார் டோணி. ஆனால் அவராலும் கூட அணியை கரை சேர்க்க முடியவில்லை. இன்று காலை 2வது நாள் ஆட்டம்தொடங்கியதும் அவரும் ஆட்டமிழந்து போனார்.
இந்தியாவின் இந்த பரிதாப நிலைக்கு போதிய வார்ம் அப் போட்டிகள் அதாவது பயிற்சி ஆட்டங்கள் இல்லாததே காரணம் என்ற கருத்து பலமாக எழுந்துள்ளது. ஆனால் ஹர்பஜன் சிங் இதை மறுக்கிறார். நிச்சயம் வார்ம் அப் போட்டிகளால் எந்தப் பயனும் இருந்திருக்காது. இங்கு பந்து தாறுமாறாக எகிறுகிறது. முற்றிலும் புதிய விக்கெட்டில் விளையாடுகிறோம். எனவே எந்த அணியாக இருந்தாலும் நிச்சயம் தடுமாறத்தான் செய்யும். மழை பெய்ததால் விக்கெட்டின் தன்மை மாறிப் போயுள்ளதே இதற்குக் காரணம் என்றார்.
இன்று 2வது நாள் ஆட்டம். இன்னும் 3 நாள் ஆட்டம் பாக்கியுள்ளது. இந்தியா கடக்க வேண்டிய தூரமோ மிக நீளமாக உள்ளது. போட்டி எப்படிப் போகும், இந்தியா தேறுமா என்பது பெரும் கேள்விக்குறியாகியுள்ளது. அனுபவம் வாய்ந்த ஜாகிர்கான் அணியில் இடம் பெற முடியவில்லை. காயத்தால அவர் அவதிப்படுகிறார். அனுபவமே இல்லாத ஜெய்தேவ் உனக்தத்தையும், இஷாந்த் சர்மா, ஸ்ரீசாந்த் ஆகியோரையும் வைத்துக் கொண்டு ஆடுகிறது இந்தியா.
இந்தியா எழுச்சி பெறுமா, பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.
Story first published: Wednesday, December 7, 2011, 18:43 [IST]
Other articles published on Dec 7, 2011


Click it and Unblock the Notifications