பிஷன் சிங் பேடி சாதாரண பவுலர்தான்-முரளிதரன் விமர்சனம்

முரளிதரன் தேவையில்லாமல் யாரையும் விமர்சிப்பவர் அல்ல. தன்னை விமர்சிப்பவர்களைக் கூட நாகரீகமாக அணுகுவது அவரது பழக்கம். ஆனால் முதல் முறையாக சற்று கடுமையான தொணியில் பிஷன் சிங பேடியை விமர்சித்துள்ளார் முரளிதரன்.
இந்தியாவின் முன்னணி சுழற்பந்து வீச்சாளராக விளங்கியவரான பேடியை சாதாரண பவுலர் என்று விமர்சித்துள்ளார் முரளி. இதற்கு ஒரு பின்னணியும் உண்டு. முரளிதரனை முடிந்தவரை கடுமையாக விமர்சித்துப் பழக்கப்பட்டவர் பேடி. அவரது பந்து வீச்சை கடைசி வரை அவர் ஏற்கவே இல்லை. இந்த பின்னணியில்தான் சமீபத்தில் டெஸ்ட் போட்டிகளிலிருந்து ஓய்வு பெற்ற முரளிதரன் விமர்சித்துள்ளார்.
இதுகுறித்து அவர் கூறுகையில், பிஷன் சிங் பேடி ஒரு சாதாரணமான சுழற்பந்து வீச்சாளர்தான். எனவே அவர் என்னைப் பற்றி கருத்து சொல்ல உரிமை இல்லை.
முதலில் தனது முகத்தை பேடி கண்ணாடியில் பார்க்க வேண்டும். அவர் என்ன சாதித்துள்ளார் என்பதை சிந்திக்க வேண்டும். அவரது சாதனையை இன்று உள்ள ஒரு சாதாரண பவுலர் கூட எளிதில் செய்து விட்டுப் போய் விடுவார்.
அவர் எடுத்துள்ள சில நூறு விக்கெட்கள் ஒரு சாதனையே கிடையாது. இன்று 30-40 பந்து வீச்சாளர்கள் உள்ளனர். அவர்கள் இதை சாதாரணமாக செய்துவிட்டுப் போய் விடுவார்கள்.
தான் பிரபலமாக வேண்டும் என்பதற்காக என்னைப் பற்றி பேசி வருகிறார் பேடி. கிரிக்கெட்டுக்காக அவர் எதையுமே செய்ததில்லை.
சர்ச்சைகள் என்னை ஒருபோதும் பாதித்ததில்லை. மாறாக அவை என்னை மேலும் உறுதியாக்கவே செய்துள்ளன. எப்போதுமே நம்மை யாராவது விமர்சித்தபடிதான் இருப்பார்கள். அதைப் பற்றி நான் கவலைப்படுவதே கிடையாது. அவர்களைப் பொருட்படுத்துவதே இல்லை.
ஒரு கிரிக்கெட் வீரரைப் பொறுத்தவரை விமர்சனம் என்பது நிச்சயம் ஒரு தடைக்கல்தான். ஆனால் அதை நான் தாண்டி வெகு நாட்களாகி விட்டது.
எனது சாதனையை முறியடிக்கக் கூடிய தகுதியும்,திறமையும்,இந்திய சுழற்பந்து வீச்சாளர் ஹர்பஜன் சிங்குக்கு மட்டுமே உண்டு. இதை நான் மீண்டும் வலியுறுத்திக் கூறுகிறேன்.
800 விக்கெட்களை நான் வீழ்த்தியது நிச்சயம் ஒருவிசேஷமான உணர்வைத் தருகிறது. இனிமேல் நான் ஒரு நாள் போட்டிகளிலும்,டுவென்டி 20 போட்டிகளிலும் கவனம் செலுத்துவேன் என்றார் முரளிதரன்.
Story first published: Wednesday, December 7, 2011, 18:39 [IST]
Other articles published on Dec 7, 2011


Click it and Unblock the Notifications