மும்பை : இந்தியாவில் விளையாடும் போது சூதாட்டத்தில் தம்மை ஒரு கும்பல் இழுத்துச் சென்று கட்டாயப்படுத்தி செய்ய வைத்ததாக முன்னாள் நியூசிலாந்து கிரிக்கெட் வீரர் லூயி வின்செண்ட் தெரிவித்துள்ளார். நியூசிலாந்து கிரிக்கெட் அணிக்காக 23 டெஸ்ட் மற்றும் 108 ஒரு நாள் போட்டிகளில் லூயி வின்சென்ட் விளையாடி இருக்கிறார்.
இந்த நிலையில் சூதாட்டப் புகார் சிக்கி இங்கிலாந்து கிரிக்கெட் வாரியத்தால் தடை விதிக்கப்பட்ட லூயி வின்சென்ட் தற்போது இங்கிலாந்தில் நடைபெறும் உள்ளூர் கிரிக்கெட் போட்டிகளில் மட்டும் விளையாட அனுமதிக்கப்பட்டார்.

கிரிக்கெட் சூதாட்டத்தில் தான் எவ்வாறு ஈடுபட்டேன் என்பது குறித்து லூயி வின்சென்ட் முதல் முறையாக மௌனத்தை கலைத்து இருக்கிறார். அதில், தொழில் முறை விளையாட்டு வீரருக்கு தேவையான மனவலிமை என்னிடம் இல்லை. நான் சிறுவயதில் இருந்தே சண்டையும் சச்சரவும் இருக்கின்ற குடும்பத்தில் தான் வளர்ந்தேன். என்னிடம் பேசவே ஆள் இருக்க மாட்டார்கள்.
இந்த சூழலில் நான் இந்தியாவுக்கு வந்து விளையாடிய போது சூதாட்டத்தில் ஈடுபடும் கும்பல் என்னை வலுக்கட்டயமாக இழுத்து வந்து சூதாட்டத்தில் ஈடுபட வைத்தது. எனக்கு அதிக அளவு நண்பர்கள் இல்லாததால், முதலில் சூதாட்ட தரகர்களுடன் இணைந்து நான் ஒரு குழுவில் முக்கிய உறுப்பினர் போல் மாறிவிட்டேன். அவர்கள் முதலில் எனக்கு வேண்டியது எல்லாம் செய்து கொடுத்தார்கள்.
என்னை பலரும் விரும்ப வேண்டும் என்ற மனநிலையில் இருந்ததால், அந்த சூதாட்ட கும்பலில் நான் என்னையும் இணைத்துக் கொண்டேன். சூதாட்டம் மற்றும் லஞ்சத்தில் என்னை மெல்ல மெல்ல ஈடுபட செய்து வளர்த்தார்கள். ஒரு கட்டத்தில் நான் செய்வது தவறு என்பதை உணர்ந்து, இந்த கும்பலிடம் இருந்து தப்பிக்க முயன்றேன்.
ஆனால் இதிலிருந்து வெளியேறுகிறேன் என்று நான் நினைத்தவுடன் அவர்களுடைய நடவடிக்கை மாறியது. அதன் பிறகு என்னை மிரட்டி கிரிக்கெட் சூதாட்டத்தில் ஈடுபட வைத்தார்கள். ஒரு முறை இந்த கும்பலுடன் நாம் இணைந்தோம் என்றால் அதிலிருந்து வெளியே வருவது கஷ்டம். ஒரு முறை நாம் அவர்களுக்காக சூதாட ஒப்புக்கொண்டோம் என்றால் கூட தொடர்ந்து அவர்களுக்கு வேண்டியதை நம்மிடமிருந்து வாங்கி விடுவார்கள்.
இதிலிருந்து வெளியே வர, ஒரே வழி உண்மையை ஒப்புக்கொண்டு தண்டனை வாங்குவது தான் என்று நான் முடிவு எடுத்தேன். இதனை அடுத்து வீரர்களின் நல வாரியத்தில் எனக்கு நடந்த பிரச்சினையை கூறி நான் என்ன செய்ய வேண்டும் என்று கேட்டேன். இதனை அடுத்து இங்கிலாந்து கிரிக்கெட் வாரியம் தான் என்னை அரவணைத்து வழி நடத்தினார்கள். என் மீது இருந்த புகார் மற்றும் நான் செய்த தவறிலிருந்து மீண்டு வர 10 ஆண்டுகள் ஆனது.
குணமடைவதை நம்மால் விரைவு படுத்த முடியாது. இதற்கு பல கட்ட முயற்சிகள் வேண்டும். எனினும் மீண்டு வரும் பயணம் தற்போது எனக்கு எளிதாக மாறிவிட்டது என்று லூயி வின்சென்ட் கூறியுள்ளார். சூதாட்டத்திற்கு எதிரான நடைமுறைகளை வீரர்களுக்கு சொல்லித் தரும் குழுவிலும் தற்போது லூயி வின்சென்ட் ஈடுபடுகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.