சிட்னி : டெஸ்ட் கிரிக்கெட்டில் ஒரே இன்னிங்க்ஸில் பிரையன் லாரா 400 ரன்கள் அடித்த சாதனையை இன்று வரை யாரும் முறியடிக்கவில்லை. அது கிரிக்கெட்டின் இமாலய சாதனையாக பார்க்கப்படுகிறது.
2004ஆம் ஆண்டு இங்கிலாந்து அணிக்கு எதிராக பிரையன் லாரா 400 ரன்கள் குவித்து இருந்தார். சுமார் 20 ஆண்டுகள் ஆகியும் அந்த சாதனையை இதுவரை எந்த வீரரும் உடைக்கவில்லை. இந்த நிலையில் முன்னாள் ஆஸ்திரேலிய கேப்டன் மைக்கேல் கிளார்க் அதை உடைக்க ஒரு ஆஸ்திரேலிய வீரரால் முடியும் எனக் கூறி இருக்கிறார்.

தற்போது ஆஸ்திரேலிய டெஸ்ட் அணியில் முக்கிய விவாதம் ஒன்று நடந்து வருகிறது. அந்த அணியின் துவக்க வீரர் டேவிட் வார்னர் டெஸ்ட் போட்டிகளில் இருந்து ஓய்வு பெற்று இருக்கிறார். இந்த நிலையில், அடுத்து யார் டெஸ்ட் அணியின் துவக்க வீரராக ஆடுவது என்ற கேள்வி எழுந்துள்ளது.
ஆஸ்திரேலிய அணியைப் பொறுத்தவரை எப்போதுமே துவக்க வீரர் இடம் மிகவும் முக்கியமானது. அந்த இடத்தில் ஆடிய சிலர் பெரிய ஜாம்பவான்களாக மாறி இருக்கிறார்கள். மேத்யூ ஹெய்டன், ஆடம் கில்கிறிஸ்ட் வரிசையில் டேவிட் வார்னரும் இடம் பெற்று தற்போது ஓய்வு பெற்று இருக்கிறார்.
அடுத்து துவக்க வீரராக தான் ஆட தயாராக இருப்பதாக அந்த அணியின் மிடில் ஆர்டர் பேட்ஸ்மேன் ஸ்டீவ் ஸ்மித் கூறி இருக்கிறார். தற்போது டெஸ்ட் போட்டிகளில் ஆடி வரும் வீரர்களில் ஸ்டீவ் ஸ்மித் உலகிலேயே சிறந்த வீரர் பட்டியலில் முதல் மூன்று இடங்களில் இருக்கிறார். இந்த நிலையில், ஸ்டீவ் ஸ்மித் துவக்க வீரராக களமிறங்கினால் அவர் பிரையன் லாராவின் 400 ரன் சாதனையை முறியடிப்பார் என மைக்கேல் கிளார்க் கூறி இருக்கிறார்.
இது பற்றி கூறுகையில், "துவக்க வீரராக களமிறங்கும் அளவுக்கு ஸ்டீவ் ஸ்மித் நல்ல வீரர். அவர் எதிர்பார்க்கும் சவால் அதுதான். அவர் மட்டும் துவக்க வீரராக இறங்கினால் அடுத்த 12 மாதங்களில் சிறந்த துவக்க வீரராக மாறி விடுவார். அவர் பிரையன் லாராவின் 400 ரன் சாதனையை முறியடித்தால் ஆச்சரியப்படாதீர்கள். அவர் அந்த அளவுக்கு நல்ல வீரர்." என்றார் மைக்கேல் கிளார்க்.