பக்கத்து வீட்டுக்காரனா இருந்து என்ன புண்ணியம்.. தெ.ஆப்பிரிக்காவைத் தாக்கும் ஜிம்பாப்வே பயிற்சியாளர்!
ஜோஹன்னஸ்பர்க்: அண்டை நாடான ஜிம்பாப்வே நாட்டு கிரிக்கெட் வளர்ச்சிக்கு, தென் ஆப்பிரிக்கா எந்த உதவியும் செய்வதில்லை. இது மிகவும் ஏமாற்றமாக இருக்கிறது என்று ஜிம்பாப்வே அணியின் பயிற்சியாளராக நியமிக்கப்பட்டுள்ள மக்காயா டினி கூறியுள்ளார். இவர் தென் ஆப்பிரிக்காவைச் சேர்ந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.
தென் ஆப்பிரிக்க அணியில் வேகப் பந்து வீச்சாளராக செயல்பட்டவர் மக்காயா டினி. அணியில் ஒதுக்கப்பட்ட நிலைக்குத் தள்ளப்பட்ட இவர் பின்னர் பயிற்சியாளராக மாறினார். ஜிம்பாப்வே அணியின் பந்து வீச்சுப் பயிற்சியாளராக செயல்பட்டார் டினி. தற்போது ஜிம்பாப்வே அணியின் பயிற்சியாளராக இவரை நியமித்துள்ளது அந்த நாட்டு கிரிக்கெட் வாரியம்
இந்த நிலையில் தென் ஆப்பிரிக்க கிரிக்கெட் வாரியம் மீது டினி பாய்ந்துள்ளார். பக்கத்து நாடாக இருந்தபோதிலும் தென் ஆப்பிரிக்க கிரிக்கெட் வாரியத்தால் ஜி்ம்பாப்வேவுக்கு எந்த பலனும் கிடையாது. ஜிம்பாப்வே வாரியத்திற்கு தென் ஆப்பிரிக்க கிரிக்கெட் வாரியம் எந்த உதவியும் செய்வதில்லை என்று டினி கூறியுள்ளார்.

கண்டு கொள்ளாத தென் ஆப்பிரிக்கா
இதுகுறித்து டினி கூறுகையில், ஜிம்பாப்வே கிரிக்கெட் விவகாரம் குறித்து கண்டு கொள்வதில்லை தென் ஆப்பிரிக்கா. ஜிம்பாப்வேவுடன் விளையாடுவதைக் கூட தென் ஆப்பிரிக்கா விரும்புவதில்லை. இங்கு வரக் கூட விரும்புவதில்லை.

பக்கத்து நாடாக இருந்தபோதிலும்
பக்கத்து நாடுகள் என்ற போதிலும் கூட ஜிம்பாப்வே கிரிக்கெட் வளர்ச்சிக்கு உதவ தென் ஆப்பிரிக்கா முன்வருவதில்லை, விரும்புவதும் இல்லை. 2 ஆண்டுகளுக்கு முன்பு ஆஸ்திரேலியா, ஜிம்பாப்வே இடையிலான ஒரு நாள் தொடரை முத்தரப்பு தொடராக நடத்த இரு நாடுகளும் விரும்பியபோதிலும் தென் ஆப்பிரிக்க வர விருப்பம் தெரிவிக்காத காரணத்தால் அந்தத் தொடரை நடத்த முடியாத நிலை ஏற்பட்டது.

ஏன் இப்படி
ஏன் இப்படி ஜிம்பாப்வேவை தென் ஆப்பிரிக்கா ஒதுக்குகிறது என்று தெரியவில்லை. தென் ஆப்பிரிக்காதான், ஜிம்பாபாப்வேக்கு கை கொடுத்து தூக்கி விட வேண்டும். இந்த இரு நாடுகள் மட்டுமே இங்கு கிரிக்கெட் ஆடும் நாடுகளாகும் என்றார் டினி.

கருப்பர் என்று சொல்லாதீர்கள்
தென் ஆப்பிரிக்க அணியில் இடம் பெற்ற முதல் கருப்பர் இன வீரர் டினிதான். அதேபோல தென் ஆப்பிரிக்காவைச் சேர்ந்த முதல் கருப்பர் இன பயிற்சியாளரும் டினிதான். ஆனால் தன்னை இப்படி முத்திரை குத்துவதை விரும்பவில்லை என்று டினி கூறுகிறார்.


Click it and Unblock the Notifications