புனித் ராஜ்குமார் மரணம்.. அதிர்ச்சியில் உறைந்த கிரிக்கெட் உலகம்.. முன்னாள் வீரர்கள் இரங்கல்!
அமீரகம்: நடிகர் புனித் ராஜ்குமார் மரணத்திற்கு கிரிக்கெட் உலகை சேர்ந்த பலரும் இரங்கலை தெரிவித்து வருகின்றனர்.
Recommended Video
கன்னட திரையுலகின் சூப்பர் ஸ்டாராக வலம் வந்த புனித் ராஜ்குமார் இன்று திடீரென காலமானார்.
இதனையடுத்து கர்நாடக மாநிலம் முழுவதும் உள்ள ரசிகர்கள் பெங்களூருவில் உள்ள மருத்துவமனைக்கு படையெடுத்து வருகின்றனர்.

புனித் மரணம்
இன்று காலை உடற்பயிற்சி செய்து கொண்டு இருக்கும் போது புனித் ராஜ்குமாருக்கு மாரடைப்பு ஏற்பட்டதாக கூறப்படுகிறது. மோசமான உடல்நிலையுடன் பெங்களூருவில் உள்ள விக்ரம் மருத்துவமனையில் நடிகர் புனித் ராஜ்குமார் அனுமதிக்கப்பட்டார். இதையடுத்து அவருக்கு ஐசியூவில் சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. தொடர் சிகிச்சை பலனளிக்காமல் அவர் காலமானார்.

விரேந்தர் சேவாக்
இதனையடுத்து அவருக்கு ரசிகர்கள், திரையுல பிரபலங்கள் இரங்கல் தெரிவித்து வருகின்றனர். இதே போல கிரிக்கெட் உலகை சேர்ந்த பலரும் புனித் ராஜ்குமாரின் மறைவுக்கு இரங்கல் தெரிவித்துள்ளனர். இந்திய முன்னாள் வீரர் விரேந்தர் சேவாக் தனது ட்விட்டர் பக்கத்தில், புனித் ராஜ்குமாரின் மரண செய்தி மனவேதனை அளிக்கிறது. அவரின் மறைவு இந்திய சினிமாவுக்கு பெரும் இழப்பு எனக்கூறியுள்ளார்.

அனில் கும்ப்ளே இரங்கல்
இதுகுறித்து ட்வீட் போட்டுள்ள முன்னாள் வீரர் அனில் கும்ப்ளே புனித் ராஜ்குமாரின் மரண செய்தி கேட்டு அதிர்ச்சியடைந்தேன். இந்திய சினிமா ஒரு முக்கிய நடிகரை இழந்துள்ளது. நான் பார்த்ததில் மிகவும் நல்ல மனிதர் அவர். மிகவும் எளிமையானவர். அவரை பிரிந்து வாடும் குடும்பத்தினருக்கு ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக்கொள்கிறேன் எனக்குறிப்பிட்டுள்ளார்.

வெங்கடேஷ்
இதே போல முன்னாள் வீரர் வெங்கடேஷ் பிரசாத்தும் இரங்கல் தெரிவித்துள்ளார். புனித்தின் இறப்பு செய்தி கேட்டு அதிர்ச்சியடைந்தேன். அவரின் குடும்பத்தினருக்கு என்னுடைய இரங்கலை தெரிவித்துக்கொள்கிறேன். அவரின் ரசிகர்கள் தயவு செய்து அமைதி காத்து, அவரின் ஆத்மா சாந்தி அடைய பிரார்த்தனை செய்ய கேட்டுக்கொள்கிறேன் எனக்குறிப்பிட்டுள்ளார். இதே போல மேலும் சில வீரர்களும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.


Click it and Unblock the Notifications