பெங்களூரு : ஒவ்வொரு கிரிக்கெட் அணியிலும், விக்கெட் கீப்பரின் பங்கு மிகவும் இன்றியமையாதது. நமக்கு விக்கெட் கீப்பர் என்றால் தோனி, கில்கிறிஸ்ட், பவுச்சர், சங்ககாரா போன்ற வீரர்கள் குறித்து தான் நினைவுக்கு வரும். ஆனால் பண்டைய காலத்தில் , இவர்களை விட சிறந்த விக்கெட் கீப்பர்க விளையாடி இருக்கிறார்கள். அவர்களை குறித்து தான் நாம் பார்க்க போகிறோம்.
இங்கிலாந்து அணியில் சிறந்த விக்கெட் கீப்பராக கருதப்பட்டவர் தாமஸ்
காட்பிர்ரே இவான்ஸ் ( Thomas Godfrey Evans ).கென்ட் ( Kent ) டீமிற்காக முதல் தர கிரிக்கெட் விளையாடியவர்.மின்னல் வேகத்தில் ஸ்டம்பிங் செய்வதில் வல்லவர்.
திறமை மிக்க வேக பந்து பவுலர்கள் மற்றும் சிறந்த ஸ்பின் பவுலர்களுக்கு வெகு நேர்த்தியாக விக்கெட் கீப்பிங் செய்தவர்.

டெஸ்ட் கிரிக்கெட் சரித்திரத்தில் மிக அதிகமான ஸ்டம்பிங்கள் செய்த வரிசையில் இரண்டாவது இடம் இவருக்கு. 46 முறை ஸ்டம்பிங்க்குகள் செய்து அசத்தியுள்ளார்.
இவர் டெஸ்ட் கிரிக்கெட் விளையாடிய கால கட்டத்தில் இங்கிலாந்து அணியில் வெகு குறைவான ஸ்பின் பவுலர்களும், மிக அதிக மான வேகப்பந்து பவுலர்களும் இருந்தார்கள் என்பதையும் கருத்தில் கொள்ள வேண்டும்.
இவர் கிரிக்கெட் ஆட துவங்கிய காலத்தில் இரண்டாம் உலக போர் நடைப் பெற்றதால் இவரால் இளைய வயதில் டெஸ்ட் கிரிக்கெட்டில் பங்கு பெற முடியவில்லை.
1946 முதல் 1958 வரையில் ஆன கால கட்டத்தில், இவர் பங்கு பெற்றது 91 டெஸ்டுகளில். இதில் 173 கேட்சுகள் ஸ்டம்பிங்கள் 46.1946 சிட்னி டெஸ்டில் ஆஸ்திரேலிய அணி இரண்டாவது இன்னிங்சில் 8 விக்கெட்டுகள் இழப்பிற்கு 659 ரன்கள் எடுத்தனர்.
இவான்ஸ் ஸ்டம்புகளுக்கு பின்னால் விக்கெட் கீப்பிங் செய்த பொழுது ஒரு ரன் கூட பையாக( bye ) விடவில்லை. டெஸ்ட் கிரிக்கெட்டில் 2000 ரன்களுக்கு மேலும் மற்றும் 100 க்கும் மேல் (விக்கெட் கீப்பிங் மூலம் அவுட் செய்யபட்டவைக ள் ) (Wicket keeping dismissals ) பட்டியலில் இவரது சாதனையும் இடம் பெற்றுள்ளது.
1946 - 47 அடிலெய்டு ( Adelaide test ) டெஸ்டின் இரண்டாவது இன்னிங்சில் இங்கிலாந்து பேட்ஸ்மன் டென்னிஸ் காம்ப்டன் ( Denis Compton ) ஆடிக் கொண்டு இருந்தார், இவான்ஸ் அவருடன் ஜோடி சேர்ந்த பொழுது.
இவான்ஸ் அந்த இன்னிங்சில் தனது முதல் ரன்னை 97 நிமிடங்கள் பேட்டிங் செய்த பிறகு எடுத்தார். இவர், டென்னிஸ் காம்ப்டன் அவருடைய அந்த மேட்சில் இரண்டாவது இன்னிங்ஸிலும் சதம் எடுக்க , நின்று நிதானமாக ஆடி உதவினார்.
இவான்ஸ் அந்த இன்னிங்சில் 96 பந்துகள் எதிர் கொண்டு 10 * ரன்கள் ( நாட் அவுட்) எடுத்தார்.
அந்த மேட்சில் டென்னிஸ் காம்ப்டன் எடுத்தவை 147 மற்றும் 103 * நாட் அவுட். மேட்ச் ட்ராவில் முடிந்தது. 91 டெஸ்டுகளில் இவர் 2439 ரன்கள் எடுத்தார், இரண்டு சதங்கள் உட்பட. 1952 ல் இந்திய அணிக்கு எதிராக லார்ட்ஸ் மைதானத்தில் 104 ரன்கள் எடுத்தார். அதில் லஞ்சுக்கு முன்னால் 98 ரன்கள் குவித்து இருந்தார்.
இவரது அறிமுக டெஸ்ட் ( 17 ஆகஸ்ட் 1946 ) மற்றும் கடைசி டெஸ்ட் ( 20 ஜூன் 1959 ) இரண்டும் இந்தியாவிற்கு எதிராக நடைப் பெற்றன. ஆரம்ப காலங்களில் குத்து சண்டை போடுவதில் ஈடு பாடு கொண்ட இவர் பிறகு கிரிக்கெட் விளையாட்டில் ஆர்வம் கொண்டு கவனம் செலுத்த ஆரம்பித்து சிறந்த விக்கெட் கீப்பராக திகழ்ந்தார்.
இவரது இரண்டு சதங்களும் தலா 104 ரன்கள்.
இந்தியாவிற்கு எதிராக மற்றும் மேற்கு இந்திய தீவுகள் அணிக்கு எதிராக. விளையாடும் பொழுதும் கிரிக்கெட் டூர்களுக்கு செல்லும் பொழுதும் மகிழ்ச்சியாக இருப்பார். கூட விளையாடுபவர்களையும் உற்சாகப் படுத்துவார். பியானோ வாசிப்பதில் விருப்பம் கொண்டவர். 1920 ல் தோன்றிய இவர் 1999 ல் மறைந்தார்.
வாலி கிரௌட் ( Wally Grout ) இந்த விக்கெட் கீப்பர் ஆஸ்திரேலிய அணிக்கு டெஸ்ட் மேட்சுகள் விளையாடியவர். முதல் தர கிரிக்கெட் விளையாடியது குயின்ஸ்லாந்து ( Queensland team ) அணிக்காக. இவரது முழு பெயர் ஆர்தர் தியோடோரே வாலஸ் கிரௌட் ( Arthur Theodore Wallace Grout )
தென் ஆப்பிரிக்காவிற்கு எதிராக இவரது டெஸ்ட் கிரிக்கெட் பயணம் துவங்கியது ( 23 டிசம்பர் 1957 ) இவரது கடைசி டெஸ்ட் இங்கிலாந்து அணிக்கு எதிராக ( 16 பிப்ரவரி 1966 )
51 டெஸ்டுகளில் 890 ரன்கள், 163 கேட்சுகள் பிடித்துள்ளார். மற்றும் 24 ஸ்டம்பிங்கள் செய்துள்ளார்.அறிமுக டெஸ்டில் விக்கெட் கீப்பராக 6 எதிரணி ஆட்டக்காரர்கள் அவுட் ஆவதற்கு காரணகர்த்தாவாக இருந்தார்.
ஆஸ்திரேலியாவின் புகழ் பெற்ற ஷெபீல்ட் ஷீல்டு ( Sheffield Shield ) போட்டியில் உலக ரிக்கார்டு ஏற்படுத்தினார். 1960 ல் பிரிஸ்பேன் ( Brisbane ) மைதானத்தில் மேற்கு ஆஸ்திரேலியா அணிக்கு எதிரான மேட்சில் ஒரு இன்னிங்சில் விக்கெட் கீப்பராக 8 கேட்சுகளைப் பிடித்து.
7 வயது சிறுவனாக இருக்கும் பொழுது ஆஸ் திரேலிய விக்கெட் கீப்பர் டான் டல்லோன் ( Don Tallon ) விக்கெட் கீப்பிங் செய்யும் முறையை பார்த்து கவரப் பட்டு தானும் அவரைப் போல் ஆக வேண்டும் என்று ஆசைப் பட்டார். பிற்காலத்தில் அவருடன் ஒரே டீமில் விளையாட வாய்ப்பு கிட்டியது. இருவரும் குயின்ஸ்லாந்து அணிக்கு விளையா டினார்கள். ஆனால் கிரௌட்டுக்கு அவ்வளவு எளிதாக டெஸ்டு கிரிக்கெட் ஆட வாய்ப்பு கிடைக்கவில்லை.
தென் ஆப்பிரிக்கா சுற்றுப் பயணத்தின் பொழுது ( 1957 - 58 ) முதல் டெஸ்ட் மேட்சுக்கு முந்திய மேட்சில் 95 ரன்கள் குவித்தார், கட்டை விரலில் முறிவு ஏற்பட்ட பொழுதும் (hairline thumb fracture ).முதல் டெஸ்டில் முதல் இன்னிங்சில் 8 பைகள் (byes ) அனுமதித்தார்.
ஆனால் இரண்டாவது இன்னிங்சில் 6 கேட்சுகள் பிடித்து சாதித்தார்.
மேற்கு இந்திய தீவுகள் வேகப்பந்து வீச்சாளர் வெஸ் ஹால் ( Wes Hall ) குயின்ஸ்லாந்து அணிக்காக விளையாடும் பொழுது வீசிய பந்து , விக்கெட் கீப்பிங் செய்து கொண்டிருந்த வாலி க்ரௌட்டின் தாடையை பதம் பார்க்க அது உடைந்தது. ( Jaw broken)
இங்கிலாந்து வீரர் பிரெட் டிட்மஸ் ( Fred Titmus ) மீது ஆஸ்திரேலிய பீல்டர் வீசிய பந்து தவறுதலாக பட , அந்த பேட்ஸ்மேனை அவுட் செய்ய வாய்ப்பு கிடைத்தும் அவரை கிரௌட் அவுட் செய்யாமல் பெரும் தன்மையோடு மறுபடியும் விளையாட கூறினார் .
பில்லியர்ட்ஸ் ஆட்டத்தில் விருப்பம் வைத்து இருந்தார். கடைசி டெஸ்ட் மேட்சை இங்கிலாந்து அணிக்கு எதிராக மெல்போர்ன் மைதானத்தில் விளையாடினார் ( 11 - 16 / 02 / 1966 ) புகழ் பெற்ற முதல் டை டெஸ்டில் , மேற்கு இந்திய தீவுகள் அணிக்கு எதிராக பங்கு கொண்டவர்.
1964 ஆம் வருடம் மாரடைப்பு ஏற்பட்ட பொழுதும் , இவர் மேற்கு இந்திய தீவுகள் சுற்றுப் பயணத்தில் பங்கு பெற்றார். இவரது டாக்டர் அறிவுறுத்தியும் தொடர்ந்து 39 வயது வரையில் கிரிக்கெட் விளையாடினார்.41 வது வயதில் மாரடைப்பால் இவர் உயிர் பிரிந்தது. (9 / 11 / 1968 )வாலி கிரௌட் விளையாடிய எந்த தொடரையும் ஆஸ்திரே லிய கிரிக்கெட் அணி தோல்வி தழுவியது இல்லை என்பது கூடுதல் சிறப்பு.
இந்த இந்திய கிரிக்கெட் வீரர் டெஸ்டுகளில் விளையாட ஆரம்பித்த பிறகு முதல் தர கிரிக்கெட் ( ரஞ்சி கோப்பை மேட்சுகள்) விளையாடினார். புதி குந்தேரன் ( Budhi Kunderan ) விக்கெட் கீப்பர் பேட்ஸ்மானாக விளையாடியவர். இவரது முழு பெயர் புதிசாகர் கிருஷ்ணப்பா குந்தேரன் ( Budhisagar Krishnappa Kunderan )
1.1.1960 ல் ஆஸ்திரேலிய அணிக்கு எதிராக தனது டெஸ்ட் கிரிக்கெட் விளையாடுவதை துவக்கினார். இவர் விளையாடியது 18 டெஸ்டுக்கள் மட்டுமே. 981 ரன்கள் எடுத்தார்
23 கேட்சுகள் பிடித்தார்.ஸ்டம்பிங்கள் 7. இவராது கடைசி டெஸ்ட் இங்கிலாந்திற்கு எதிராக 13/07/1967.இந்த டெஸ்டில் இவர் இன்ஜினியருடன் ஜோடி சேர்ந்து பேட்டிங்கை துவக்கினார், இந்திய அணிக்காக.
அது மட்டும் அல்லாமல் குந்தேரன் இந்திய அணியின் பவுலிங்கை ஒப்பனிங் பவுலராக துவக்கி வைத்தார். இந்த டெஸ்ட் மேட்சில் மட்டும் தான் இந்திய அணியுன் புகழ் மிக்க நான்கு ஸ்பின் பவுலர்களான பிரசன்னா, பேடி, சந்திரசேகர், வெங்கட்ராகவன் சேர்ந்து விளையாடினார்கள்.
குந்தேரன் ரஞ்சி கோப்பை மேட்ச்சுக்கள் ஆடுவதற்கு முன்பே மூன்று டெஸ்டுகளில் விளையாடி விட்டார்.இவர் முதல் டெஸ்டில் ஹிட் விக்கெட் ( hit wicket ) முறையில் தனது விக்கெட்டை பறி கொடுத்தார். மேக்கிப் ( Meckiff ) பந்து வீசியவர்.ஆனால் தனது துவக்க ரஞ்சி கோப்பை மேட்சில் ரயில்வேஸ் அணிக்காக களம் இறங்கி ஜம்மு - காஷ்மீர் அணிக்கு எதிராக இரட்டை சதம் பதிவு செய்தார்.
இவர் மைசூர் அணிக்காகவும், தென் மண்டல அணிக்கும் ( South Zone ) விளையாடி யவர்.
அதிரடியாக அடித்து ஆடக் கூடியவர். இந்தியாவிற்கு சுற்றுப் பயணம் மேற்கொண்ட ஆஸ்திரேலிய மற்றும் மேற்கு இந்திய தீவுகள் அணிகளுக்கு எதிரான டெஸ்டுகளில் 70 ரன்களுக்கு மேல் அடித்து பாராட்டைப் பெற்றவர்.
இவரது தனி பேட்டிங் திறமை இங்கிலாந்து அணி இந்தியாவிற்கு சுற்றுப் பயணம் மேற்கொண்ட பொழுது முழுமையாக தெரிய வந்தது. 1963-64 ல் மெட்ராஸ் ( இன்றைய சென்னை ) டெஸ்டில் இவர் விளையாடும் 11 ல் முதலில் இல்லை. மேட்ச் ஆரம்பிப்பதற்கு முன்பு காயம் காரணமாக இன்ஜினீயர் விளையாடாததால் இவர் இந்திய இன்னிங்சை ஓபன் செய்தார்.
எதிரணி பவுலிங்கை அடித்து துவம்சம் செய்தார். அவர்கள் அணியில் லார்ட்டர் ( 6 அடி 7 அங்குலம் உயரம்)(David Larter ) என்ற வேக பந்து பவுலர் இருந்தார். பாரி நயிட் (Barry Knight )டிட்மஸ் ( Titmus ) ஸ்பின் பவுலர், ஆகியோர் வீசிய பந்துகளை அட்டகாசமாக ஆடினார்.
முதல் நாள் ஆட்ட முடிவில் 170 * நாட் அவுட். அடுத்த நாள் 192 ரன்களுக்கு அவுட் ஆனார்.
டெஸ்ட் ட்ராவில் முடிவு பெற்றது.
இந்த டெஸ்டில் தான் இந்திய சூழல் பந்து வீசிய பாபு நாட்கர்னி ( Bapu Nadkarni ) 32 ஓவர்கள் வீசி 5 ரன்கள் கொடுத்து 27 மெய் டன் ஓவர்களுடன் உலக சாதனை படைத்தார். அதில் தொடர்ந்தார் போல் 21 மெய் டன் ஓவர்கள்.இந்த தொடரில் குந்தேரன்பேட்டிங் அருமையாக இருந்தது.டெல்லி டெஸ்டில் 100 ரன்கள் எடுத்து அசத்தினார்.
இந்த தொடரில் இவர் எடுத்த மொத்த ரன்கள் 525 , 2 சதம் ,சரசாசரி 52.50.
இவர் டெஸ்டுகள் விளையாடும் சமயத்தில் ஒரு நாள் மற்றும் T - 20 கிரிக்கெட் இல்லை. இருந்திருந்தால் இவர் பொறுத்தமான ஆட்டக் காரராக திகழ்ந்து இருப்பார்.
இவர் ஸ்காட்லண்டில் ( Scotland) குடியேறினார். 1939 ல் இந்தியாவில் பிறந்த இவர், 2006 ல் ஸ்காட்லாண்டில் மறைந்தார். 1980 களில் ஸ்காட்லாண்ட் அணிக்காக பென்சன் & ஹெட்ஜஸ் கோப்பைக்காக விளையாடியுள்ளார்.( Benson & Hedges )
வாசுதேவன் , பெங்களூரு