மும்பை : நமது வாசகர் வாசுதேவன் அனுப்பிய சுவாரசியமான கிரிக்கெட் தகவல்கள் இங்கே -
1965 பார்படாஸ் டெஸ்ட் (Barbados test), ஆஸ்திரேலிய அணிக்கும் , மேற்கு இந்திய தீவுகள் அணிக்கும் இடையே நடைபெற்றது.
பில் லாரி (Bill Lawry), பாப் சிம்சன் (Bob Simpson) ஜோடி ஓப்பனிங் செய்து 382 ரன்கள் குவித்தது. பில் லாரி 210, பாப் சிம்சன் 201 ரன்கள் எடுத்தனர். இருவரும் இரட்டை சதம் எடுத்தனர். பாப் கவுபர் (Bob Cowper) 102 ரன்கள் எடுத்தார். 6 விக்கெட்டுகள் இழந்த ஆஸ்திரேலிய அணி 650 ரன்களுடன் டிக்ளர் செய்தது.
மேற்கு இந்திய அணிக்கு ரோஹன் கன்ஹாய் (Rohan Kannai) 129 ரன்கள், நர்ஸ் (Nurse) 201 ரன்களுடனும் அவர்கள் அணி 573 ரன்கள் குவித்தனர். முடிவில் மேட்ச் ட்ராவில் முடிந்தது.
------------------------------------------

புகழ் மிக்க பேட்ஸ்மேன் ஸர் விவியன் ரிச்சர்ட்ஸ் மற்றும் ஜாவித் மியண்டாட் ஆகிய இருவரையும் பூஜ்ஜியத்தில் (0) டெஸ்ட் மேட்சுகளில் வீழ்த்திய பெருமை நீல் பாஸ்டர் (Neil Foster) என்ற பவுலரையே சாரும். இவர் இங்கிலாந்து அணிக்கு 29 டெஸ்டுகள் மற்றும் 48 ஒரு நாள் போட்டிகளில் விளையாடியுள்ளார். இவருக்கு 9 முறை முழங்காலில் அறுவைசிகிச்சை செய்யப்பட்டு காலில் ப்ளேட்டுகள் வைக்கப் பட்டன.
------------------------------------------
இங்கிலாந்தின் சிறந்த விக்கெட் கீப்பராக இருந்த ஆலன் நாட் (Alan Knott) டெஸ்ட் கிரிக்கெட்டில் ஒய்வு பெற்ற சில வருடங்களுக்கு பிறகு இங்கிலாந்திலிருந்து கிளம்பி சைப்ரஸ் (Cyprus) நாட்டில் குடி பெயர்ந்து விட்டார், கிரிக்கெட் சூழ்நிலையில் இருந்து ஒதுங்கி விட்டார்.
------------------------------------------
ஆஸ்திரேலிய மண்ணில் கிறிஸ்துமஸ் தினத்திற்கு மறு தினம் , 26 டிசம்பர் அன்று விளையாடப் படும் டெஸ்ட் மேட்ச்சிற்கு பாக்சிங் டே டெஸ்ட் (Boxing Day Test) என்று அழைப்பர்.
இந்த டெஸ்ட் போட்டி பொதுவாக மெல்போர்ன் கிரிக்கெட் மைதானத்தில் நடைப்பெறும். சில பாக்ஸிங் டே டெஸ்ட் மேட்சுகள் அடிலெய்ட் மைதானத்தில் இடம் பெற்ற சரித்திரமும் உண்டு. இந்த டெஸ்டில் ஆட்ட நாயகனாக தேர்ந்து எடுக்கப்படும் ஆட்டக்காரருக்கான விருது, ஜானி முல்லாக்ஹ் பதக்கம்.( Johnny Mullagh Medal) என்று அழைக்கப் படுகின்றது.
ஜானி முல்லாக்ஹ் ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணிக்காக ஒரு டெஸ்ட் கூட ஆடியது இல்லை. 1879 ல் விக்டோரியா கிரிக்கெட் டீமில் இங்கிலாந்திற்கு எதிராக ஒரே ஒரு முதல் தர கிரிக்கெட் மேட்சில் பங்கு கொண்டார். அங்கீகரிக்கப் பட்ட டெஸ்ட் போட்டிகள் துவங்குவதற்கு முன்பு, 1868ல் ஒரு கிரிக்கெட் டீமுடன் இங்கிலாந்து சென்று 47 மேட்சுகள் விளையாடினார். அதில் 45 மேட்சுகளில் கேப்டனாக திகழ்ந்தார்.
------------------------------------------
மேற்கு இந்திய தீவுகள் டெஸ்ட் அணியில் முதலில் விளையாடிய இந்திய வம்சாவளியை சேர்ந்த ஆட்டக்காரர், சுழல் பந்து வீச்சாளர் சோன்னி ராமதின் (Sonny Ramadhin).
இவர் வலது கையால் ஆஃப் மற்றும் லெக் பிரேக் (Off break and Leg break) பந்துகளை சிறப்பாக வீசுவார். இங்கிலாந்தின் லார்ட்ஸ் மைதானத்தில் 115 ஓவர்கள் வீசி 152 ரன்கள் கொடுத்து 11 விக்கெட்டுகள எடுத்தார்.
மேற்கு இந்திய தீவு அணி லார்ட்ஸ் மைதானத்தில் தங்கள் முதல் வெற்றியை பதிவு செய்ய இவர் பவுலிங் மிகவும் உதவியது. இவர் பேட்ஸ்மேன்களை நம்பிக்கை இழக்கச் செய்ய, பந்து வீசும் பொழுது ஷார்ட் லெக் (short leg) மற்றும் லெக் ஸ்லிப் (leg slip) என்று மூன்று பீல்டர்களை கால்கள் அருகில் நிறுத்துவார். 43 டெஸ்டுகளில் 158 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார்.
------------------------------------------
வாசுதேவன், பெங்களூரு