மும்பை: கிரிக்கெட்டில் பயன்படுத்தப்படும் பந்துகளின் விலை என்ன? என்ற கேள்வி பலருக்கும் இருக்கலாம். சர்வதேச மற்றும் உள்ளூர் கிரிக்கெட் போட்டிகளில் மூன்று வகையான பந்துகள் பயன்படுத்தப்படுகின்றன. மூன்று நிறுவனங்களால் அந்த பந்துகள் தயாரிக்கப்படுகின்றன என்பது தான் இதில் முக்கியமான வேறுபாடு ஆகும்.
அந்த மூன்று நிறுவனங்கள் - எஸ் ஜி, டியூக் மற்றும் கூக்கபுர்ரா. இதில் எஸ் ஜி வகை பந்துகள் இந்தியாவில் உற்பத்தி செய்யப்படுகின்றன. இந்திய அணி மட்டுமே அந்த பந்தை சர்வதேச போட்டிகளில் பயன்படுத்தி வருகிறது. டியூக் பந்துகள் இங்கிலாந்தில் தயாரிக்கப்படுகின்றன. அதை இங்கிலாந்து மாற்றும் வெஸ்ட் இண்டீஸ் அணிகள் மட்டுமே பயன்படுத்தி வருகின்றன. மற்ற அணிகள் அனைத்துமே ஆஸ்திரேலியாவில் தயாரிக்கப்படும் கூக்கபுர்ரா வகை பந்துகளை பயன்படுத்தி வருகின்றன.

ஒரு நாள் மற்றும் டி20 போட்டிகளுக்கு வெள்ளை நிற பந்துகளும், டெஸ்ட் போட்டிகளுக்கு சிவப்பு நிற பந்துகளும், பகல் இரவு டெஸ்ட் போட்டிகளில் பிங்க் நிற பந்துகளும் பயன்படுத்தப்படுகின்றன. இந்த மூன்று நிறுவனங்களுமே இந்த மூன்று வகையான பந்துகளையும் உற்பத்தி செய்கின்றன.
இதில் எஸ் ஜி மற்றும் டியூக் பந்துகள் கைகளால் தைக்கப்படுகின்றன. கூக்கபுர்ரா பந்துகளில் இரண்டு உட்புற தையல் கைகளாலும், இரண்டு வெளிப்புற தையல் இயந்திரத்தின் உதவியுடனும் செய்யப்படுகின்றன. அதனால், பல ஓவர்களுக்கு பின்னும் அந்த பந்தின் வடிவம் மாறாமல் இருக்கும். அதே சமயம், கூக்கபுர்ரா பந்துகளின் விலை மிக அதிகமாகவும் உள்ளது.
இந்தியாவில் தயாராகும் எஸ் ஜி வகை பந்துகள் மிகவும் குறைவான விலை உடையவை. சர்வதேச போட்டிகளில் பயன்படுத்தப்படும் எஸ் ஜி பந்துகளின் விலை 3000 முதல் 3500 ரூபாய் வரை இருக்கிறது. ரஞ்சி ட்ராபி போன்ற உள்ளூர் போட்டிகளில் பயன்படுத்தப்படும் எஸ் ஜி பந்துகளின் விலை 500 ரூபாய் மட்டுமே.
இங்கிலாந்தின் டியூக் பந்துகளின் விலை 4,000 முதல் 13,000 வரை உள்ளது. உள்ளூர் போட்டிகளில் பயன்படுத்தப்படும் டியூக் பந்தின் விலை 4000 ரூபாயில் இருந்து தொடங்குகிறது. சர்வதேச போட்டிகளில் பயன்படுத்தப்படும் டியூக் பந்தின் விலை 13,000 ரூபாய் வரை உள்ளது.
மற்ற நாடுகள் அனைத்தும் பயன்படுத்தும் ஆஸ்திரேலியாவின் கூக்கபுர்ரா வகை பந்துகளின் விலை மிகவும் அதிகமாகும். ஒரு நாள் போட்டி மற்றும் டி20 போட்டிகளில் பயன்படுத்தப்படும் கூக்கபுர்ரா பந்தின் விலை 19,000 ரூபாய் ஆகும். ஐபிஎல் போன்ற டி20 லீக் தொடர்களில் பயன்படுத்தப்படும் கூக்கபுர்ரா பந்துகளின் விலை 12500 ஆகும்.
டெஸ்ட் போட்டிகளில் பயன்படுத்தப்படும் சிவப்பு நிற கூக்கபுர்ரா பந்தின் விலை 19,000 ஆகும். பகல் இரவு டெஸ்ட் போட்டிகளில் பயன்படுத்தப்படும் பிங்க் நிற கூக்கபுர்ரா பந்தின் விலை 21,000 ஆகும். ஐபிஎல் உட்பட அனைத்து டி20 லீக் தொடர்களிலும் வெள்ளை நிற கூக்கபுர்ரா பந்துகளை பயன்படுத்தப்படுவது குறிப்பிடத்தக்கது. அதற்கு காரணம், இந்த வகை பந்துகளில் அதிக ஸ்விங் செய்ய முடியாது என்பது தான். அதன் மூலம் டி20 போட்டிகளில் பேட்ஸ்மேன்கள் அதிக ரன்கள் குவிக்க வாய்ப்பு கிடைக்கும்.