ஆப்கன் அணியில் வெடித்த சர்ச்சை.. எல்லா பிரச்சினைக்கும் இவர்தான் காரணம்.. போட்டு உடைத்த பயிற்சியாளர்!
லண்டன் : ஆப்கானிஸ்தான் கிரிக்கெட் அணியில் பெருத்த சர்ச்சை வெடித்துள்ளது. உலகக்கோப்பை நடந்து வரும் நிலையில் ஆப்கன் அணிக்குள் பல்வேறு குழப்பங்கள் ஏற்பட்டுள்ளது.
அதன் பின்னணி என்ன என்பது தற்போது வெளியாகி இருக்கிறது. ஆப்கன் அணியின் பயிற்சியாளர் பில் சிம்மன்ஸ் உண்மை என்ன என்பதை பொதுவெளியில் போட்டு உடைத்துள்ளார். இதனால், உலகக்கோப்பை தொடரில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

கேப்டன் மாற்றம்
உலகக்கோப்பை தொடரில் ஆப்கானிஸ்தான் அணி தேர்விலேயே சிக்கல் தொடங்கி விட்டது. உலகக்கோப்பை தொடருக்கு முன் வரை ஆப்கன் அணியை வெற்றிகரமாக வழிநடத்திய கேப்டன் அஸ்கார் ஆப்கன். அவரை திடீரென நீக்கிவிட்டு, குலாப்தின் நயிப்-ஐ கேப்டனாக அறிவித்தனர்.

வலுக்கட்டாயம்
உலகக்கோப்பைக்கு முன் இது தேவையில்லாத மாற்றம். அணியை பாதிக்கும் என ரஷித் கான், முகமது நபி உள்ளிட்ட வீரர்கள் குரல் கொடுத்தனர். ஆனால், ஏதோ சாக்கு போக்கு சொல்லி ஆப்கானிஸ்தான் கிரிக்கெட் போர்டு இந்த மாற்றத்தை வலுக்கட்டாயமாக புகுத்தியது.

ஷாசாத் நீக்கம்
அடுத்து உலகக்கோப்பை தொடர் தொடங்கிய பின் அந்த அணியின் அதிரடி துவக்க வீரர் முஹம்மது ஷாசாத் காயமடைந்ததாக கூறி அணியில் இருந்து நீக்கினர். ஆனால், தான் விளையாட முடியாத அளவு காயமடையவில்லை. வேண்டுமென்றே என்னை அணியில் இருந்து நீக்கி விட்டார்கள் என வீடியோ வெளியிட்டார் ஷாசாத்.

மோசமான ஆட்டம்
இப்படி அந்த அணியை சுற்றி சர்ச்சைகள் ஒரு பக்கம் அதிகரிக்க, அதிகரிக்க அந்த அணியின் செயல்பாடுகளும் மோசமாகிக் கொண்டே சென்றது. ஆப்கானிஸ்தான் அணி களத்தில் போராடுவதை பார்க்கவென்றே தனி ரசிகர் கூட்டம் உண்டு. ஆனால், அந்த அணி போராட்டமே இல்லாமல் போட்டிகளில் தோல்வி அடைந்து வந்தது.

இங்கிலாந்து போட்டி
இங்கிலாந்து அணிக்கு எதிரான போட்டியில், அந்த அணியின் முக்கிய பந்துவீச்சாளர் ரஷித் கான் 9 ஓவர்களில் 110 ரன்கள் கொடுத்து மிக மோசமான உலகக்கோப்பை பந்துவீச்சை பதிவு செய்தார்.

பயிற்சியாளர் மீது குற்றச்சாட்டு
இதையடுத்து, ஆப்கானிஸ்தான் கிரிக்கெட் போர்டை சேர்ந்த தவ்லத் அஹ்மத்சாய், பயிற்சியாளர் பில் சிம்மன்ஸ் வீரர்களை சரியாக தயாராக்கவில்லை என குற்றம் சுமத்தினார். அதற்கு கடும் பதிலடி கொடுத்துள்ளார் பில் சிம்மன்ஸ். நடந்த எல்லா பிரச்சனைக்கும் யார் காரணம் என போட்டு உடைத்துள்ளார்.
சிம்மன்ஸ் பதிலடி
பயிற்சியாளர் பில் சிம்மன்ஸ் தன் பதிவில், தவ்லத் அஹ்மத்சாய் உலகக்கோப்பைக்கு அணி தயாராவதிலும், அஸ்கார் ஆப்கனை நீக்குவதில் என்ன பங்கு வகித்தார் என்பதையும் ஆப்கானிஸ்தான் மக்களிடம் நான் சொல்வேன் என கூறி இருக்கிறார். ஆப்கானிஸ்தான் அணிக்குள் நடந்து வந்த மோதல்களை வெளிச்சத்துக்கு கொண்டு வந்துள்ளார் சிம்மன்ஸ். அடுத்து என்ன நடக்குமோ?


Click it and Unblock the Notifications