அம்பதி ராயுடு எடுத்த ரன்களை அவங்க 5 பேரும் சேர்ந்து கூட எடுக்கவில்லை.. அந்த 5 பேரை விளாசிய கம்பீர்!
Recommended Video
மும்பை : முன்னாள் வீரர் கௌதம் கம்பீர், இந்திய கிரிக்கெட் தேர்வுக் குழு தான் அம்பதி ராயுடு ஓய்வு முடிவுக்கு காரணம் என்று கூறி அவர்களை கடுமையாக விமர்சித்தார்.
இந்திய வீரர் அம்பதி ராயுடு தொடர் புறக்கணிப்பால் கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெற முடிவு செய்து பிசிசிஐக்கு கடிதம் எழுதியுள்ளார்.
அம்பதி ராயுடுவுக்கு உலகக்கோப்பை அணியில் இடம் மறுக்கப்பட்டு வந்தது அனைவருக்கும் தெரிந்த ஒன்று தான். உலகக்கோப்பை தொடருக்கு முன் வரை இந்திய அணியில் இருந்தார் ராயுடு.

ராயுடு இல்லை
கடைசியாக ஆடிய ஆஸ்திரேலிய ஒருநாள் போட்டிகள் தொடரில் மூன்று போட்டிகளில் சரியாக ஆடவில்லை என காரணம் கூறப்பட்டு, அணியில் இருந்து நீக்கப்பட்டார். அதன் பின் அவருக்கு உலகக்கோப்பை தொடருக்கான இந்திய அணியில் வாய்ப்பு கிடைக்கவில்லை.

நழுவிய வாய்ப்புகள்
எனினும், உலகக்கோப்பை அணியின் மாற்று வீரர்கள் பட்டியலில் மாற்று பேட்ஸ்மேன்களாக ரிஷப் பண்ட்டுடன், அம்பதி ராயுடுவும் இடம் பெற்றார். இந்திய அணியில் இரண்டு வீரர்கள் காயம் காரணமாக விலகினர். தவான் விலகிய போது, ரிஷப் பண்ட்டுக்கு வாய்ப்பு வழங்கப்பட்டது.

பட்டியலில் இல்லாத வீரர்
அதன் பின் விஜய் ஷங்கர் விலகிய போது, அம்பதி ராயுடுவை அழைத்து இருக்க வேண்டும். அதற்கு மாறாக சர்வதேச ஒருநாள் போட்டிகளில் ஆடி இருக்காத மயங்க் அகர்வாலுக்கு அணியில் சேர்க்கப்பட உள்ளார்.

ஓய்வு முடிவு
இதனால், மனமுடைந்தார் அம்பதி ராயுடு. தொடர்ந்த புறக்கணிப்புகளால் மனம் வெறுத்த அவர், அனைத்து வித கிரிக்கெட் போட்டிகளில் இருந்தும் ஓய்வு பெற்றுக் கொள்வதாக பிசிசிஐக்கு கடிதம் அனுப்பி இருக்கிறார். அவரது இந்த சோக முடிவைக் கண்டு கௌதம் கம்பீர் பொங்கி இருக்கிறார்.

கம்பீர் கோபம்
இந்த உலகக்கோப்பை தொடரில் தேர்வுக் குழு மிகப் பெரிய ஏமாற்றத்தை அளித்துள்ளது. அம்பதி ராயுடு ஓய்வு பெற்றதற்கு தேர்வுக் குழு தான் காரணம். அவர்களது முடிவு எடுக்கும் திறமையை தான் நாம் குற்றம் சொல்ல வேண்டும் என்று கடும் விமர்சனத்தை முன் வைத்தார் கம்பீர்.

5 பேரும் சேர்ந்தால் கூட..
ஐந்து தேர்வுக்குழு உறுப்பினர்களும் சேர்த்தாலும் கூட அம்பதி ராயுடு எடுத்த ரன்களை அவர்கள் எடுக்கவில்லை. அவரது ஓய்வுக்கு நான் மிகவும் வருந்துகிறேன். ராயுடுவின் இடத்தை எடுத்துக் கொண்டவர்களும் வருந்துவார்கள் என ரிஷப் பண்ட், மயங்க் அகர்வாலை சுட்டிக் காட்டி இருக்கிறார் கம்பீர்.


Click it and Unblock the Notifications