எல்லாமே இங்கிலாந்துக்கு “சாதகம்”.. இருந்தும் கோபப்படாமல் வலியை மறைத்துக் கொண்ட கேன் வில்லியம்சன்!
Recommended Video
லண்டன் : தன் வாழ்வின் மிக கடினமான பத்திரிக்கையாளர் சந்திப்பை முடித்து விட்டு கேன் வில்லியம்சன் சென்ற போது, பத்திரிக்கையாளர்களின் அந்த கைதட்டல்கள் அவர் காதுகளில் ரீங்காரமிட்டிருக்கும்.
2019 உலகக்கோப்பை தொடரின் தொடர் நாயகன் விருது வென்ற நியூசிலாந்து அணியின் கேப்டனுக்கு அது ஆறுதலாகவும் அமைந்து இருக்கும்.
தொடர்ந்து இரண்டாவது முறையாக அவரது அணி உலகக்கோப்பை இறுதிப் போட்டியில் தோல்வி அடைந்து வெளியேறி இருக்கிறது நியூசிலாந்து. அதுவும் இந்த முறை கண்ணுக்கு தெரியாத வித்தியாசத்தில் கோப்பையை இழந்தது.

வெற்றி கிடையாது
உண்மையில், நியூசிலாந்து அணி தோல்வி அடையவில்லை. இங்கிலாந்து உலகக்கோப்பையை வென்றது. ஆனால், இறுதிப் போட்டியை அவர்கள் வெல்லவில்லை. இங்கிலாந்து - நியூசிலாந்து, இரு அணிகளும் இரண்டு முறை போட்டியில் டை செய்தன. முதன் முறை நிர்ணயிக்கப்பட்ட 50 ஓவர்களிலும், அடுத்து, முதன்முறையாக ஒருநாள் போட்டிகளில் சேர்க்கப்பட்ட சூப்பர் ஓவரிலும் போட்டி டை ஆனது.

பவுண்டரி கணக்கு
இந்த நிலையில், போட்டியின் வெற்றியாளரை தீர்மானிக்க, முதலில் 50 ஓவர்களில் அடித்த பவுண்டரிகளும், பின்னர் சூப்பர் ஓவரில் அடித்த பவுண்டரிகளும் சேர்த்து கணக்கில் எடுத்துக் கொள்ளப்பட்டது. அதன் அடிப்படையில், இங்கிலாந்து 26 - நியூசிலாந்து 17 பவுண்டரிகள் அடித்து இருந்தன. அதன்படி இங்கிலாந்து உலகக்கோப்பையை வென்றது. கடந்த 11 உலகக்கோப்பை தொடர்களில் இது போன்ற நிகழ்வு நடந்ததே இல்லை.

இங்கிலாந்துக்கு சாதகம்
இங்கிலாந்துக்கு சாதகமாக பிட்ச் இருந்ததாக அந்த அணியின் கேப்டன் இயான் மார்கன் குறிப்பிட்டார். ஆனால், அது மட்டுமல்ல இன்னும் சில விஷயங்களும் இங்கிலாந்து அணிக்கு சாதகமாக சென்றன. போட்டியின் முதல் பந்தில் ஜேசன் ராய்க்கு கொடுக்கப்பட வேண்டிய எல்பிடபுள்யூ அவுட் கொடுக்கப்படவில்லை. பென் ஸ்டோக்ஸ் பேட்டில் பட்ட ஓவர் த்ரோ பந்து பவுண்டரி சென்றது.

எதற்கும் அசரவில்லை
பலவீனமான மனிதர்கள் என்றால், இதில் நியாயமில்லை என்பதை கண்டு பொங்கி இருப்பார்கள். குறைந்த பட்சம் தங்கள் எதிர்ப்பையாவது கூறி இருப்பார்கள். ஆனால், கேன் வில்லியம்சன் எதற்கும் அசரவில்லை. தன் வலியை மறைத்துக் கொள்ள முயன்றார். லேசாக ஜோக் அடித்தார். ஆனாலும், அவரது வலியை நாம் உணர முடிந்தது.

இரண்டாம் இடம் மட்டுமே!
நியூசிலாந்து அணி, இங்கிலாந்துக்கு சரி சமமாக இறுதிப் போட்டியில் நின்றது. எந்த இடத்திலும் விட்டுக் கொடுக்கவில்லை. உலகக்கோப்பையில் இரண்டாம் இடம் என்ற பெயர் தவிர வேறு எதுவும் அவர்களுக்கு கிடைக்கவில்லை. இருந்தும் வில்லியம்சன் எதற்கும் அசரவில்லை.

கோபம் இல்லை
அந்த சந்திப்பில் பத்திரிக்கையாளர்கள் கேட்ட பல சர்ச்சை கேள்விகளுக்கு கேன் பதில் அளிக்காமல் மழுப்பினார். ஒரு வேளை தனிப்பட்ட சந்திப்பாக இருந்தால், அவர் பெரிதாக, மனதில் இருந்த வலியை பேசி இருக்கலாம். ஆனால், கேன் "எங்களுக்கு கோபம் இல்லை. ஏமாற்றம் தான் உள்ளது" என்றார். இவரைப் போன்ற ஒரு கிரிக்கெட் வீரர் இனி கிடைப்பது மிகவும் அரிது.


Click it and Unblock the Notifications