கோலி வரிசையா 4 அரைசதம் அடித்து சூப்பர் சாதனை செய்தாலும் கவலையில் இருக்கும் ரசிகர்கள்.. என்ன ஆச்சு?
Recommended Video
மான்செஸ்டர் : விராட் கோலி உலகக்கோப்பை தொடரில் தொடர்ந்து சிறப்பாக ஆடி அசத்தி வருகிறார்.
கடந்த நான்கு போட்டிகளில் அரைசதம் அடித்து புதிய சாதனை ஒன்றையும் செய்துள்ளார் கோலி. இருந்தாலும் விராட் கோலி ரசிகர்கள் கவலையில் உள்ளனர்.

சிறப்பான ஆட்டம்
வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான போட்டியில் விராட் கோலி அபாரமாக ஆடினார். இந்திய வீரர்கள் ரன் குவிப்பதில் சிரமம் இருந்தாலும், கோலி மட்டும் நிலைத்து நின்று நீண்ட நேரம் ஆடி அரைசதம் கடந்தார். இது அவரின் 53வது ஒருநாள் போட்டி அரைசதம் ஆகும். அரைசதம் அடித்த கோலி 72 ரன்களில் ஆட்டமிழந்தார்.

அரைசதத்தில் சாதனை
இந்த அரைசதம் மூலம் உலகக்கோப்பை தொடரில் தொடர்ந்து நான்கு போட்டிகளில் அரைசதம் அடித்துள்ளார் கோலி. உலகக்கோப்பை தொடரில் தொடர்ந்து நான்கு அரைசதம் அடித்த முதல் இந்திய கேப்டன், ஆரோன் பின்ச், கிரேம் ஸ்மித்துக்கு பின் இந்த சாதனையை செய்யும் மூன்றாவது கேப்டன் என்ற பெருமையை பெற்றார்.

இந்திய அளவில் சாதனை
மேலும், இந்திய பேட்ஸ்மேன்களில் இந்த சாதனையை செய்யும் மூன்றாவது வீரர் ஆவார் கோலி. இதற்கு முன்பு 1987 உலகக்கோப்பை தொடரில் நவ்ஜோத் சிங் சித்து, 1996 மற்றும் 2003 உலகக்கோப்பை தொடரில் சச்சின் இதே சாதனையை செய்துள்ளார்.

ரசிகர்கள் கவலை
இப்படி கோலி ஒருபுறம் சாதனை செய்து குவித்தாலும், சமூக வலை தளங்களில் கோலி ரசிகர்கள் புலம்பிக் கொண்டு இருந்தார்கள். இந்த புலம்பலுக்கு காரணம், சதம்! ஆம், கோலி என்றாலே சதம் தான். அரைசதம் எல்லாம் லிஸ்டிலேயே இல்லை என்கிறார்கள் அவரது ரசிகர்கள்.

ஒரு சதம் கூட இல்லை
இந்த உலகக்கோப்பை தொடரில் ஐந்து போட்டிகளில் நான்கு அரைசதம் அடித்த விராட் கோலி, இதுவரை ஒரு சதம் கூட அடிக்கவில்லை. அதனால், அவரது ரசிகர்கள் கவலையில் இருக்கிறார்கள். இந்த உலகக்கோப்பையில் கோலி அடித்த ரன்கள் 18, 82, 77, 67, 72 ஆகும்.

சதம் அடிப்பாரா கோலி?
மற்ற இந்திய அணி வீரர்கள் வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிராக நிதானமாக ரன் குவிப்பதாக பொதுவான ரசிகர்கள் புகார் கூறிக் கொண்டு இருந்த போது, அதே சமூக வலைதளத்தில் கோலி ரசிகர்கள் சதத்தை பற்றி கவலைப்பட்டுக் கொண்டு இருந்தது வேடிக்கையாக இருந்தது. கோலி அடுத்து வரும் போட்டிகளில் சதம் அடிப்பாரா?


Click it and Unblock the Notifications