கார் பரிசளித்த ஆனந்த் மஹிந்திராவுக்கு ஆச்சரியம் கொடுத்த டி.நடராஜன்... குவிந்து வரும் பாராட்டு!
சேலம்: தனக்கு கார் பரிசளித்த ஆனந்த் மஹிந்திராவுக்கு தானும் பதிலுக்கு ஒரு பரிசு அனுப்பி வைத்து அசத்தியுள்ளார் டி.நடராஜன்.
ஆஸ்திரேலியாவுக்கு எதிரான தொடரில் சிறப்பாக செயல்பட்டதற்காக டி.நடராஜனுக்கு ஆனந்த் மஹிந்திரா பரிசு ஒன்றை கொடுத்திருந்தார்.
இந்நிலையில் தன்னை ஊக்குவித்து பரிசளித்தவருக்கு தனது சார்பில் பதில் பரிசு அளித்து அசத்தியுள்ளார் டி.நடராஜன்
அசத்தல் அறிமுகம்
இந்திய கிரிக்கெட் அணியில் குறுகிய காலத்திற்குள் அனைவரின் மனதையும் கவர்ந்தவர் டி.நடராஜன். தமிழகத்தின் சேலம் மாவட்டத்தை சேர்ந்த இவர், கடந்த ஆண்டு ஐபிஎல் தொடரில் சிறப்பாக செயல்பட்டு அனைவரின் பாராட்டையும் பெற்றார். பின்னர் ஆஸ்திரேலியா தொடர் மற்றும் இங்கிலாந்து தொடரில் பலரது கவனத்தை ஈர்த்துள்ளார்.

பரிசு
ஆஸ்திரேலியாவுக்கு எதிரான தொடரில் அறிமுக வீரர்கள் டி.நடராஜன், முகமது சிராஜ், வாஷிங்டன் சுந்தர், சுப்மன் கில், நவ்தீப் சைனி, ஷர்துல் தாக்கூர் ஆகியோர் அபார ஆட்டத்தை வெளிப்படுத்தினர். அவர்களை பாராட்டிய மஹிந்திர குழும தலைவர் ஆனந்த் மஹிந்திரா, தனது சொந்த செலவில் மஹிந்திரா தார் காரை பரிசளிப்பதாக அறிவித்தார்.

நடராஜன் ட்வீட்
இந்நிலையில் தான் கூறியபடியே அனைவருக்கும் தார் காரை வழங்கி வருகிறார். காரின் புகைப்படத்தை இணையத்தில் பகிர்ந்துள்ள டி.நடராஜன், இந்தியாவுக்காக கிரிக்கெட் விளையாடுவது எனது வாழ்க்கையின் மிகப்பெரிய பாக்கியம். அற்புதமான நபர்களின் ஆதரவும் ஊக்கமும், எனக்கு நல்ல வழிகளைக் கண்டறிய உதவுகிறது. தற்போது எனது எழுச்சி அசாதாரண பாதையில் உள்ளது என்று பதிவிட்டுள்ளார்.

பரிசு
நான் அழகான மஹிந்திரா தார் காரை ஓட்டி பார்த்தேன், எனது ஆட்டத்தை பாராட்டி, ஊக்கப்படுத்தும் வகையில் கார் பரிசாக வழங்கிய ஆனந்த் மஹிந்திராவுக்கு நன்றி என டி.நடராஜன் தெரிவித்துள்ளார். மேலும், அவர் தான் ஆஸ்திரேலிய தொடரில் பயன்படுத்திய ஜெர்ஸியில் கையெழுத்து போட்டு ஆனந்த் மஹிந்திராவுக்கு பதில் பரிசாக டி.நடராஜன் அனுப்பி வைத்துள்ளார். அவரின் இந்த செயல் அனைவரின் பாராட்டையும் பெற்று வருகிறது.


Click it and Unblock the Notifications