சிஎஸ்கே அணியில் தோனிக்கு என்ன வேலை? 8வது இடத்தில் களமிறங்குவது நியாயமா.. ஏபி டிவில்லியர்ஸ் அதிரடி
சென்னை: 2026 ஐபிஎல் கிரிக்கெட் தொடர் தொடங்கவுள்ள நிலையில், சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் எம்எஸ் தோனியின் தற்போதைய பங்கு குறித்து தென்னாப்பிரிக்காவின் முன்னாள் ஜாம்பவான் ஏபி டிவில்லியர்ஸ் சில முக்கியமான கேள்விகளை எழுப்பியுள்ளார். வெறும் பெயருக்காக அணியில் இருப்பதை விட பொறுப்புகளை கையில் எடுக்க வேண்டும் என அவர் அதிரடியாக விமர்சித்துள்ளார்.
கடந்த 2008 ஆம் ஆண்டு முதல் சிஎஸ்கே அணியின் முகமாகவும், மிகச்சிறந்த மேட்ச் வின்னராகவும் திகழும் தோனிக்கு தற்போது 44 வயதாகிறது. கடந்த 2024 ஆம் ஆண்டிலேயே கேப்டன் பதவியை ருதுராஜ் கெய்க்வாட்டிடம் அவர் ஒப்படைத்துவிட்டார். தற்போது சஞ்சு சாம்சனும் சிஎஸ்கே அணியில் இணைந்துள்ளதால், விக்கெட் கீப்பிங் பொறுப்பும் அவரிடம் செல்ல அதிக வாய்ப்புள்ளது. மேலும், இம்பேக்ட் பிளேயர் விதிமுறையை பயன்படுத்தி தோனி 8 அல்லது 9 வது வரிசையில் களமிறங்கி கடைசி சில பந்துகளை மட்டுமே எதிர்கொள்வார், ஃபீல்டிங் செய்யக்கூட வரமாட்டார் எனவும் கூறப்படுகிறது.

இதுகுறித்து ஜியோ ஹாட்ஸ்டார் தளத்தில் பேசிய டிவில்லியர்ஸ், எம்எஸ் தோனி 8 அல்லது 9 வது வீரராக களமிறங்கி விளையாடுவதில் தனக்கு துளியும் உடன்பாடு இல்லை என தெரிவித்துள்ளார். அவர் கேப்டனாகவும் இல்லாத நிலையில், மிகவும் காலதாமதமாக களமிறங்குவது அணியில் ஒரு இடத்தை தவறான காரணங்களுக்காக ஆக்கிரமிப்பது போல் உள்ளது. ஒரு ஜாம்பவானான தோனி அந்த இடத்தில் விளையாடுவது நியாயமே கிடையாது என அதிரடியாக கூறியுள்ளார்.
மேலும் பேசிய அவர், தோனி 2026 ஐபிஎல் தொடரில் விளையாட வேண்டும் என்றால் அவர் கட்டாயம் தனது பேட்டிங் வரிசையில் முன்னேறி வர வேண்டும். அவர் 6 வது இடத்திலோ அல்லது 5 மற்றும் 4 வது இடத்திலோ களமிறங்குவதை நான் பார்க்க விரும்புகிறேன். கடினமான சூழ்நிலைகளில் அதிக அழுத்தங்களை அவர் ஏற்றுக்கொண்டு விளையாட வேண்டும். சிஎஸ்கே அணியின் எதிர்கால விக்கெட் கீப்பிங் பொறுப்பை ஏற்க சஞ்சு சாம்சன் மிகச் சரியான நபராக இருப்பார் எனவும் டிவில்லியர்ஸ் தனது கருத்தை தெரிவித்துள்ளார்.


Click it and Unblock the Notifications