மும்பை: இங்கிலாந்து அணிக்கு எதிரான டி20 தொடருக்கான இந்திய அணியில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியை சேர்ந்த ஆல் - ரவுண்டர் சிவம் துபேவுக்கு வாய்ப்பு மறுக்கப்பட்டு உள்ளது. இது சிவம் துபேவுக்கு பெரும் ஏமாற்றமாக அமைந்து இருக்கிறது.
சிவம் துபே 2024 டி20 உலகக் கோப்பை வென்ற இந்திய அணியில் இடம் பிடித்து அனைத்து போட்டிகளிலும் ஆடினார். அவர் உலகக்கோப்பையில் லீக் சுற்றில் சுமாராக ஆடினாலும், நாக் அவுட் போட்டியில் கை கொடுத்து இருந்தார். அதனால் அவர் இந்திய ஒருநாள் அணியிலும் கூட தேர்வு செய்யப்பட்டார்.

அவர் வேகப் பந்துவீச்சாளராகவும் சில ஓவர்கள் வீசுவார் என்பதால் ஹர்திக் பாண்டியாவுக்கு மாற்று வீரர் எனவும் பாராட்டப்பட்டு வந்தார். கடைசியாக இந்திய அணி விளையாடிய இலங்கை அணிக்கு எதிரான மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் அவர் பங்கேற்றார்.
ஆனால், அந்த தொடரில் அவரால் பெரிய தாக்கத்தை ஏற்படுத்த முடியவில்லை. அதன் பின் அவருக்கு காயம் ஏற்பட்டது. அதனால் அவரை வங்கதேசம் மற்றும் தென்னாப்பிரிக்கா தொடர்களில் ஆடிய இந்திய டி20 அணியில் தேர்வு செய்யவில்லை. தற்போது அவர் காயத்தில் இருந்து மீண்டு வந்து விட்டார். எனினும், அவருக்கு இங்கிலாந்து டி20 தொடருக்கான அணியில் இடம் மறுக்கப்பட்டு இருக்கிறது.
அதே சமயம் தற்போது அறிவிக்கப்பட்டு இருக்கும் டி20 அணியில் வேகப் பந்துவீச்சு ஆல் ரவுண்டர்களாக ஹர்திக் பாண்டியா மற்றும் நிதிஷ் குமார் ரெட்டி தேர்வு செய்யப்பட்டு உள்ளனர். இதன் மூலம், சிவம் துபேவுக்கு இனி இந்திய அணியில் இடம் கிடைக்காது என்ற நிலை உருவாகி உள்ளது.
நிதிஷ் குமார் சமீபத்தில் ஆஸ்திரேலியாவுக்கு எதிரான கடினமான டெஸ்ட் தொடரில் சிறப்பாக பேட்டிங் செய்து ரன் குவித்து இருந்தார். எனவே, அவருக்கு டி20 அணியில் வாய்ப்பு அளிக்கப்பட்டு உள்ளது. தொடர்ந்து அவரை சாம்பியன்ஸ் டிராபி அணியில் மாற்று வீரராக தேர்வு செய்ய உள்ளதாகவும் பிசிசிஐ வட்டாரத்தில் கூறப்படுகிறது. அதனால், சிவம் துபே மீண்டும் இந்திய அணியில் இடம் பெறுவது கடினமான விஷயமாக மாறி உள்ளது.