சென்னை : தேர்தல் பத்திரங்கள் மூலமாக சிஎஸ்கே அணி தரப்பிலும், அதன் தாய் நிறுவனமான இந்தியா சிமெண்ட்ஸ் நிறுவனம் தரப்பிலும் திமுகவுக்கு ரூ.8 கோடியும், அதிமுகவுக்கு ரூ.5 கோடியும் நன்கொடை வழங்கி இருப்பது தெரிய வந்துள்ளது.
14 ஐபிஎல் சீசன்களில் விளையாடியுள்ள சிஎஸ்கே அணி இதுவரை 5 முறை சாம்பியன் பட்டம் வென்றுள்ளது. 2008 முதல் தற்போது வரை சிஎஸ்கே அணியின் கேப்டனாக தோனி செயல்பட்டு வருகிறார். இந்த அணியின் உரிமையாளராக இந்தியா சிமெண்ட்ஸ் நிறுவனத்தின் தலைவரும், பிசிசிஐ முன்னாள் தலைவருமான ஸ்ரீனிவாசன் செயல்பட்டு வருகிறார்.

சிஎஸ்கே அணிக்கு ஏற்கனவே 2016 மற்றும் 2017 ஆகிய ஆண்டுகளில் விளையாட தடை விதிக்கப்பட்டது. சூதாட்ட புகாரில் சிக்கியதால், சிஎஸ்கே மற்றும் ராஜஸ்தான் அணிகளுக்கு லோதா குழு தடை விதித்தது. இதன் காரணமாக தோனி, அஸ்வின் உள்ளிட்ட வீரர்கள் 2 ஆண்டுகள் புனே அணிக்காக ஒப்பந்தம் செய்யப்பட்டனர்.
அதன்பின் 2018ஆம் ஆண்டு கம்பேக் கொடுத்த சிஎஸ்கே அணி 3 முறை சாம்பியன் பட்டத்தை வென்று, மீண்டும் உச்சத்திற்கு வந்துள்ளது. இந்த நிலையில் இந்தியாவில் நாடாளுமன்றத் தேர்தல் நடக்கவுள்ள நிலையில், தேர்தல் பத்திரங்கள் விவகாரம் மக்களிடையே விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது. ஏற்கனவே தேர்தல் பத்திரங்கள் தொடர்புடைய சில தகவல்களை வெளியிட்ட தேர்தல் ஆணையம், இன்று புதிய தகவல்களை வெளியிட்டுள்ளது.
அந்த வகையில் தமிழ்நாட்டைச் சேர்ந்த கட்சிகள் தேர்தல் பத்திரங்கள் மூலமாக எவ்வளவு நிதி பெற்றுள்ளன என்பது குறித்து தெரிய வந்துள்ளது. அதன்படி திமுக தரப்பில் தேர்தல் பத்திரங்கள் வாயிலாக ரூ.656.5 கோடி கிடைத்துள்ளது. அதேபோல் அதிமுகவுக்கு ரூ.6 கோடி தேர்தல் பத்திரங்கள் மூலமாக கிடைத்துள்ளது. இதில் சிஎஸ்கே அணியின் உரிமையாளர் ஸ்ரீனிவாசனின் இந்தியா சிமெண்ட்ஸ் நிறுவனம் தரப்பில் திமுகவுக்கு ரூ.8 கோடி நிதி வழங்கப்பட்டுள்ளது.
அதேபோல் அதிமுகவுக்கு அளிக்கப்பட்டுள்ள ரூ.6 கோடியில் ரூ.5 கோடியை சிஎஸ்கே அணி வழங்கியுள்ளது தெரிய வந்துள்ளது. 2019ஆம் ஆண்டு ஏப்ரல் 12ஆம் தேதி சிஎஸ்கே அணி நிர்வாகம் தரப்பில் அதிமுகவுக்கு நிதி அளிக்கப்பட்டுள்ளது தெரிய வந்துள்ளது. டிஎன்சிஏ தலைவராக முன்னாள் அமைச்சர் பொன்முடி மகன் அசோக் சிகாமணி செயல்பட்டு வரும் நிலையில், தற்போது சிஎஸ்கே அணி நிர்வாகம் திமுகவுடன் நெருக்கம் காட்டி வருவது குறிப்பிடத்தக்கது.