அகர்தலா: இந்திய கிரிக்கெட் அணியில் இடம்பிடிக்கப் போராடி வரும் ஆல்-ரவுண்டரும், ஐபிஎல் தொடரில் சென்னை சூப்பர் கிங்ஸ் (CSK) அணிக்காக விளையாடி வருபவருமான விஜய் சங்கர், ரஞ்சிக் கோப்பையில் தனது புதிய அணிக்காக அபாரமான சதமடித்து அனைவரது கவனத்தையும் ஈர்த்துள்ளார்.
இந்த சீசனில் தமிழக அணியிலிருந்து விலகி திரிபுரா அணிக்காக விளையாடத் தொடங்கிய அவர், அசாம் அணிக்கு எதிரான போட்டியில் தனது கிரிக்கெட் வாழ்வின் மிகச்சிறந்த ஸ்கோரான 150 ரன்களைக் குவித்து ஆட்டமிழக்காமல் இருந்தார்.
அகர்தலாவில் நடைபெற்று வரும் ரஞ்சிக் கோப்பை எலைட் பிரிவு 'சி' ஆட்டத்தில் திரிபுரா மற்றும் அசாம் அணிகள் மோதி வருகின்றன. இதில் முதலில் பேட்டிங் செய்த திரிபுரா அணி, ரன் மலையைக் குவித்தது. அந்த அணியின் மற்றொரு முக்கிய வீரரான ஹனுமா விஹாரி 156 ரன்கள் விளாச, ஏழாவது விக்கெட்டுக்குக் களமிறங்கிய விஜய் சங்கர் அதிரடியில் மிரட்டினார்.

தனது புதிய அணிக்காக முதல் பெரிய இன்னிங்ஸை ஆடிய விஜய் சங்கர், வெறும் 143 பந்துகளை மட்டுமே சந்தித்து 150 ரன்களை விளாசி இறுதிவரை ஆட்டமிழக்காமல் இருந்தார். அவரது இந்த அதிரடி ஆட்டத்தில் 14 பவுண்டரிகளும், 4 சிக்ஸர்களும் அடங்கும். இவர்களின் அபாரமான ஆட்டத்தால், திரிபுரா அணி 7 விக்கெட் இழப்பிற்கு 602 ரன்கள் என்ற இமாலய ஸ்கோரை எட்டிய நிலையில் டிக்ளேர் செய்தது.
இதனைத் தொடர்ந்து தனது முதல் இன்னிங்ஸைத் தொடங்கிய அசாம் அணி, திரிபுரா அணியின் பந்துவீச்சைச் சமாளிக்க முடியாமல் தடுமாறியது. இரண்டாம் நாள் ஆட்டநேர முடிவில், அசாம் அணி 4 விக்கெட்டுகளை இழந்து வெறும் 67 ரன்கள் மட்டுமே எடுத்துத் தடுமாறி வருகிறது.
திரிபுரா அணி சார்பில் வேகப்பந்து வீச்சாளர் அபிஜித் சர்க்கார் 10 ரன்களை மட்டுமே விட்டுக்கொடுத்து 2 விக்கெட்டுகளை வீழ்த்தி அசத்தினார். அசாம் அணி இன்னும் 535 ரன்கள் பின்தங்கியுள்ள நிலையில், திரிபுரா அணி இந்த ஆட்டத்தில் வெற்றி பெறுவதற்கான வாய்ப்புகள் பிரகாசமாகியுள்ளன.
'3டி வீரர்' என வர்ணிக்கப்பட்டு இந்திய அணியில் இடம்பிடித்த விஜய் சங்கர், கடந்த சில ஆண்டுகளாக ஃபார்ம் இன்றித் தவித்து வந்தார். இந்த நிலையில், இந்த சீசனில் தனது சொந்த மாநிலமான தமிழ்நாடு அணியிலிருந்து விலகி, திரிபுரா அணிக்காக விளையாட ஒப்பந்தம் ஆனார். இந்த முடிவு பலராலும் விமர்சிக்கப்பட்ட நிலையில், தனது திறமையை மீண்டும் நிரூபிக்கும் வகையில் இந்த சாதனை சதத்தை அவர் பதிவு செய்துள்ளார்.
ஐபிஎல் தொடரில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் கடந்த ஆண்டு விஜய் ஷங்கர் சொதப்பலாக ஆடி இருந்தார். அதனால் அந்த அணியும் அவரை ஏலத்துக்கு முன் விடுவிக்கும் என கூறப்படுகிறது. இந்த நிலையில் விஜய் ஷங்கர் அடித்துள்ள இந்த 150 ரன்கள் சிஎஸ்கே நிர்வாகத்தின் முடிவில் மாற்றத்தை ஏற்படுத்துமா? என்ற கேள்வியும் எழுந்துள்ளது.