CSK: சிக்சர் மன்னன் ஆயுஷ் வர்தக்கை பயிற்சிக்கு அழைத்த சிஎஸ்கே.. அதிரடி ஆல்ரவுண்டரை ஒப்பந்தம் செய்ய திட்டம்
சென்னை: மும்பையைச் சேர்ந்த 21 வயது இளம் ஆல்ரவுண்டர் ஆயுஷ் வர்தக்கை சென்னை சூப்பர் கிங்ஸ் அணி, mid-season சோதனைகளுக்காக அழைத்துள்ளது. "சிக்ஸர் கிங்" என்றழைக்கப்படும் இவரது உள்ளூர் சாதனைகளுக்காக தற்போது சமூக வலைத்தளங்களில் பரவலாகப் பேசப்பட்டு வருகிறார்.
திங்கட்கிழமை இரவு சென்னைக்கு வந்த 21 வயது வர்தக், சோதனைகளுக்கு உட்படுத்தப்படுவார். காயமடைந்த வீரர்களுக்கு மாற்று வீரர்களைத் தேடும் ஐந்து முறை சாம்பியனான சிஎஸ்கேவின் இந்த அழைப்பு, தற்போது பெரும் எதிர்பார்ப்பை உருவாக்கியுள்ளது.

2026 ஐபிஎல் தொடரில், முக்கிய உள்ளூர் வீரர்கள் காயமடைந்து விலகியதால் சென்னை சூப்பர் கிங்ஸ் பெரும் சவால்களை சந்தித்து வருகிறது. இந்தச் சூழலில்தான் ஆயுஷ் வர்தக் திடீர் கவனம் ஈர்த்துள்ளார். மும்பையின் "சிக்ஸர் கிங்" என அறியப்படும் இவர், அதிரடி பவர்-ஹிட்டிங் திறனுக்காகவே பெரிதும் அறியப்படுகிறார்.
வஸாயைச் சேர்ந்த வர்தக், பார்சி ஜிம்கானா மற்றும் மும்பையின் வயதுப் பிரிவு கிரிக்கெட்டில் ஒரு முக்கிய வீரராக வலம் வருகிறார். 2025 ஆடவர் மாநில 'ஏ' டிராபி போட்டியில், மும்பையின் முன்னணி ரன் குவிப்பாளராகத் திகழ்ந்து, ஆறு இன்னிங்ஸ்களில் 170 ரன்களுக்கு மேல் ஸ்ட்ரைக் ரேட்டுடன் 363 ரன்கள் குவித்தார்.
மேலும், அந்தத் தொடரில் 26 சிக்ஸர்களை விளாசி, இந்தியா அளவில் இரண்டாவது அதிக சிக்ஸர்களை அடித்த வீரரானார். இந்தச் சாதனைதான் உள்ளூர் ரசிகர்கள் மத்தியில் அவருக்கு "சிக்ஸர் கிங்" என்ற பட்டத்தைப் பெற்றுத் தந்தது. சிஎஸ்கே அணிக்கு வர்தக்கின் தேவை தவிர்க்க முடியாத ஒன்று.
சென்னை சூப்பர் கிங்ஸ் நிர்வாகம், 2026 சீசனின் எஞ்சிய போட்டிகளிலிருந்து இரு முக்கிய உள்நாட்டு வீரர்களை காயம் காரணமாக நீக்கியுள்ளது. இளம் தொடக்க வீரரான ஆயுஷ் மகாத்ரே தீவிர தசைப்பிடிப்பு காயத்தால் விலகினார். அவருக்குப் பதிலாக ஏப்ரல் 23 ஆம் தேதி வேகப்பந்து வீச்சாளர் ஆகாஷ் மத்வால் ஒப்பந்தம் செய்யப்பட்டபோதும், பேட்டிங் வரிசையில் ஆழத்தை சிஎஸ்கே இன்னமும் தேடுகிறது.
இடது கை வேகப்பந்து வீச்சாளர் கலீல் அகமது, தொடையில் ஏற்பட்ட காயத்தால் விலக்கப்பட்டதால் பந்துவீச்சுப் பிரிவில் வெற்றிடம் நீடிக்கிறது. எம்.எஸ். தோனியும் கால் தசைப்பிடிப்பு காரணமாக முதல் எட்டு போட்டிகளில் விளையாடாத நிலையில், தலைமைப் பயிற்சியாளர் ஸ்டீபன் பிளெமிங் தலைமையிலான அணி நிர்வாகம், ஆல்ரவுண்டர் வீரர்களை நாடுகின்றது.
கீழ்வரிசையில் அதிரடி பேட்டிங் மற்றும் பயனுள்ள மீடியம்-பேஸ் பந்துவீசும் வீரர்களை சிஎஸ்கே தேடுகிறது. வர்தக், கடந்த சி.கே. நாயுடு டிராபியில் மும்பை U-23 அணிக்கு கேப்டனாகச் செயல்பட்டு, ஒன்பது போட்டிகளில் 770 ரன்கள் குவித்து அணியின் அதிக ரன் குவித்தவராக திகழ்ந்தார்.
இத்தொடரில் மூன்று சதங்களும், அதிகபட்சமாக 192 ரன்களும் அடங்கும். அவரது உள்ளூர் கிரிக்கெட் சாதனைகள் சுவாரஸ்யமானவை. மும்பை U-19 போட்டியில் 110 பந்துகளில் ஆட்டமிழக்காமல் 215 ரன்கள் அடித்த பெருமை அவருக்கு உண்டு.
சமீபத்தில் ஷாலினி பாலேகர் டிராபியின் ஒரு ஓவரில் தொடர்ச்சியாக ஐந்து சிக்ஸர்களை விளாசி அசத்தினார். இந்த அபாரமான ஆட்டங்களுக்காக அவருக்கு 2024-25 சீசனுக்கான MCA இன் U-23 சிறந்த செயல்பாடுக்கான விருது வழங்கப்பட்டது.
செவ்வாய்க்கிழமை பிற்பகல் நிலவரப்படி, வர்தக் சிஎஸ்கே அகாடமி வசதிகளில் சோதனைப் பயிற்சிகளில் ஈடுபட்டுள்ளார். அவரது அதிரடி பேட்டிங் மற்றும் வலது கை மீடியம்-பேஸ் பந்துவீச்சால் பயிற்சியாளர்களை ஈர்த்தால், மே 2 ஆம் தேதி மும்பை இந்தியன்ஸுடனான அடுத்த போட்டிக்கு முன், அவர் ஒரு மாற்று வீரராக அதிகாரப்பூர்வமாக அணியில் சேர்க்கப்படலாம்.ஆயுஷ் வர்தக்கை சிஎஸ்கே அழைத்திருப்பதற்கு அஸ்வினும் வரவேற்றுள்ளார்.
மும்பை சீனியர் அணிக்கு இன்னும் அறிமுகமாகாத ஒரு வீரருக்கு, சென்னை போன்ற ஒரு ஐபிஎல் அணியில் சேர்வது 2026 சீசனின் மிக முக்கியமான "திருப்புமுனை" கதைகளில் ஒன்றாகும். கடந்த ஆண்டு இப்படி தான் ஆயுஷ் மாத்ரே மாற்று வீரராக சிஎஸ்கேக்கு வந்தார் என்பது குறிப்பிடத்க்கது.


Click it and Unblock the Notifications

