மும்பை: இந்திய கிரிக்கெட்டில் எப்போதுமே இடது கை வேகப்பந்துவீச்சாளருக்கு தனி மரியாதை கிடைக்கும். அந்த வகையில் அண்டர் 19 கிரிக்கெட்டில் விளையாடியதன் மூலம் இந்திய அணியில் நிரந்தர இடம் பிடிப்பார் என கலீல் அகமது மீது ரசிகர்கள் மிகுந்த எதிர்பார்ப்பை வைத்திருந்தனர்.
இந்திய அணிக்காக 11 சர்வதேச ஒரு நாள் போட்டி மற்றும் 18 சர்வதேச t20 போட்டிகளில் கலீல் அகமத் விளையாடி இருக்கிறார். ஆனால் ஃபார்ம் இழப்பு, காயம் உள்ளிட்ட காரணங்களால் அணியின் கலீல் அகமது இடம் கிடைக்கவில்லை. இந்த நிலையில் ஐபிஎல் 2025 ஆம் ஆண்டு சீசனில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்காக கலீல் அஹமத் 14 போட்டிகளில் விளையாடி 15 விக்கெட்டுகளை வீழ்த்தி இருந்தார்.

இந்த நிலையில் கலீல் அகமதுக்கு ஹெர்னியா அறுவை சிகிச்சை செய்யப்பட்டது. அதிலிருந்து தான் மீண்டு வந்தது எப்படி என்பது குறித்து அவர் கருத்து தெரிவித்திருக்கிறார். இது குறித்து பேசிய அவர், "அறுவை சிகிச்சைக்கு பின் என்னுடைய பயணத்தை நான் ஜீரோவில் இருந்து தொடங்கினேன். இன்னும் சொல்லப்போனால் எவ்வாறு நடக்க வேண்டும் என்பது குறித்து எல்லாம் கற்றுக் கொண்டேன்."
"இர்பான் பாய் என்னுடன் அதிக நேரத்தை செலவிட்டார். பந்தின் சீமை சரியாக பயன்படுத்தி எவ்வாறு பந்து வீசுவது என்பது குறித்து அவர் எனக்கு சொல்லித் தந்தார். என்னுடைய பந்துவீச்சு திறனையும் அவர் கூர்மையாக்கினார். இதைப் போன்று ஜாகீர் பாயும் எனக்கு சிவப்பு பந்தை பயன்படுத்தி எவ்வாறு செயல்படுவது என்பது குறித்து சொல்லி கொடுத்தார். எனக்காக இருவரும் தங்களது நேரத்தை எப்போதும் செலவிட்டார்கள்."
"எனக்கு தேவைப்படும்போது எல்லாம் அவர்கள் உதவினார்கள். இதற்காக நான் எப்போதும் நன்றியுடன் இருப்பேன். இம்முறை என்னுடைய உடல் தகுதிக்கு தான் நான் அதிக கவனம் செலுத்தினேன். பந்தை தாமதமாக ஸ்விங் செய்வது? எப்படி என்ற கலையை நான் கற்றுக் கொண்டேன். ஒரு பந்துவீச்சாளராக எப்படி வெற்றி பெறுவது என்பது குறித்து உழைத்து வருகின்றேன்."
"கிரிக்கெட் விளையாடும் போது பல விஷயங்களில் நாம் கவனம் செலுத்த வேண்டும். குறிப்பாக ஒரு போட்டிக்கு உடலை எப்படி தயார் செய்வது? ஒரு இன்னிங்ஸில் 25 ஓவர்கள் எப்படி வீச வேண்டும் போட்டிக்கு எப்படி பயணம் செய்ய வேண்டும். ஒவ்வொரு நாளும் ஒரு பவுலராக தங்களது உடல் தகுதியை எவ்வாறு பேணி காக்க வேண்டும்."
"எந்த நேரத்தில் தூங்க வேண்டும். உடல் தகுதியை எப்படி மீட்க வேண்டும் உள்ளிட்ட விஷயங்களில் எல்லாம் கவனம் செலுத்தினேன். சில சமயம் கவனச் சிதறல் ஏற்படும். ஆனால் அடிப்படையான விஷயங்களில் நாம் தொடர்ந்து செய்ய வேண்டும். நான் மிகவும் பொறுமையாக பயிற்சி செய்து வருகின்றேன். என்னுடைய வாய்ப்புக்காக நான் காத்துக் கொண்டிருக்கின்றேன்."
"என்னுடைய நாட்டுக்காக நான் விளையாட வேண்டும். ஐபிஎல் தொடரில் நாம் எவ்வாறு தான் பந்து வீசினாலும், அதனை மக்கள் மறந்து விடுவார்கள். ஆனால் நாட்டுக்காக விளையாடுவதை தான் வாழ்நாள் முழுவதும் ஞாபகம் வைத்துக் கொள்வார்கள். நான் சர்வதேச அளவில் கிரிக்கெட் விளையாட வேண்டும் என்று நினைக்கின்றேன். இதற்காக நான் அனைத்தையும் தருகின்றேன்."
"இதை தவிர வேறு எந்த விஷயத்திற்கும் என் வாழ்க்கையில் நேரமில்லை. இதுதான் என்னுடைய முழு கவனமாக இருக்கின்றது. மனதளவில் நான் பல கடினமான சூழ்நிலை கடந்து வந்திருக்கின்றேன். தற்போது அனுபவிக்க பவுலராக நான் உணர்கின்றேன். வாழ்க்கையில் வெற்றி பெற முடியும் என்ற நம்பிக்கை எனக்கு வந்திருக்கின்றது. ஒரு வேகப்பந்து வீச்சாளராக நான் அதிகம் பக்குவப்பட வேண்டும்."
"நான் வாய்ப்புக்காக காத்துக் கொண்டிருப்பேன். நிச்சயம் நான் சாதிப்பேன்"என்று கலில் அகமத் கூறியுள்ளார். கலீல் அஹமத் கடைசியாக இந்திய அணிக்காக 2024 ஆம் ஆண்டு ஜூலை மாதம் விளையாடினார். 27 வயதான கலீல் அகமத் இன்னும் டெஸ்ட் போட்டிகளில் அறிமுகமாகவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. தற்போது துலீப் கோப்பையில் சென்ட்ரல் லோன் அணிக்காக கலீல் அகமத் தேர்வு செய்யப்பட்டு இருக்கிறார்.