சிஎஸ்கே-வை வைத்து மேட்ச் பிக்ஸிங் செய்ததாக சர்ச்சை.. அவசரக் கூட்டம் கூட்டும் CSK நிர்வாகம்!
சென்னை: சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் டிரஸ்ஸிங் ரூம் ரகசியங்கள் கசிந்ததாகவும், மேட்ச் பிக்சிங் நடந்ததாகவும் தெஹல்கா ஸ்டிங் ஆபரேஷனில் சொல்லப்பட்டதை தொடர்ந்து சிஎஸ்கே நிர்வாகம் அடுத்தகட்ட நடவடிக்கை எடுக்க திட்டமிட்டுள்ளது. பிரபல புலனாய்வு ஊடகமான தெஹல்கா வெளியிட்ட ரகசிய ஸ்டிங் ஆபரேஷன் வீடியோவில், சிஎஸ்கே அணியில் இடம்பெற்றிருந்த டெல்லியைச் சேர்ந்த இளம் வீரர் ஒருவர் மூலம் ஆடும் லெவன் விவரங்கள் முன்கூட்டியே லண்டன் சூதாட்ட புக்கிகளுக்கு விற்கப்பட்டதாக முன்னாள் ரஞ்சி வீரர் ரசித் பாட்டியா குற்றம்சாட்டியிருந்தார். ஒரு போட்டிக்கு 60 லட்சம் ரூபாய் வீதம் மொத்தம் 5 போட்டிகளுக்கு 3 கோடி ரூபாய் கைமாறியதாக அவர் கூறியது கிரிக்கெட் அரங்கில் பெரும் பூகம்பத்தைக் கிளப்பியது.
இந்த விவகாரம் குறித்து விவாதிக்க சிஎஸ்கே நிர்வாகம் அவசரக் கூட்டத்தைக் கூட்ட முடிவு செய்துள்ளது. இதுகுறித்து சிஎஸ்கே அதிகாரி ஒருவர் கூறுகையில், "எங்களது வருடாந்திர பொதுக்குழுக் கூட்டம் வரும் செப்டம்பர் 25 அன்று நடைபெற உள்ளது. இந்தக் கூட்டத்திற்கு முன்பாக எங்கள் நிர்வாகக் குழு கூடி, இந்த ஊழல் தடுப்பு விவகாரங்கள் மற்றும் குற்றச்சாட்டுகள் குறித்து விரிவாக ஆலோசித்து உரிய முடிவு எடுக்கும்" என்று தெரிவித்துள்ளார்.

இதற்கிடையே, டெல்லியைச் சேர்ந்த விக்கெட் கீப்பர் பேட்டர் வன்ஷ் பேடிதான் 2025-இல் சிஎஸ்கே-வில் இருந்த டெல்லி வீரர் என்பதாலும், அவரை 2025இல் சூதாட்டத் தரகர்கள் அணுகியதாகவும், அவர் புகார் அளித்ததாகவும் மற்றொரு தகவல் பரவியது. ஆனால் இதை அவர் தனது சமூக வலைதளப் பக்கத்தில் திட்டவட்டமாக மறுத்துள்ளார். "ரசித் பாட்டியா குறிப்பிட்ட சிஎஸ்கே வீரர் நான் அல்ல. எனக்கும் இந்த சூதாட்டக் குற்றச்சாட்டுகளுக்கும் எள்முனையளவும் தொடர்பு கிடையாது" என்று வன்ஷ் பேடி விளக்கம் அளித்துள்ளார்.
அதேபோல் டெல்லி பிரீமியர் லீக் தொடரிலும் மேட்ச் பிக்சிங் நடந்ததாகக் கூறப்பட்ட குற்றச்சாட்டுகளை டெல்லி கிரிக்கெட் சங்கம் ஆதாரமற்றவை என நிராகரித்துள்ளது. எனினும், செப்டம்பர் 25 அன்று கூடவுள்ள சிஎஸ்கே நிர்வாகக் கூட்டத்தில் எடுக்கப்படும் முடிவுகள் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளன.


Click it and Unblock the Notifications

