ஜேமிசனுக்கு மாற்று கிடைச்சாச்சு.. சூப்பர் வீரரை தட்டித்தூக்கும் சிஎஸ்கே அணி.. தோனியின் மாஸ்டர் மூவ்!
மும்பை: சென்னை சூப்பர் கிங்ஸ் அணி வீரர் கெயில் ஜேமிசன் ஐபிஎல் தொடரில் இருந்து விலகுவதாக அறிவித்த நிலையில் அட்டகாசமான வீரர் ஒருவருக்கு கேப்டன் தோனி குறிவைத்துள்ளார்.
ஐபிஎல் கிரிக்கெட்டின் 16வது சீசனுக்கான அட்டவணை சமீபத்தில் வெளியிடப்பட்டது. அதன்படி மார்ச் 31ம் தேதி லீக் போட்டிகள் தொடங்கி மே 28ம் தேதியன்று இறுதிப்போட்டி நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்த முறை அனைத்து அணிகளுமே தங்களது ஹோம் மைதானத்தில் விளையாடலாம் என கூறப்பட்டுள்ளதால் ரசிகர்கள் உற்சாகமடைந்துள்ளனர். குறிப்பாக சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு ஸ்பெஷல் மகிழ்ச்சி என்றே கூறலாம்.

சிஎஸ்கே போட்டிகள்
கேப்டன் எம்.எஸ்.தோனி தனது கடைசி போட்டியை சென்னை மைதானத்தில் தான் விளையாடுவேன் எனக்கூறியிருந்தார். அதன்படி இந்தாண்டு கோப்பையை வென்றுக்கொடுத்துவிட்டு, சென்னையில் ஓய்வு அறிவிப்பை வெளியிட முனைப்பு காட்டி வருகிறார். இதற்காக மார்ச் மாதத்தின் தொடக்கத்திலேயே சென்னை அணி வீரர்களுக்கு பயிற்சி முகாம் தொடங்கிவிடும்.

ஜேமிசன் விலகல்
இந்த முக்கியமான நேரத்தில் தான் நட்சத்திர வீரர் கெயில் ஜேமிசன் ஐபிஎல்-ல் இருந்து விலகுவதாக அறிவித்துள்ளார். நியூசிலாந்தை சேர்ந்த ஜேமிசன், கடந்த சில நாட்களாகவே முதுகில் ஏற்பட்ட காயம் காரணமாக விளையாடாமல் இருந்து வருகிறார். அவருக்கான சிகிச்சைகள் நடந்துக்கொண்டே தான் இருந்தன. ஆனால் அவர் குணமடைய இன்னும் 3 மாதங்கள் வரை ஆகலாம் என்பதால் ஐபிஎல் தொடரில் இருந்து விலகியுள்ளார்.

மாற்று வீரர் யார்?
இந்நிலையில் கெயில் ஜேமிசனுக்கு மாற்று வீரர் ஒருவரை தோனி தேர்வு செய்துவிட்டார். அதாவது சென்னை போன்ற ஆடுகளத்தில் ஸ்பின்னர்களுக்கு சாதகமாக இருக்கும். வேகப்பந்துவீச்சை பொறுத்தவரையில் நன்கு உயரமாக உள்ள வீரர்கள் தாக்கத்தை ஏற்படுத்தலாம். இதற்காக தான் கெயில் ஜேமிசன் ஸ்பெஷலாக அணிக்குள் கொண்டு வரப்பட்டார். எனவே அவரின் உயரத்திற்கு ஈடுகொடுக்கும் இலங்கை கேப்டன் தசுன் ஷனகாவை தேர்வு செய்துள்ளனர்.

என்ன காரணம்
சமீபத்தில் நடந்து முடிந்த இந்தியா - இலங்கை டி20 தொடரில் தசுன் ஷனகா ரன் வேட்டை நடத்தினார். இதே போல பந்துவீச்சிலும் மிகச்சிறப்பாக செயல்பட்டார். 6 அடி உயரம் கொண்ட ஷனகாவிற்கு இந்திய களம் குறித்து நன்கு தெரியும் என்பதால் அவர் பொறுத்தமாக இருக்கும். இதனால் சிஎஸ்கே நிர்வாகிகள் ஷனகாவிடம் பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றனர். விரைவில் ஒப்பந்தம் கையெழுத்தாகி அறிவிப்பு வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.


Click it and Unblock the Notifications