ராஞ்சி: இந்தியாவின் பெயரை "பாரத்" என்று மாற்றப் போவதாக தகவல் வெளியான நிலையில், சென்னை அணி கேப்டன் தோனியின் இன்ஸ்டாகிராம் டிபி ரசிகர்களிடையே ட்ரெண்டாகி வருகிறது.
ஜி20 மாநாடு தொடர்பான அழைப்பிதழில் இந்தியாவுக்கு பதில் பாரத் என்று குறிப்பிடப்பட்டது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. இதன் காரணமாக நாட்டின் பெயர் பாரத் என்று மாற்றப்படுகிறதா என்ற கேள்வி எழுந்தது. இதனிடையே இந்திய கிரிக்கெட் வீரர் வீரேந்திர சேவாக், இந்திய அணியின் பெயரை பாரத் என்று மாற்றுமாறு பிசிசிஐ செயலாளர் ஜெய் ஷாவுக்கு கோரிக்கை விடுத்துள்ளார்.

அதுமட்டுமல்லாமல், நாம் அனைவரும் பாரத நாட்டையே சார்ந்தவர்கள். இந்தியா என்ற பெயர் ஆங்கிலேயர்களால் வழங்கப்பட்ட ஒன்று. இதனை நீண்ட நாட்களுக்கு முன்பாகவே மாற்றி இருக்க வேண்டும். நடக்கவுள்ள உலகக்கோப்பை தொடரில் இந்திய அணியின் ஜெர்சியில் இந்தியாவுக்கு பதில் பாரத் என்று பதிவிட வேண்டும் என்று ட்விட்டரில் கருத்து பதிவிட்டார்.
வீரேந்தர் சேவாகின் கருத்துக்கு ஆதரவும், எதிர்ப்பும் ஒரு சேர எழுந்துள்ளது. இந்த நிலையில் சென்னை அணியின் கேப்டன் தோனியின் இன்ஸ்டாகிராம் டிபி ரசிகர்களிடையே ட்ரெண்டாகி வருகிறது. தோனியின் இன்ஸ்டாகிராம் டிபி-யில், தேசியக் கொடி இருப்பதோடு, "I am Blessed to be a Bharatiya" என்ற வாசகமும் இடம்பெற்றுள்ளது. இதனால் தோனி "பாரத்" மாற்றத்திற்கு ஆதரவு அளித்துள்ளதாக தகவல் வெளியாகியது.
ஆனால் 75வது சுதந்திர தினத்தையொட்டி தோனி தனது இன்ஸ்டாகிராம் டிபியை மாற்றினார். இதனால் பழைய புகைப்படத்தை வைத்து, தோனி பாரத் பெயர் மாற்றத்திற்கு ஆதரவளிப்பதாக வதந்திகள் பரவியது. வழக்கமாக எந்தவித சர்ச்சைகளிலும் கருத்து தெரிவித்து தோனி சர்ச்சைகளில் சிக்கிக் கொள்பவரல்ல. விவசாயிகள் போராட்டத்தின் போது சச்சின், கோலி உட்பட ஏராளமானோர் கருத்து பதிவிட்டனர்.
ஆனால் அப்போது கூட தோனி எந்த கருத்தையும் எந்த சமூக வலைதளத்திலும் பதிவிடவில்லை. அதேபோல் இன்ஸ்டாகிராமில் வலைதளத்தில் தோனி பெரியளவில் இதுவரை எந்த பதிவையும் இட்டதில்லை. ஓய்வு அறிவிப்பு, விவசாயம் செய்யும் வீடியோ, பிறந்தநாள் வீடியோ உள்ளிட்டவற்றை மட்டுமே தோனி அண்மை காலத்தில் பதிவிட்டுள்ளார். இதனால் பாரத் பெயர் மாற்றத்தில் ஆதரவு என்பது வதந்தியே என்று தோனி ரசிகர்கள் நம்பிக்கையுடன் தெரிவித்து வருகின்றனர்.