புதிய மைதானத்தில் களமிறங்கும் சிஎஸ்கே.. எதிர்பாராத இன்ப அதிர்ச்சி.. ஐபிஎல்லில் கலக்கல் தான்
சென்னை: ஐபிஎல் தொடரின் போது சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் 40 ஆயிரம் ரசிகர்களுக்கு அனுமதி வழங்கப்படும் என்று சிஎஸ்கே அணியின் சிஇஓ காசி விஸ்வநாதன் கூறியுள்ளார்.
2023ம் ஆண்டுக்கான ஐபிஎல் அட்டவணை வெளியாகியது முதலே ரசிகர்கள் மத்தியில் அதிக எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது. மகளிர் ஐபிஎல் தொடர் மார்ச் 26ம் தேதி முடிவடையும் நிலையில் நான்கு நாட்கள் இடைவெளியில் மீண்டும் ஆடவர் ஐபிஎல் தொடர் தொடங்குகிறது.
ஆடவர் ஐபிஎல் கிரிக்கெட் திருவிழா மார்ச் 31ம் தேதி தொடங்கி மே 28ம் தேதி வரை நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த முறை முதல் ஆட்டத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி நடப்பு சாம்பியன் ஆன குஜராத் டைட்டன்ஸ் அணியை அகமதாபாத்தில் உள்ள நரேந்திர மோடி மைதானத்தில் எதிர்கொள்கிறது.

4 ஆண்டுகள்
அதேபோல் கிட்டத்தட்ட 4 ஆண்டுகளுக்கு பின் சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் சென்னை அணி ஐபிஎல் தொடரை விளையாடுகிறது. சுமார் ஆயிரத்து 400 நாட்களுக்கு பின் தோனி மீண்டும் சேப்பாக்கம் மைதானத்தில் களமிறங்க உள்ளார். அதேபோல் சென்னை அணியின் கேப்டன் தோனி பங்கேற்கும் கடைசி ஐபிஎல் தொடரும் இதுவே என்பதால், தோனியை நேரில் காண ரசிகர்கள் ஆவலாக இருக்கின்றனர்.

சென்னையில் தோனி?
அதுமட்டுமல்லாமல் ஐபிஎல் தொடருக்கான மார்ச் 2ம் தேதியே தோனி சென்னை வருவதாக தகவல் வெளியாகியுள்ளது. சென்னை வரும் மகேந்திர சிங் தோனி, ஐபிஎல் தொடருக்கான பயிற்சியில் பங்கேற்க உள்ளார். இவருடன் இளம் வீரர்களும், தீபக் சஹார் உள்ளிட்ட நட்சத்திர வீரர்களும் பங்கேற்பார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

40 ஆயிரம் ரசிகர்கள்
இதனிடையே சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் எவ்வளவு ரசிகர்களுக்கு அனுமதி வழங்கப்படும் என்று கேள்வி இருந்தது. அதற்கான விடையை சென்னை அணியின் சிஇஓ காசி விஸ்வநாதன் கூறியுள்ளார். இம்முறை சேப்பாக்கம் மைதானத்தில் 40 ஆயிரம் ரசிகர்கள் அனுமதிக்கப்படுவார்கள் என்று தெரிய வந்துள்ளது.

ரசிகர்கள் எதிர்பார்ப்பு
40 ஆயிரம் ரசிகர்களின் கரகோஷத்தில் தல தோனி களமிறங்கினால் எப்படி இருக்கும் என்று இப்போதே ரசிகர்கள் கற்பனை செய்யத் தொடங்கிவிட்டார்கள். அதுமட்டுமல்லாமல் பயிற்சியின் போது சென்னை அணியை நேரில் காண ரசிகர்கள் அனுமதிக்கப்படுவார்களா என்ற கேள்வியும் எழுந்துள்ளது. அப்படி அனுமதிக்கப்பட்டால், ஐபிஎல் திருவிழா சென்னையில் முன்னதாக தொடங்கிவிடும் என்பது குறிப்பிடத்தக்கது.


Click it and Unblock the Notifications