CSK: "தோனி பற்றி பேசுவதெல்லாம் என் சம்பளத்துக்கு மேலானது".. சிஎஸ்கே பயிற்சியாளர் சொன்ன அதிரடி பதில்
சென்னை: 2026 ஐபிஎல் தொடர் இறுதிக்கட்டத்தை எட்டியுள்ள நிலையில், சென்னை சூப்பர் கிங்ஸ் ரசிகர்கள் அனைவரின் மனதிலும் ஒரே ஒரு கேள்விதான் ஓடிக்கொண்டிருக்கிறது. 'தல' தோனி எப்போது மீண்டும் மைதானத்திற்குள் வந்து சிக்ஸர்களைப் பறக்கவிடுவார் என்பதுதான் அது. டெல்லி கேபிடல்ஸ் அணிக்கு எதிரான முக்கியமான ஆட்டத்திற்கு முன்பாக, தோனியின் உடல்நிலை மற்றும் ருதுராஜ் கெய்க்வாட்டின் கேப்டன்சி குறித்து சிஎஸ்கே அணியின் பந்துவீச்சு பயிற்சியாளர் எரிக் சிம்மன்ஸ் பேசி இருக்கிறார்.
டெல்லி பெரோஸ் ஷா கோட்லா மைதானத்தில் நடைபெறும் போட்டியில் சிஎஸ்கே மற்றும் டெல்லி கேப்பிடல்ஸ் அணிகள் மோதுகின்றன. இரு அணிகளும் தலா 8 புள்ளிகளுடன் புள்ளிப்பட்டியலில் 6 மற்றும் 7-வது இடங்களில் உள்ளன. இந்த முக்கிய போட்டிக்கு முன்னதாக செய்தியாளர்களைச் சந்தித்த எரிக் சிம்மன்ஸிடம் தோனி குறித்துக் கேட்கப்பட்டது.

அதற்குப் பதிலளித்த அவர், "தோனி குறித்த மருத்துவ அப்டேட்களைக் கொடுப்பதெல்லாம் என் சம்பள வரம்பிற்கும், தகுதிக்கும் அப்பாற்பட்ட விஷயம். அவர் தற்போது டெல்லியில் அணியுடன் இல்லை. ஆனால், அவரது உடல்நிலையில் சீரான முன்னேற்றம் ஏற்பட்டு வருகிறது. அவர் எப்போது முழுமையாகத் தயாராகிறாரோ, அப்போது நிச்சயம் களமிறங்குவார்" என்று சுருக்கமாக முடித்துக்கொண்டார்.
தோனி இல்லாத நிலையில் அணியைத் திறம்பட வழிநடத்தி வரும் கேப்டன் ருதுராஜ் கெய்க்வாட் குறித்துப் பேசிய சிம்மன்ஸ், அவரை ஒரு 'அறுவை சிகிச்சை நிபுணருடன்' ஒப்பிட்டார். "இன்றைய அதிரடி கிரிக்கெட் உலகில் ருதுராஜ் ஒரு அறுவை சிகிச்சை நிபுணர் போன்றவர். மிகவும் நிதானமாகத் தனது வேலையைச் செய்வார். அவர் 22 பந்துகளில் 50 ரன்கள் எடுப்பார், ஆனால் அவர் அடிப்பதே யாருக்கும் தெரியாது. அந்த அளவுக்குத் துல்லியமாக அவரது ஆட்டம் இருக்கும். கேப்டன்சி அழுத்தம் அவரது பேட்டிங்கைப் பாதிப்பதாக நான் நினைக்கவில்லை. கடினமான ஆடுகளங்களிலும் அவர் ரன் குவிப்பது ஒரு சிறந்த பேட்ஸ்மேனுக்கான அடையாளம்" என்று புகழாரம் சூட்டினார்.
சிஎஸ்கே அணி தற்போது தனது உண்மையான பலத்தைக் கண்டறிந்துவிட்டதாகக் குறிப்பிட்ட அவர், பிளே ஆப் வாய்ப்பு இன்னும் தங்கள் கைகளிலேயே இருப்பதாகத் தெரிவித்தார். "நாங்கள் சிறப்பாக விளையாடும்போது எங்களைத் தோற்கடிப்பது எந்த அணிக்கும் கடினமான காரியம். அணியில் உள்ள அனைத்து வீரர்களும் இப்போது தங்களது பொறுப்பை உணர்ந்து விளையாடுகிறார்கள். டெல்லிக்கு எதிரான இந்த வெற்றி எங்களை புள்ளிப்பட்டியலில் முன்னிலைக்குக் கொண்டு செல்லும்" எனக் கூறினார்.


Click it and Unblock the Notifications
