சென்னை: தோனியின் பேட்டிங் வரிசை குறித்தும், அவர் பேட்டிங் அணுகுமுறை குறித்தும் பல்வேறு விமர்சனங்கள் எழுந்துள்ள நிலையில், சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் பயிற்சியாளர் ஸ்டீபன் பிளம்மிங் அதற்கு விளக்கம் அளித்துள்ளார். தோனி உடல்நிலையில் இருக்கும் பிரச்சனை குறித்தும் விளக்கம் அளித்துள்ளார்.
2025 ஐபிஎல் தொடரில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணிக்கு எதிரான போட்டியில் தோனி 9 ஆம் வரிசையில் இறங்கினார். அப்போது அனைவரும் அது குறித்து கேள்வி எழுப்பினர். இந்த நிலையில் ராஜஸ்தான் ராயல்ஸுக்கு எதிரான போட்டியில் அவர் ஏழாம் வரிசையில் பேட்டிங் செய்தார். 11 பந்துகளில் 16 ரன்கள் மட்டும் எடுத்து ஆட்டமிழந்தார். அவரால் சிஎஸ்கே அணியை வெற்றிக்கு அழைத்துச் செல்ல முடியவில்லை.

இதையடுத்து தோனியின் பேட்டிங் வரிசை பற்றி சிஎஸ்கே அணியின் பயிற்சியாளர் ஸ்டீபன் பிளம்மிங்கிடம் கேள்வி கேட்கப்பட்டது. அதற்கு பதில் அளித்த அவர், "அவரது பேட்டிங் வரிசை போட்டியின் சூழ்நிலை மற்றும் நேரம் சார்ந்தது. இது குறித்த முடிவை தோனி தான் எடுக்கிறார். அவரது உடல் மற்றும் முழங்கால் இதற்கு முன்பு இருந்தது போல் இல்லை. அவர் நன்றாக நடந்தாலும் அதில் சில இடர்பாடுகள் உள்ளன. அவரால் தொடர்ந்து நின்று பேட்டிங் செய்வது முடியாது."
"எனவே, ஒவ்வொரு நாளிலும் அவர் அணிக்காக என்ன செய்ய முடியும் என்பதை சிந்தித்து செயல்படுகிறார். இன்றைக்குப் போல போட்டி சமநிலையில் இருந்தால் அவர் சற்று முன்பே பேட்டிங் செய்வார். மற்ற வீரர்கள் தங்களின் வாய்ப்புகளை பயன்படுத்துவதற்கு வாய்ப்பு கிடைக்கும். எனவே, அவர் அதற்கான சமநிலையை சிந்தித்து செயல்படுகிறார்" என்றார்.
தோனி இந்த சூழ்நிலையிலும் சிஎஸ்கே அணிக்காக விளையாட வேண்டுமா என்ற ஒரு கேள்வியும் உள்ளது. அதற்கு பதில் அளித்த ஸ்டீபன் பிளம்மிங், "நான் கடந்த ஆண்டே கூறினேன், தோனி எங்களுக்கு மிகவும் மதிப்பு மிக்கவர். தலைமை பண்பு மற்றும் விக்கெட் கீப்பிங்கில் அவர் சிறந்து விளங்குகிறார். அவரை 9 அல்லது 10 ஓவர்கள் பேட்டிங் செய்ய வைக்கலாம். ஆனால், அவர் இதுவரை அதை செய்யவில்லை. அவர் 13 அல்லது 14 வது ஓவரிலிருந்து பேட்டிங் செய்ய முற்படுகிறார். களத்தில் யார் இருக்கிறார் என்பதை வைத்து அவர் அந்த முடிவை எடுக்கிறார்" என்றார் ஸ்டீபன் பிளம்மிங்.