For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
 

வில்லன் ஆக்கப்படும் தோனி.. சிஎஸ்கே-வில் என்ன நடக்கிறது?

சென்னை: சென்னை சூப்பர் கிங்ஸ் அணி இனியும் தோனியை அணியில் வைத்திருக்க வேண்டுமா? தோனி சிஎஸ்கே அணியில் வில்லன் ஆக்கப்படுகிறாரா? சிஎஸ்கே அணியில் என்னதான் நடக்கிறது?

நேற்று நடந்த டெல்லி கேப்பிட்டல்ஸ் அணிக்கு எதிரான சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் சேஸிங் மெகா சீரியலை பார்ப்பது போல இருந்தது. 184 ரன்கள் என்ற இலக்கை நோக்கி ஆடிய சிஎஸ்கே அணி 74 ரன்களுக்கு ஐந்து விக்கெட்டுகளை இழந்தது. தோனி 11வது ஓவரிலேயே களத்துக்கு வந்தார். கடைசி வரை அவரும் விஜய் சங்கரும் ஆட்டமிழக்காமல் ஆடினார்கள்.

ஆனால், அதை கண்கொண்டு பார்க்க முடியவில்லை. அந்த அளவுக்கு நிதானமான ஒரு டெஸ்ட் ஆட்டமாக இருந்தது. எந்த விதமான விறுவிறுப்பும் இல்லை. தோனி 19 பந்துகளை சந்தித்த பிறகு முதல் முறையாக ஒரு சிக்ஸ் அடித்தார். இடையே ஒரு பவுண்டரி கூட அடிக்கவில்லை.

CSK Fans Question MS Dhoni s Place in the Team After Slow Innings Against DC

தோனி டெல்லி கேப்பிட்டல்ஸ் அணிக்கு எதிரான போட்டியில் 26 பந்துகளில் 30 ரன்கள் சேர்த்தார். ஆட்டம் இழக்காமல் இருந்தார். ஆனால் சிஎஸ்கே அணி 25 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வி அடைந்தது. தோனி ஒரு பந்துக்கு இரண்டு ரன்கள் என்ற விகிதத்தில் ரன் சேர்த்திருக்க வேண்டும். அவரால் இந்த வயதில் அத்தனை வேகத்தில் ஆட முடியுமா? என்ற கேள்வி உள்ளது.

2024 ஐபிஎல் தொடரில் அவர் 200 என்ற ஸ்ட்ரைக் ரேட்டில் தான் விளையாடினார் என்பதும் குறிப்பிடத்தக்கது. எல்லா போட்டிகளிலும் அவரால் அதுபோல ஆட முடியாது என்பதை ஏற்றுக் கொள்ளலாம். ஆனால் அவரது இடத்தில் வேறு ஒரு இளம் வீரர் ஆடி இருந்தால் என்ன நடந்து இருக்கும்? ஒருவேளை சிஎஸ்கே அணி வெற்றியை நெருங்கி இருக்கலாம் அல்லது வெற்றி பெற்றும் இருக்கலாம். இதைத்தான் விமர்சகர்களும் சுட்டிக்காட்டுகிறார்கள்.

தோனி என்பவர் ஒரு விளம்பரமாக, சிஎஸ்கேவின் முகமாக வலுக்கட்டாயமாக சிஎஸ்கே அணியின் பிளேயிங் லெவனில் திணிக்கப்படுகிறாரா? என்பது தற்போதைய முக்கிய கேள்வியாக உள்ளது. சிஎஸ்கே அணி நிர்வாகம் தங்களின் சுயநலத்துக்காக தோனியை வில்லனாக மாற்றி வருகிறதா? என்ற கேள்வியும் எழுந்துள்ளது.

தற்போது சென்னை சூப்பர் கிங்ஸ் அணி என்ற ஒரு அடையாளம் இந்தியா முழுவதும் அனைவருக்கும் தெரிகிறது என்றால் அதற்கு ஒரே காரணம் தோனி மட்டுமே. தோனியால் தான் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி இத்தனை உயரத்தை எட்டி இருக்கிறது என்பதில் எந்த மாற்றுக் கருத்தும் இல்லை. ஒருவேளை தோனி சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் இருந்து விலகி விட்டால் நிச்சயமாக அந்த அணியை காணும் ரசிகர்களின் எண்ணிக்கையும் சரியும்.

இடையே நட்சத்திர வீரர்களை அணியில் சேர்த்து வெற்றிகளை பெற்றால் மட்டுமே இப்போது இருக்கும் இந்த புகழையும் வரவேற்பையும் சிஎஸ்கே அணியால் தக்க வைக்க முடியும். இதையெல்லாம் கருத்தில் கொண்டு பார்க்கும் போது தோனிக்கு சிஎஸ்கே அணி தேவையில்லை. சிஎஸ்கே அணிக்கு தான் தோனி தேவை என்ற ஒரு பார்வையை நாம் புரிந்து கொள்ள முடிகிறது.

தோனிக்கு 43 வயதாகும் நிலையிலும் அவரை அணியில் ஆட வைத்து அதன் மூலம் மைதானம் எங்கும் மஞ்சள் நிற ஆடை அணிந்த ரசிகர்களை நிரப்பி சிஎஸ்கே அணி தனது பரப்பை தக்க வைத்துக் கொள்கிறதா?. தோனி என்ற ஒரு வீரரால் மட்டுமே சிஎஸ்கே அணி தோற்கவில்லை என்பதும் இங்கு குறிப்பிடத்தக்கது. சிஎஸ்கே அணியின் அணித் தேர்வில் பெரும் குழப்பம் உள்ளது.

சென்னை சூப்பர் கிங்ஸ் எப்போதும் மெகா ஏலத்தில் வயதான வீரர்களை வாங்கும், இளம் வீரர்களை வாங்காது என்ற ஒரு விமர்சனம் உண்டு. அது 2025 ஐபிஎல் மெகா ஏலத்திலும் நடந்தது. இந்த முறையும் ரவிச்சந்திரன் அஸ்வின், விஜய் சங்கர், ராகுல் திரிபாதி, தீபக் ஹூடா என ஏற்கனவே ஐபிஎல் தொடரில் பல அணிகளில் ஆடிய வீரர்களை அதிக தொகை கொடுத்து வாங்கியது சிஎஸ்கே நிர்வாகம்.

அதே சமயம் 20 வயதை ஒட்டிய இளம் வீரர்களை வாங்குவதில் ஆர்வம் காட்டவில்லை. மும்பை இந்தியன்ஸ், டெல்லி கேப்பிட்டல்ஸ், பஞ்சாப் கிங்ஸ் போன்ற அணிகள் பல இளம் வீரர்களை அடையாளம் கண்டு அவர்களை வாங்கின. அவர்களுக்கு பிளேயிங் லெவனிலும் வாய்ப்பு அளித்து இருக்கின்றன. அந்த அளவுக்கு முன்கூட்டியே இளம் வீரர்களுக்கான திட்டமிடலை அந்த அணிகள் செய்கின்றன.

அவர்களில் சிலர் சிறப்பான பங்களிப்பை அளிக்கிறார்கள், சிலர் சரியாக விளையாடுவதில்லை. ஆனால் அதன் மூலம் அந்த அணிகள் அவ்வப்போது மாற்று வீரர்களுக்கான தேவையை பூர்த்தி செய்து கொள்கின்றன. மூத்த வீரர் ஒருவர் விளையாட முடியாத நிலை ஏற்பட்டால் உடனடியாக இளம் வீரர் ஒருவரை அணியில் சேர்க்கும் வாய்ப்பு அவர்களுக்கு இருக்கிறது.

ஆனால் சிஎஸ்கே அணியில் அப்படி ஒரு வாய்ப்பே இல்லை. சுற்றி, சுற்றி வயதானவர்களுக்கு தான் வாய்ப்பு அளிக்கப்பட்டு வருகிறது. இப்போது உள்ள சிஎஸ்கே அணியிலும் நான்கு இளம் வீரர்கள் மாற்று வீரர்களாக இருக்கிறார்கள். ஆனால் அவர்கள் பயிற்சியின் போது பந்து வீசுவதற்கும், பேட்டிங் செய்வதற்கும், பந்து எடுத்துப் போடுவதற்கும் மட்டுமே பயன்படுத்தப்படுகிறார்கள் என்பது சிஎஸ்கே ரசிகர்களின் ஆதங்கமாக உள்ளது.

இது போன்ற சிக்கல்களை எல்லாம் சிஎஸ்கே நிர்வாகம் தீர்க்க வேண்டும். அது ஒரு புறம் இருக்க, தோனியை தங்கள் அணியின் முகமாக பயன்படுத்துவதையும் சிஎஸ்கே நிறுத்த வேண்டும். ஒருவேளை தோனியிடம் "நீங்கள் நிச்சயமாக விளையாட விரும்புகிறீர்களா?" என்ற கேள்வியை கேட்க வேண்டும். ஏனெனில் தோனி சமீபத்தில் அளித்த பேட்டிகளில் எல்லாம் "தான் சக்கர நாற்காலியில் அமர்ந்திருந்தாலும் சிஎஸ்கே அணி தன்னை அழைத்து வந்து விடுவார்கள்" என்று சொன்னார்.

அப்படி என்றால் சிஎஸ்கே நிர்வாகம் தான் தோனியை ஐபிஎல் தொடரில் விளையாடுமாறு வற்புறுத்துகிறதா? அங்கு தான் பிரச்சினை ஏற்படுகிறது. தோனி என்பவர் இந்திய கிரிக்கெட்டின் அடையாளம் ஆவார். அவருக்கு என ஒரு பெருமை உள்ளது. பல போட்டிகளை வென்று கொடுத்தவர் என்ற பெயர் உள்ளது. உலகக்கோப்பை, சாம்பியன்ஸ் டிராபியை வென்று கொடுத்த கேப்டன் என்ற புகழ் உள்ளது.

ஆனால் கடந்த இரண்டு ஆண்டுகளாக ஐபிஎல் தொடரில் அவர் சிரமத்தை எதிர் கொண்டு வருகிறார். அவரது ஆட்டம் சிஎஸ்கே அணியின் வெற்றிக்கு உதவவில்லை என்பது அந்த அணியின் ரசிகர்களுக்கு வேதனையை அளித்து வருகிறது. சிஎஸ்கேவில் தோனிக்கு அடுத்து அடையாளம் காணும் அளவுக்கு எந்த வீரரும் இல்லாதது தான் இந்த சிக்கலுக்கு காரணம். இதுவே வருங்காலத்தில் தோனியை வில்லனாக மாற்றி விடுமோ? என்ற அச்சமும் ஏற்பட்டுள்ளது. இனி தோனி விளையாட வந்தாலே அவரை கேலியும், கிண்டலும் செய்யும் நிலை ஏற்படும். அதை நோக்கி தான் சிஎஸ்கே நிர்வாகம் அவரை அழைத்து சென்று கொண்டு இருக்கிறது.

Story first published: Sunday, April 6, 2025, 13:52 [IST]
Other articles published on Apr 6, 2025
English summary
CSK Fans Question MS Dhoni's Place in the Team After Slow Innings Against DC
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+