சிஎஸ்கே அணி பயிற்சியாளர் பொறுப்பில் ஜாகீர் கானிடம் ஹேமாங் பதானி தோற்றது எப்படி? தோனி முடிவின் பின்னணி
சென்னை: சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் புதிய தலைமைப் பயிற்சியாளராக முன்னாள் இந்திய வேகப்பந்து வீச்சாளர் ஜாகீர் கான் நியமிக்கப்பட்டுள்ளார். இந்த முக்கிய முடிவின் பின்னணியில் முன்னாள் கேப்டன் தோனி முக்கியப் பங்காற்றியுள்ளது தற்போது உறுதியாகியுள்ளது. சிஎஸ்கே அணியுடன் 18 ஆண்டுகள் பயணித்த ஸ்டீபன் பிளெமிங் தனது பதவியில் இருந்து விலகியதை அடுத்து, புதிய பயிற்சியாளரைத் தேர்ந்தெடுக்கும் பொறுப்பு தோனியிடம் ஒப்படைக்கப்பட்டது.
அமெரிக்காவில் விடுமுறையை முடித்துவிட்டுத் திரும்பிய தோனி, இது தொடர்பாகப் பலரிடமும் பேச்சுவார்த்தை நடத்தினார். இறுதியாக, சிஎஸ்கே உரிமையாளர்கள் மற்றும் நிர்வாகக் குழுவினருடன் நடத்திய ஆலோசனையின் போது ஜாகீர் கானின் பெயரை அவர் பரிந்துரைத்தார்.

இது குறித்து பேசிய சிஎஸ்கே நிர்வாக இயக்குநர் காசி விஸ்வநாதன், "தோனி தான் ஜாகீர் கானின் பெயரைப் பரிந்துரைத்தார். ரூபா மற்றும் ருதுராஜ் கெய்க்வாட் அடங்கிய கிரிக்கெட் நிர்வாகக் குழுவும் அவர் இந்த பொறுப்புக்கு பொருத்தமானவர் என்பதை ஒப்புக்கொண்டது" என்று தெரிவித்துள்ளார். ஜாகீர் கான் ஓராண்டு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டுள்ளார், இது மேலும் நீட்டிக்கப்பட வாய்ப்புள்ளது.
ஐபிஎல் தொடரில் ஜாகீர் கானுக்கு இருக்கும் முந்தைய அனுபவம் இந்த நியமனத்திற்கு முக்கியக் காரணமாக அமைந்துள்ளது. 47 வயதான ஜாகீர் கான், 2018 முதல் 2022 வரை மும்பை இந்தியன்ஸ் அணியில் கிரிக்கெட் செயல்பாடுகளின் இயக்குநராகவும், பின்னர் உலகளாவிய மேம்பாட்டுத் தலைவராகவும் பணியாற்றினார்.
அதன் பிறகு 2024-ல் லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணியின் ஆலோசகராகவும் செயல்பட்டார். பிற உலகளாவிய டி20 லீக் அணிகளுடன் ஒப்பந்தம் இல்லாத, ஐபிஎல் தொடரில் மட்டுமே முழுக் கவனம் செலுத்தக்கூடிய ஓர் இந்திய பயிற்சியாளரையே சிஎஸ்கே தேடியது. அத்துடன், கடந்த மூன்று சீசன்களாக பிளே-ஆஃப் சுற்றுக்குத் தகுதி பெறத் தவறிய சிஎஸ்கே அணியை மீண்டும் கட்டமைக்க, வீரர்களின் திறமைகளை மேம்படுத்துவதில் அனுபவம் வாய்ந்த ஜாகீர் கானின் வருகை பெரிய பலமாக இருக்கும் என்று கருதப்படுகிறது.
முன்னாள் இந்திய வீரர் ஹேமங் பதானி தான் இந்த ரேஸில் முன்னணியில் இருந்ததாகக் கூறப்படுகிறது. ஆனால், ஒப்பந்தத்தின் காலம் மற்றும் விதிமுறைகள் குறித்த பேச்சுவார்த்தையில் உடன்பாடு எட்டப்படாததால் அவருக்கு இந்த வாய்ப்பு கைநழுவியது. சிஎஸ்கேவின் உலகளாவிய பல்வேறு அணிகளுக்கும் சேர்த்து வேலை செய்யப் போகிறோம் என்ற எண்ணம் தொடக்கத்தில் பதானிக்கு இருந்தது. ஆனால், எஸ்ஏ20 தொடரில் உள்ள ஜோகன்னஸ்பர்க் சூப்பர் கிங்ஸ் அணியின் தலைமைப் பயிற்சியாளராக ஆல்பி மோர்கல் நியமிக்கப்பட்டதைத் தொடர்ந்து நிலைமை மாறியது.
மிக முக்கியமாக, சிஎஸ்கே நிர்வாகம் ஆண்டுக்கு ஆண்டு ஒப்பந்தத்தை மட்டுமே வலியுறுத்தியது. ஆனால், அணியை முறையாகக் கட்டமைத்து மாற்றியமைக்கத் தனக்குக் குறைந்தபட்சம் இரண்டு ஆண்டுகள் ஒப்பந்தமாவது தேவை என்பதில் பதானி உறுதியாக இருந்தார். இந்த கருத்து வேறுபாடுகளால் பேச்சுவார்த்தை தோல்வி அடைய, இறுதியில் ஜாகீர் கானை சிஎஸ்கே தேர்வு செய்துள்ளது.


Click it and Unblock the Notifications


