“சிஎஸ்கே பயிற்சியாளராக வர முடியாது”.. இங்கிலாந்து ஜாம்பவான் மறுத்ததால் ஜாகீர் கானை தேர்வு செய்த தோனி
சென்னை: 2027 ஐபிஎல் தொடருக்கான சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் புதிய தலைமை பயிற்சியாளராக இந்திய அணியின் முன்னாள் நட்சத்திர வேகப்பந்து வீச்சாளர் ஜாகீர் கான் நியமிக்கப்பட்டுள்ளார். அவருக்கு ஒரு ஆண்டு ஒப்பந்தம் வழங்கப்பட்டுள்ளது. ஆனால், ஜாகீர் கான் சிஎஸ்கே நிர்வாகத்தின் முதல் தேர்வு கிடையாது என்ற தகவல் தற்போது வெளிச்சத்திற்கு வந்துள்ளது.
ஸ்டீபன் பிளெமிங் விலகிய பிறகு, இங்கிலாந்து அணியின் முன்னாள் கேப்டன் இயன் மோர்கனை தலைமை பயிற்சியாளராக நியமிக்கவே சிஎஸ்கே நிர்வாகம் முதலில் அணுகியது. 2019 உலகக்கோப்பை வென்ற கேப்டன் என்பதோடு, மிகவும் முதிர்ச்சியான கிரிக்கெட் வீரராகவும் அறியப்படுவதால் அவரை சிஎஸ்கே-வுக்கு அழைத்து வர விரும்பியது. ஆனால், சிஎஸ்கே கொடுத்த இந்த வாய்ப்பை மோர்கன் ஏற்க மறுத்துவிட்டார். மற்றொரு ஐபிஎல் அணியும் அவரை அணுகிய நிலையில், இரண்டு அணிகளின் அழைப்பையுமே அவர் நிராகரித்தார். தனக்கு தற்போதைய கிரிக்கெட் வர்ணனையாளர் பணியே மனநிறைவு தருவதாகவும், அதைத் தொடரவே விரும்புவதாகவும் இயன் மோர்கன் தெரிவித்துவிட்டார்.

அதேபோல் சிஎஸ்கே அணியின் பேட்டிங் பயிற்சியாளரான மைக் ஹஸ்ஸியின் பெயரும் தலைமைப் பதவிக்குப் பரிசீலிக்கப்பட்டது. எனினும் அவரைத் தொடர்ந்து பேட்டிங் பயிற்சியாளராகவே நீட்டிக்க நிர்வாகம் முடிவு செய்தது. இயன் மோர்கன் மறுத்த பின்னரே களத்தில் இறங்கிய தோனி, ஜாகீர் கானின் பெயரை நேரடியாகப் பரிந்துரைத்தார்.
இதுகுறித்து சிஎஸ்கே தலைமைச் செயல் அதிகாரி காசி விஸ்வநாதன் பேசுகையில், "இது நிர்வாக ரீதியாக எடுக்கப்பட்ட முடிவு அல்ல. இது கிரிக்கெட் ஆலோசனைக் குழுவின் முடிவு. தோனி இந்த யோசனையை முன்வைத்தார். அவர் கேப்டன் ருதுராஜ் கெய்க்வாட் மற்றும் உரிமையாளர் ரூபா குருநாத் ஆகியோருடன் விரிவாகப் பேசி இந்த முடிவை எடுத்தார்" என்று தெரிவித்தார்.
இதன் மூலமே 5 முறை சாம்பியன் பட்டம் வென்ற சிஎஸ்கே அணியின் தலைமைப் பயிற்சியாளர் பொறுப்பு ஜாகீர் கானின் கைக்கு வந்து சேர்ந்துள்ளது. அவர் சிறப்பாக செயல்படும் பட்சத்தில், குறைந்தபட்சம் சிஎஸ்கே அணி பிளே ஆஃப் சுற்றுக்கு முன்னேறும் நிலையில், ஜாகீர் கானின் தலைமை பயிற்சியாளர் பதவி நீட்டிப்பு செய்யப்படும் என கூறப்படுகிறது.


Click it and Unblock the Notifications


