CSK: சிஎஸ்கே அணிக்கு இது போதாத காலம்.. பட்டியல் போட்டு மனக் குமுறலை வெளிப்படுத்திய ஸ்ரீகாந்த்
சென்னை: 2026 ஐபிஎல் தொடரில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு அடுத்தடுத்து சோதனைகள் துரத்தி வருகின்றன. நடப்பு சீசனில் இதுவரை விளையாடிய 6 போட்டிகளில் வெறும் 2 வெற்றிகளுடன் 4 புள்ளிகளை மட்டுமே பெற்று, புள்ளிப்பட்டியலில் பின்தங்கியுள்ள சிஎஸ்கே அணியை தற்போது காயங்கள் வாட்டி வதைத்து வருகின்றன. இது குறித்து இந்திய அணியின் முன்னாள் கேப்டனும், முன்னாள் தேர்வுக் குழுத் தலைவருமான கிருஷ்ணமாச்சாரி ஸ்ரீகாந்த் மனக் குமுறலை கொட்டி இருக்கிறார்.
சிஎஸ்கே அணியின் நிலை பற்றி தனது கருத்துகளைப் பகிர்ந்துள்ள ஸ்ரீகாந்த், "நடப்பு ஐபிஎல் தொடரில் விளையாடும் அனைத்து அணிகளுமே வீரர்களின் காயங்களால் பாதிக்கப்பட்டுள்ளன. ஆனால், மற்ற அணிகளை ஒப்பிடுகையில் சிஎஸ்கே தான் மிக மோசமாகப் பாதிக்கப்பட்டுள்ளது. குறிப்பாக நல்ல ஃபார்மில் இருந்த கலீல் அகமது மற்றும் ஆயுஷ் மாத்ரே ஆகியோர் காயத்தால் வெளியேறியது அந்த அணிக்கு மிகப்பெரிய பின்னடைவாகும். அதோடு தோனியும் ஆரம்பத்தில் சில போட்டிகளில் விளையாடவில்லை. சிஎஸ்கே அணி தற்போது மிகவும் துரதிர்ஷ்டவசமான நிலையில் உள்ளது" எனத் தெரிவித்துள்ளார்.

சிஎஸ்கே அணிக்கு இந்த சீசனில் மிகப்பெரிய அடியாக அமைந்தது இளம் அதிரடி வீரர் ஆயுஷ் மாத்ரேவின் காயம் தான். சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணிக்கு எதிரான போட்டியின் போது அவருக்குத் தொடைப்பகுதியில் தசைநார் காயம் ஏற்பட்டது. இதனால் அவர் இந்த சீசன் முழுவதிலிருந்தும் விலகியுள்ளார். இந்த சீசனில் சிஎஸ்கே அணிக்காக அதிக ரன்கள் குவித்த வீரர்களில் ஒருவராகத் திகழ்ந்த இவரது இழப்பு, பேட்டிங் வரிசையைப் பலவீனப்படுத்தியுள்ளது. 19 வயதுக்குட்பட்டோருக்கான உலகக்கோப்பையை வென்று தந்த கேப்டனான இவர், அணியின் நம்பிக்கை நட்சத்திரமாகத் திகழ்ந்தார்.
அதேபோல, அணியின் முக்கிய வேகப்பந்து வீச்சாளரான கலீல் அகமது, சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் கொல்கத்தா அணிக்கு எதிராக நடந்த போட்டியின் போது காயமடைந்தார். ஆஸ்திரேலிய வேகப்பந்து வீச்சாளர் நாதன் எல்லிஸும் அணியில் இல்லாதது சிஎஸ்கே அணியின் பந்துவீச்சை பலவீனமாக மாற்றி உள்ளது. தென் ஆப்பிரிக்க இளம் வீரர் டெவால்ட் பிரேவிஸ் பக்கவாட்டு தசைப்பிடிப்பு காரணமாக முதல் 3 போட்டிகளில் விளையாடவில்லை. டெல்லி அணிக்கு எதிரான போட்டியில் அவர் மீண்டும் களமிறங்கினாலும், அணியின் ஒட்டுமொத்த பலம் இன்னும் முழுமை பெறவில்லை.
ஏற்கனவே நட்சத்திர வீரர் தோனி காயம் காரணமாக ஆரம்ப கட்டப் போட்டிகளில் பங்கேற்கவில்லை. அடுத்து மும்பை இந்தியன்ஸ் அணிக்கு எதிராக அவர் ஆடுவார் எனக் கூறப்பட்டாலும் இன்னும் உறுதியான தகவல் கிடைக்கவில்லை. இப்படி அணியின் ஒவ்வொரு முக்கிய வீரரும் அடுத்தடுத்து காயத்தால் முடங்குவது சிஎஸ்கே-வின் பிளே ஆஃப் வாய்ப்பை கேள்விக்குறியாக்கியுள்ளது.


Click it and Unblock the Notifications