அபுதாபி: 2026 ஐபிஎல் மினி ஏலம் இன்று (செவ்வாய்க்கிழமை) அபுதாபியில் நடைபெறவுள்ள நிலையில், முன்னாள் ஆர்சிபி வீரரும், ஆஸ்திரேலிய ஆல்-ரவுண்டருமான கேமரூன் கிரீனை வாங்க சென்னை சூப்பர் கிங்ஸ் (CSK) அணி ரூ.20 கோடி வரை செலவு செய்யத் தயாராக இருக்கும் என்ற கணிப்புகள் எழுந்துள்ளன.
இன்று நடைபெறும் ஏலத்தில் அதிக விலை போகக்கூடிய வீரராக கேமரூன் கிரீன் பார்க்கப்படுகிறார். மும்பை இந்தியன்ஸ் மற்றும் ஆர்சிபி அணிகளுக்காக விளையாடியுள்ள இவர், முதுகுப் பகுதியில் ஏற்பட்ட காயம் காரணமாகக் கடந்த சீசனில் விளையாடவில்லை. தற்போது ரூ.2 கோடி அடிப்படை விலையில் ஏலத்திற்குத் திரும்பியுள்ளார்.

ஜியோ ஹாட்ஸ்டார் நடத்திய ஒரு 'மாதிரி ஏலத்தில்' (Mock Auction), கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி சார்பாகப் பங்கேற்ற ராபின் உத்தப்பா, கேமரூன் கிரீனை என்ன விலை கொடுத்தேனும் வாங்கத் துணிந்தார். இறுதியில் அந்த ஏலத்தில் ரூ.30.5 கோடிக்கு கிரீனை கேகேஆர் வாங்கியது.
உண்மையான ஏலத்தில் கேகேஆர் அணியிடம் தான் அதிகபட்சமாக ரூ.64.3 கோடி கையிருப்பு உள்ளது. அதனால் அவர்கள் கிரீனை வாங்கக் கடும் போட்டி போடுவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இதுகுறித்து உத்தப்பா பேசுகையில், "சிஎஸ்கே அணியிடமும் இரண்டாவது அதிகபட்சமாக ரூ.43.4 கோடி கையிருப்பு உள்ளது. அவர்கள் ஒரு மிடில் ஆர்டர் ஆல்-ரவுண்டரை நிச்சயம் குறிவைப்பார்கள். மாதிரி ஏலத்தில் நான் 35 கோடி வரை செல்லத் தயாராக இருந்தேன்.
ஆனால், உண்மையான ஏலத்தில் சிஎஸ்கே அணி கேமரூன் கிரீனுக்காக ரூ.20 கோடி வரை செல்லும் என்று நான் நினைக்கிறேன். அதற்கு மேல் சென்றால், மற்ற இடங்களை நிரப்பப் பணம் இருக்காது என்பதால் அவர்கள் பின்வாங்கலாம். கிரீன் வந்தால் 3-வது இடத்தில் பேட்டிங் செய்யச் சரியாக இருப்பார்" என்று கணித்துள்ளார்.
மேலும் இந்த மாதிரி ஏலத்தில், சிஎஸ்கேவின் முன்னாள் வீரர் மதீஷா பதிரானாவை ரூ.13 கோடிக்கு உத்தப்பா (கேகேஆர் அணிக்காக) வாங்கினார். "எங்களுக்கு ஒரு டெத் பவுலர் தேவை. பதிரானா சமீபத்தில் ஃபார்மில் இல்லாவிட்டாலும், கேகேஆர் பயிற்சியாளர்கள் அவரை மாற்றிக்காட்டுவார்கள்" என்று அவர் கூறினார்.
இன்று நடக்கும் உண்மையான ஏலத்தில், கேமரூன் கிரீனை சிஎஸ்கே தட்டித் தூக்குமா? அல்லது பணம் படைத்த கேகேஆர் முந்திக்கொள்ளுமா? என்று பார்க்கலாம்.