அபுதாபி: ஐபிஎல் 2026 ஏலத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் (CSK) அணி நிர்வாகம் எடுத்த ஒரு முடிவு, அந்த அணியின் ரசிகர்களை அதிருப்தியில் ஆழ்த்தியுள்ளது. சிஎஸ்கே அணிக்காக கடந்த காலங்களில் ஆடி வந்த நியூசிலாந்து வீரர்களை, அடிப்படை விலைக்குக் கூட வாங்காமல் அணி நிர்வாகம் கைவிட்டுள்ளது.
கடந்த சீசன்களில் சிஎஸ்கேவின் ஓப்பனிங் பேட்ஸ்மேனாக இருந்த டெவோன் கான்வே மற்றும் இளம் ஆல்-ரவுண்டர் ரச்சின் ரவீந்திரா ஆகியோர் இந்த ஏலத்திற்கு முன் விடுவிக்கப்பட்டிருந்தனர். இவர்கள் மீண்டும் சிஎஸ்கே அணியில் இணைவார்கள் என்று ரசிகர்கள் எதிர்பார்த்தனர். குறிப்பாக ரச்சின் ரவீந்திராவை சிஎஸ்கே வாங்கும் என்ற எண்ணம் இருந்தது.

இந்த இரு வீரர்களுக்கும் அடிப்படை விலையாக ரூ.2 கோடி நிர்ணயிக்கப்பட்டிருந்தது. ஏலத்தில் இவர்களது பெயர் வந்தபோது, சிஎஸ்கே நிர்வாகம் ஏலம் கேட்கும் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், சிஎஸ்கே மட்டுமல்ல, எந்த ஒரு அணியும் இவர்களை வாங்க முன்வரவில்லை. இதனால், சிஎஸ்கேவின் முன்னாள் நட்சத்திரங்கள் இருவரும் விலை போகாத வீரர்கள் பட்டியலுக்குச் சென்றது சோகத்தை ஏற்படுத்தியது.
சிஎஸ்கேவின் இந்த முடிவுக்குப் பின்னால் இருந்த காரணம், அவர்கள் ஆஸ்திரேலிய ஆல்-ரவுண்டர் கேமரூன் கிரீனை குறிவைத்ததுதான். கிரீனை வாங்குவதற்காகச் சிஎஸ்கே நிர்வாகம் கொல்கத்தா அணியுடன் கடுமையாகப் போட்டி போட்டது.
சுமார் 25 கோடி ரூபாய் வரை கிரீனுக்காகச் செலவழிக்கத் தயாராக இருந்த சிஎஸ்கே, இறுதியில் கேகேஆர் அணி ரூ.25.20 கோடிக்குக் கேட்டதும் பின்வாங்கியது. 25 கோடி வரை செல்லத் தயாராக இருந்த அணி, தங்கள் பழைய வீரர்களுக்கு 2 கோடி கொடுக்கத் தயங்கியது ஏன்? "விசுவாசத்தை தூக்கி எறிந்துவிட்டார்களா?" என்று ரசிகர்கள் சமூக வலைதளங்களில் கொந்தளித்து வருகின்றனர்.
குறிப்பாக, ரச்சின் ரவீந்திரா திறமையான வீரராக இருந்தும் அவரை எடுக்காதது குறித்து ரசிகர்கள் ஆதங்கத்தை வெளிப்படுத்தியுள்ளனர். ஒருவேளை சிஎஸ்கே அணியில் அவருக்கு நிலையான பேட்டிங் இடம் இல்லாதது காரணமாக இருக்கலாம் என்றும், அதனால் தான் அவரைத் தக்கவைக்கவில்லை என்றும் ஒரு தரப்பினர் கருத்து தெரிவிக்கின்றனர். எது எப்படியோ, "சிஎஸ்கே ஒரு குடும்பம்" என்று சொல்லிக்கொண்டே, பழைய வீரர்களை நட்டாற்றில் விட்டது சில ரசிகர்களுக்கு ஏமாற்றத்தை அளித்துள்ளது.