சென்னை: 2026 ஐபிஎல் சீசனுக்கான வீரர்கள் பரிமாற்ற (Trade) பேச்சுவார்த்தைகள் சூடுபிடித்துள்ள நிலையில், சென்னை சூப்பர் கிங்ஸ் (CSK) மற்றும் ராஜஸ்தான் ராயல்ஸ் (RR) அணிகளுக்கு இடையே ஒரு மெகா பரிமாற்றம் நடக்க உள்ளது. இதன்படி, ராஜஸ்தான் அணியின் கேப்டன் சஞ்சு சாம்சனைப் பெறுவதற்காக, சிஎஸ்கே தனது நட்சத்திர ஆல்-ரவுண்டர் ரவீந்திர ஜடேஜாவை விட்டுக்கொடுக்கத் தயாராகி வருவதாகக் கூறப்படுகிறது.
இந்த செய்தி சிஎஸ்கே ரசிகர்களிடையே பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ள நிலையில், இது ஒரு "மாபெரும் தவறாக" முடியும் என முன்னாள் கிரிக்கெட் வீரர் பிரியங்க் பஞ்சால் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி நிர்வாகத்தை எச்சரித்துள்ளார்.

குஜராத் அணியின் முன்னாள் வீரரான பிரியங்க் பஞ்சால், தனது X சமூக வலைதளப் பக்கத்தில் இதுகுறித்துக் கடுமையான கருத்தைப் பதிவு செய்துள்ளார்.
அதில், "சஞ்சு சாம்சனுக்காக ஜடேஜா பாயை டிரேடு செய்வது, சென்னை சூப்பர் கிங்ஸ் அணி செய்யக்கூடிய மிகப்பெரிய தவறுகளில் ஒன்றாக இருக்கலாம். தங்களது லெஜண்ட்களை எப்போதும் தக்கவைத்துக்கொள்ளும் கொள்கைக்குப் பெயர் பெற்ற ஒரு அணி, இத்தனை ஆண்டுகளாக அணிக்கு அயராது உழைத்த, பல கோப்பைகளை வென்று தந்த, அணியின் அடையாளமாகத் திகழும் ஒரு வீரரை இப்படி விட்டுக்கொடுக்கக் கூடாது" என்று அவர் காட்டமாகத் தெரிவித்துள்ளார்.
இதுவரை வெளியான தகவல்களின்படி, ராஜஸ்தான் ராயல்ஸ் அணி சஞ்சு சாம்சனை சிஎஸ்கே-வுக்குக் கொடுத்துவிட்டு, அதற்குப் பதிலாக ரவீந்திர ஜடேஜா மற்றும் தென்னாப்பிரிக்காவின் இளம் அதிரடி வீரர் டெவால்ட் பிரெவிஸ் அல்லது இங்கிலாந்து வீரர் சாம் கரனை தங்கள் அணிக்குக் கொண்டுவர முயற்சிப்பதாகக் கூறப்படுகிறது.
ஒப்பந்த மதிப்பின்படி, ஜடேஜா மற்றும் சாம்சன் இருவருமே தலா ₹18 கோடி மதிப்புடைய வீரர்கள். ஆனால், டெவால்ட் பிரெவிஸ் கடந்த சீசனில் காயம் காரணமாக விலகிய வீரருக்குப் பதிலாக வெறும் ₹2 கோடிக்கு சிஎஸ்கே அணியில் இணைந்தார். ஏலத்தில் எடுக்கப்படாவிட்டாலும், கிடைத்த வாய்ப்பில் தனது அதிரடியால் அனைவரையும் திரும்பிப் பார்க்க வைத்தார். வெறும் 6 இன்னிங்ஸ்களில் 180 ஸ்ட்ரைக் ரேட்டில் 225 ரன்களைக் குவித்தார்.
தற்போது அவரை ஏலத்தில் விட்டால், ₹2 கோடியை விடப் பல மடங்கு அதிக விலைக்குப் போவார் என்பது நிச்சயம். எனவே, இந்த டிரேடில் ஜடேஜாவுடன் பிரெவிஸையும் சிஎஸ்கே இழப்பது பெரும் பின்னடைவாகவே பார்க்கப்படுகிறது. பிரெவிஸ்-ஐ கொடுக்க சிஎஸ்கே விரும்பாத நிலையில் சாம் கரனை ராஜஸ்தான் அணிக்கு அனுப்ப அதிக வாய்ப்பு உள்ளது.
சிஎஸ்கே அணியின் இந்த யோசனைக்குப் பின்னால் உள்ள முக்கிய காரணம், கேப்டன் மகேந்திர சிங் தோனியின் ஓய்வுதான். 2026 சீசனுக்குப் பிறகு தோனி விளையாடுவது சந்தேகமே. எனவே, அவருக்குப் பிறகு விக்கெட் கீப்பிங் மற்றும் கேப்டன் பொறுப்பை ஏற்கக்கூடிய ஒரு திறமையான வீரர் அணிக்குத் தேவை. கேரளாவைச் சேர்ந்த சஞ்சு சாம்சன், தமிழகத்திலும் பிரபலம் என்பதால், அவர் சரியான தேர்வாக இருப்பார் என சிஎஸ்கே நிர்வாகம் கருதுவதாகத் தெரிகிறது.
மறுபுறம், ராஜஸ்தான் அணிக்கு ஜடேஜாவின் வருகை மேற்கு இந்தியப் பகுதிகளில், குறிப்பாக குஜராத்தில், பெரும் பலமாக அமையும். மேலும், சஞ்சு சாம்சன் (30 வயது) தனது உச்சகட்ட ஃபார்மில் இருந்தாலும், ரவீந்திர ஜடேஜா (37 வயது) அனுபவத்தில் சிறந்தவர். அவரது அனுபவம் ராஜஸ்தான் அணிக்குக் கைகொடுக்கும் என அந்த அணி நம்புகிறது.